அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

நிலம் வாழப் பிழைத்தல்

தற்போதைக்கு,
காற்று மட்டும் பன்மைப்பட்டிருக்கின்றது.
அவை நுகர்வீச்சமிருந்து சொல்லமுடிகின்றது,
அவை கடந்ததேசப் பன்முகப்பார்வையை.

வீசும் தேசத்திசை பொறுத்து
அவற்றின் நாற்றம் மாறிக்கொள்கின்றது.
ஒவ்வொரு தேசக்கொடிக்கறைக்கிழிவும்
காற்றின் வீச்சத்தின் ஊற்று.

தேசக்கொடிகள் மட்டும்தான்
தினசரி தோய்க்கப்படுவதில்லை.
அவை தழுவு காற்றின் துயர்களில்
நிணங்களின் உண்மை நெடி கற்று,
பேசமுடிகின்றது,
எத்தேசத்து மனிதரதும்
நேற்றைய சரித்திரம்.

மீதிப்படி,
எல்லாநாட்டு மனிதர்களின்
சொற்களும் முகங்களும்
ஏடு பொறித்த அட்க்ஷரங்களும்
இனிப்பில் தோய்ந்தனவும்
சிரிப்பில் நனைந்தனவும்தான்

இனிவரும்நாள்,
நீள் மூக்குள்ள பிள்ளை மட்டும்
நிலம் வாழப் பிழைக்கும்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home