அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

கூட்டைப் பற்றிக் கூறிக்கொள்தல்

தமிழைப் பழித்தவள்
தாயேயானாலும்
தலை வாங்காது
விடமாட்டேனென்று
தம்பட்டம் அடிக்கமாட்டேன்.

தமிழ் எனக்குத் தலைப்புத்தான்;
ஆனால், தாய்தான் எந்தன் தலை.

இனி,
ஒரு சிறு கூட்டிழி
இறகுப்பறவையைப்
பற்றிப் பேசுவேன்.

~~~~~

கம்பிக்கூட்டுக்குட் போட்டுக்
கிளி வளர்க்கும் கலையல்ல
என் தமிழ் மொழிப்பற்று.

இயற்கை இறக்கை கொடுத்ததிலே
கிளிக்கதற்குத் தேவை ஒன்றுண்டு
என்பதென் இறுகிய நம்பிக்கை.

சிறகுகளின் அடிப்புப் பறப்பு மட்டும்தான்
பறவையென்று சுட்டுமென்றபின்னாலே
குட்டிக்கூண்டுக்குள் குந்தவைத்து,
"நான் ஒரு பறவை வளர்க்கின்றேன்"
என்கின்ற பட்டறிவை என்ன சொல்ல?

எவர்க்கும் பொதுவான எல்லைசெத்த வானில்
எதிர்க்கப்பறக்கும் எந்தக்குருவியைப் போலும்
எல்லாக் குருகுகளையும் அடிக்கவிடுங்கள்
அவற்றின் சிறகு அலை.

கூட்டைப் பற்றிக் கருத்துக்கொள்ள
உள்ளே கூனிக்கிடக்கும் குருவிக்கு
மட்டும்தான் உண்டு தனியுரித்து.
குடியிருகூட்டைக் கொண்டவர்
குருகுக்காய் பேச முடியாது.
கிளி யலகு கொத்தியுடைக்கமுன்னர்
வெளிக் கூட்டுப்பூட்டைத் திறவுங்கள்.
வீட்டைத் துறப்பதும் கடல் கடப்பதும்
வெளிக் கிடப்பதும் தொலை பறப்பதும்
சிட்டுக்குருவியின் தற்சிந்தையின் விருப்பு;
ஆனால்,எந்த எதிர்ப்புக்குருவிக்காயும்
ஓ ரடை யிரும்புக் கூட்டுக்காரன்
என்றைக்கும் கொடுக்கமுடியாது
இழிந்த தொனியிற்கூட
ஏதும் இருப்புக்குரல்.

ஓரினத்தின் இறைமை என்பது,
திகம்பரர்கள் கூட்டம்போட்டு,
கவட்டிடைக் கோவணதாரிகளுக்கு
சீனத்திற் பட்டு நெய்வதெப்படி என்று
கற்றுக்கொடுக்கும் வித்தையானதுதான்
வேதனையின் விந்தை.

சிட்டுக்குருவிகட்காய்ப் பேசமுன்னர்
தம் பெருவிரல் அழுத்தித் தவிக்கும்
சிறுமனிதர்கட்காய்ப் பேசவேண்டும்
பெருமனிதர்.

அதன் வாலுக்கும் வாக்கு அலகுக்குமிடையே
விரிந்து வாழ்தலெல்லாம் கிளியின் தனிவாழ்க்கை.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home