அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

கழுவேறல்

கடலிற் தொலைந்தவரைக் கைகழுவி விட்டுவிட்டோம்; இன்று,
எடுக்காத முத்துக்களை இருந்தோர் பங்கிட்டோம்.
எல்லை தெரியமுன் இறந்து போனதெம் பாதை;
வெறும் நாக்கு நெளிவுகளில் நகர்வதெம் நிழற்றேசம்.

இவர்களுக்கும் அவர்களுக்கும் இடைப்பட்ட தென் பூமி,
ஆலை அம்மிக்கும் அடிக்கும் இடைப்பட்ட செவ் விரும்பு.

நாய்ப்பட்ட நாளுக்கும் பேய்ப்பட்ட இருளுக்கும் கோபக்
கால் முளைத்தடிக்க, தோல் தேய்வுற்ற கல் வாழ்க்கை.

தூரத்தே யிருந்து துயர்ப்பட்டால் போலி;
தூக்கத்தும் துக்கித்தால் துளிர்ப்பதோ வியலாமை.
திரிசங்கு, அந்தரத்தே சொர்க்கத்தைப் பெற்றான்; ஈடாய்த்
தொங்கு நரகெனக்கு ஒன்றைத் தங்கவிட்டான்.

செஞ்சூரியனோடு வாளிட்டுத் தர்க்கித்தோரே
காளாஞ்சிச்சொற்களை வாளாது விற்பதனால்,
தெருக்கோயிற் தேங்காய்ச்சொட்டுப் பொறுக்கியன் நான்
சொற்களை விதைத்த கை சோர்ந்து கட்டையாகி விட்டேன்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home