அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

வகிட்டுக்கோல்

இதுவரை நாள் என்ன செய்தேனென்று
இனியாவது என்னைக் கேள்;
எங்கே என்பதையும் கூட,
இனி வரும் ஒரு கணம்
அறுத்துறுத்து
என்னிடம் வருத்திக் கேள்.

சுடுநீர் கொட்டுமொரு வேளை,
குளியற்றொட்டி நீர்த்துளை மூடும்
கற்றை உச்சந்தலைமயிர்
உதிர்வை ஒரு வசவிட்டுச் சபிக்கமுன்
என்ன செய்தேன் என்பதை
எதிர்த்துக் கேள்
என்முகம் முன்னே.

பெருங்கடலைக் கரமடங்கு பையுக்குட் பொத்தி வைத்தலைவிட்டு,
தேங்கிய ஆறுகளில் வெகுதீவிரமாய், நீளக்கை உராய்ந்து காந்திட
வீண் புண்கோடுகளை இழுத்துக்கொண்டலைந்தேன்
இருபுறமும் சங்கிலியாய்.

சரிவுருளும் வளையத்துள் எதிர்ப்புறமாய்
உடலினிலே ஒளிக்கவும் ஒன்றுமின்றி
உலுப்பியுலுக்கி ஓடித்திரிந்திருந்தேன்;
காற்றைச் சாடுதலைக் கை வீசோலைக்கீற்றொலியில்,
தனித்துக் களித்திருந்தேன் அகத்துள்ளே நான்.

இயலுமன்றால், இனி இங்கே என்னிடம் ஊர்ந்து வா.
இறந்த காலம் பற்றி எதையும் சொல்லக் காத்திருப்பேன்
திறந்த மனதுடன் நான் - தேவையென உனக்குப் பட்டால்.

ஆனால், நெரிந்த புருவத்தை நீட்டி நேராக்கி,
சென்றகாலத்தைக் கந்து பிரிக்கச்சொன்ன
வகிட்டுக்கோல் கை வசப்பட்டு வருதற்காய்
என்ன எண்ணினேன் என்று மட்டும் கேளாதே.

தடித்த இடி தொடுத்துப்படரமுன் வால் வெட்டித்துடித்து
வீச்சுமின்னல் பாய்ச்சல் ஒளிக்கமுன்னர்
அதன் தடிப்பம் வளப்பம் பிடித்துக் குறிக்கச்சொன்னால்,
என்ன செய்வாய் என்று மட்டும் கேட்டுக்கொள் உன்னை
- எனக்கொரு சொடுக்கு வகிட்டுக்கோல்
சொக்க வாலாயப்பட்டதை நினைக்கும்போதெல்லாம்.

மீதிப்பட,
துறந்த காலம் பற்றி எதையும் திறந்து சொல்லக் காத்திருப்பேன்
பரந்த உளக்களத்துடன் நான் - தேவையென உனக்குப் பட்டால்.

'01 ஓகஸ்ட், 11

0பின்னூடுகை:

Post a Comment

<< Home