அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

இறுக்கம்

எல்லாமே இறுக்கமாக இருக்கிறன.

இரவு;
நிலவு;
நினைவு;
அசைவு;
வழமை;
நிலைமை....
எல்லாமே பொல்லாப்பாய்
தமக்குட் புழுங்கிப்போய்
நடப்பு உலகம் அலைகிறது
இடுப்பில் இடுக்கிக்கொண்டு
எரியடுப்பின் காளவாய்.

எதிர்த்த நிமிடத்திலே
எகிறி எதேச்சைப்பட்ட
ஏதேனுமொரு காரணமாய்
எவரேனும் எண்ணெய்த்துளி
எரிகொள்ளிக்குள் அரிக்கச்
சொடுக்கக்கூடுமென்றாகி
பிளவு எல்லாமே இறுக்கமாக
அடைத்துபோய்க் கிடக்கிறது
காலம்.

படர்ந்த நிறத்தோடு கூடி இப்போது
அடுத்தவன் முகத்திலே மதத்தையும் பதத்தையும்
பார்த்துக்கொண்டும் அலைகிறது
வெடிகடுப்புடன் தடித்துப்போய்,
தரிதேசம்....
....உனதும் எனதும் உலகெல்லாத்தினதும்தான்

சிகை சீவி முடிக்கமாட்டேன் என்பதாய் விடைத்தலைவாள் ஒருத்தி
தொடை அடித்துக் குடிப்பேன் குருதி என புடைத்துப்போனவன் இன்னொருத்தன்
இதற்குள் இழுத்ததிற் கழன்றது எனக்கொரு நகை உனக்கொரு வகை
எனக் கலம் பிரித்துக்கொண்டோடும் களம் பிறிதெல்லாம் என்றாலும்கூட....

.... எனக்கேனோ,
மணச்சடங்கு முடிக்கா அணங்கொருத்தி
உணர்வு படிக்க முடியா திகைப்படு முகம்போல
உள்ளும் வெளியும் உறைந்துலாவும் பொழுதும்
உலகெல்லாம் உள்நிழலுள்ளாகியடுங்கி
பொய்யடக்கமாய் எல்லாம் சரியோ
என்றசங்கச் சிந்தை நடப்பெல்லாமே
வழக்கப்படுத்திதென் றிறுக்கமாய்
இருக்கும் இருப்பு இன்று.

09/24-'01

0பின்னூடுகை:

Post a Comment

<< Home