அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

* தலைப்பில்லாக்கனவு.

எனக்கொரு கனவுண்டு;
இனியரு நாள்
என் நாடும் கொடிபிடித்து
கிழக்குத்தீமோர் போல்
ஒலிம்பிக்கில் நடக்கும்.

இன்னொரு நாட்டில்
ஒளிந்தோடிப்போன என்
இனிவரு தலைமுறையும்
இறந்து போயிருக்கலாம்;
ஆனாலும் யாருக்கும் அடங்காது
வரும் அப்பெரும் பொழுது.

~~~~~

அந்நாள் அந்நாட்டில்,
தீபத்தைத் தாங்கியோடுவாள்
ஓரிள மங்கை,
இந்நாள் காடுறையும் அன்னாளின்
பின்னால் பின்னாள் வந்தாள்.

உடைசற்படகுகளில் ஓயாமற்
கடல்கடந்து துடித்துவலிக்கும்
துயர்மனிதர்களின் குழந்தைகள்
துடுப்புவலித்தலிலே வெகுதூரம்
முன் கடப்பார்கள்.

என்றாவதொரு நாள்,
எரிந்த நிலமிருந்து எழுந்துவரும்,
வாழ்தலுக்கும் கொல்தலுக்கும்
வழிபட்ட துப்பாக்கி,
வேடிக்கை விளையாட்டில்
வெடித்து வெல்லப்பிடிக்கும்
வல்லதொரு தலைமுறை.

அன்று இழியும் எந்தத்தோல்வியும்கூட
அந்நாளை அடைந்தோம் நாமென்ற
வெற்றீயை அறைகூவித்தான் அலறும்#

~~~~~

அடங்காத தினசரிக்கனவுக்கு மட்டும்
விழித்திரையைத் திறந்து விடுகின்றேன்.
அது எமது நிலக்கதைகளுக்கு
காலவேர் வைக்கும் கருவி.

அதனால்,
நினைவுகளீன் நீர்ப்பட்டு
நீர்க்காது எனக்கிருக்கும்
இன்னும் நிறைந்து
நீங்காத கனவுகள்
பல விளைந்து.

~~~~~

எனக்கொரு கனவுண்டு;
இனியரு நாள்
பாலைப்பலஸ்தீனம் போல்
என் சுடுநாடும் ஒரு கொடிபிடித்து
தலைநிமிர்த்தி ஒலிம்பிக்கில்
குளிர்காஷ்மீருடன் கூட நடக்கும்.


* இ·து எந்தவிதத்திலும் கவிதையோ கதையோ சிறுகட்டுரையோ அல்ல;
இன்றைய நாளினை நினைவிலே வைத்துக்கொள்ளமட்டும்
எழுதப்பட்ட கருத்துப்பரப்புகை மட்டுமே

#"My country did not send me to Mexico City to start the race. They sent me to finish the race."
- During 1968 Mexico Olympics, said by the badly injured Tanzanian runner John Stephen Akhwari, who staggered into the stadium more than an hour behind the first-place winner.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home