அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

ஒரு தனிமனிதனின் கதையை மீண்டும் ஒருமுறை பேச வருகின்றேன்

ஒரு தனிமனிதனின் கதையை
மீண்டும் ஒருமுறை பேச வருகின்றேன்.
அவனுக்காகவல்ல, எனக்காக.

முகங்களைப் படைத்ததைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள்.
எவருடையதை?
அவனுடையதையா? அல்லது உங்களுக்குத் தெரிந்தவற்றை மட்டும்தானா?
அழுகியவற்றினைப் பற்றி மட்டும் ஆட்காட்டிவிரல்களை நீட்டிக்கொண்டிருக்கின்றீர்கள்.
நும் விரல்கள் மட்டுமென்ன விதிவிலக்கா?

கவிஞர்களைப் பற்றியா பேசிக்கொண்டிருந்தோம்,
அல்லது கவிதைகளைப் பற்றியா?
வலைஞர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்போமா,
இல்லை, அவர்கள் தேக்கிய மச்சங்களைப் பற்றியா?
நீங்கள்தான் சொல்லவேண்டும்.

அழுக்குகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள்;
அறிந்த அறிஞர்களைப் பற்றிய உங்கள் அறியாமையைச் சொல்லட்டுமா?
என்ன சொன்னீர்கள்?
கவிதைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோமென்றா?
கழுகுகளைப் பற்றிக் கக்கத்திருத்தி, கொண்டைப்பூதடவும்
காக்கைக் கவிதைகளைப் பற்றிச் சொல்லட்டுமா?

மரபுகளைப் பற்றிச் சொல்லப்போவதில்லை நான்;
சுவரறைகளின் அடைகதவுகளை உடைத்து வந்தவன் நானென்றாலும்,
மரபுகளையும் அதன் மகத்தான அறிஞர்களையும் மட்டும்
ஏதும் மாற்றாய்ச் சொல்லப்போவதில்லை,
ஒரு காலித் தெருநாய்,
நான்.

ஒன்றை மட்டும் சொல்வேன்,
"போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்"

வேண்டுமென்றால், இன்னொன்றையும் கூடவே,
"புழுக்களுக்கு வேண்டாம், புகழும் பொன்னாடையும்."

ஒரு தனிமனிதனின் கதையை
மீண்டும் ஒருமுறை எனக்காகப்
பேச வருவேன்,
நான் இறக்கும்வரைக்கும்,
அல்லது
அவன் இதயம் பிளக்கும்வரை.

அதுவரை,
வாருங்கள் கவிதைகளை மட்டும் பேசிக்கொண்டிருப்போம்,
கவிஞர்களை விட்டுவிட்டு,
இழந்த என் நண்பர்களின் இழவுச் செலவுக்கணக்கினிலே.

'00 ஜூன் 29

0பின்னூடுகை:

Post a Comment

<< Home