அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

எப்படி எதிர்கொண்டீர்?

உங்களை,
இன்றைக்கு நிமிண்டும்
நீங்கள் நுழையாச்
சென்ற கணங்களை
எப்படி எதிர்கொண்டீர்?

இலக்கிய வகுப்பறைமாணவனென்றிராது,
காப்காவின் உருமாற்றத்தை உணர்கையில்,
கசம் கஷ்டம்தரக் கண்டுகொள்ளாமல், செத்தபின்,
கல்விச்சிறைக்கூடத்துக்குக் கட்டியிழுத்துவந்த
அந்த முதற்கணத்தை.......

குழந்தையின் கடற்கரைச்சித்திரத்துக்கு,
ஒற்றைத் தென்னை வரைகையில்,
பிறவிச்சிற்பியருவன்,
தேவாலயச் சித்திரக்கோடிழுக்க, உபத்திரம் தாங்காது
ஒப்புதல்தந்ததோர் அற்புதக்கணத்தை.....

பொதுவுடமைக்கட்சிக்குழு
உறுப்பினர் அட்டையைவைத்துக்கொண்டு
'உடைந்தது சோவியத்து ஒன்றியம்' என்றறிந்தபோது,
மென்ஷிவிக்கை போல்ஷ்விக் மேவிய ஆதிக்கணத்தை,
மெக்ஸிக்கோவில் ரொட்ஸ்கி வெட்டப்பட்ட தினத்தை.....

ஆள்தாங்கா ஆரம்பப் புத்தகச்சுமையை
ஐந்துவயசுக்குட்டிக்குழந்தை முதுகேற்றியபோதில்,
சொந்தக்குழந்தையை கண்டுகொள்ளாமல்,
ரூஸோ 'எமிலி' எழுதப் புக்கிய
இறந்த கணத்தை....

கையிற் பீய்ச்சிய குழவியின் பிருஷ்டம் துடைக்கையில்,
பிள்ளைக்கறி படைத்த இளையான்குடியின்
எல்லையற்று நீண்ட அந்தக்கணத்தை,
வாழைக்குப்பின்னாலே, வாய்நுரைதள்ளக்கிடந்த
அப்பூதிப் பிள்ளைப் பிணத்தின் பெருங்கணத்தை...

தடம்காண்-தரவுச்செய்மதி
அட்லாஸை விட்டுப்பிரிந்த விடிபொழுதில்,
தான் சொன்னதை சொல்சொல்லாய் வாங்கித் தின்று
தன்னைப் பெரும்பொய்யென்று சொல்லிக்கொண்ட
கிழட்டுக்கலிலியோவின் குருட்டு இருட்கணத்தை....

.....மனிதத்தின் மற்றப்புறத்தை,
எம்மவர் இழைத்த மறுமருவை
எப்படி எவ்விரலும் எடுத்து நிமிண்டாமல்,
வருகவென்று கைவிரித்துக் கட்டிக்கொண்டீர்,
ஒப்பில்லா நட்பு எம்மதென்று உரக்கச்சொல்லிக்கொண்டே?

'00, ஜூலை 01

0பின்னூடுகை:

Post a Comment

<< Home