அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

மார்ச் 08 (ஒரு தரைதட்டும் உரைவீச்சு)

மன்னிக்கவேண்டும் ஆங்கிலத்தில் மாதம் மார்ச் என்றதற்கு,
தமிழுக்குத் திகதி ஏதென்று தெரியாதெனக்கு,
ஏன் இந்த முட்டாள் பெண்கள் இத்தினம் தம்
பெருமைத்தினம்
என்று கொண்டாடிக்கிடக்கிறார் என்பதுபோல்.

இல்லை! இல்லை! என் சொல்லலில் ஏதும் தவறில்லை!
ஆத்திரமாயில்லை; ஆயினும்,
அவதானித்துக் கவனமாகவே சொல்கிறேன் காத்திரமாய்,
<இத்தினம் கொண்டாடும் முட்டாள் பெண்கள் எல்லோரும்>
அல்லது
<இத்தினம் கொண்டாடும் பெண்கள் எல்லோரும் முட்டாள்கள்>.

ஆண்மேலாதிக்க சேற்றே அமிழ்ந்திருந்து
அழுக்குமலம்தின்னு கிழப்பன்றி என்றென்னை ஏசுவதில்
ஏதும் இங்கு மாறப்போவதில்லை,
எனக்கது பற்றியும் எள்ளளவோ இல்லை இலத்திரனளவோ
இல்லை கவலை.
கீழே சற்று விட்டுள்ளேன் வார்த்தை எழுத்து வெளி; வேண்டியதை
வேண்டுமளவில்
என்மேல் தொண்டை காறி வாய்வார்த்தை வேல் விட்டு
விசிறி வைத்து....
...., ஓய்வின் பின்,
மேல்வாசிக்கலாம் "ஆனால்,' இற் தொடங்கி.
நன்றி நண்பர்களே
(நண்பிகள் என்ற சொல்லே நம் தமிழில் இல்லை; எல்லாம் சமம்
நண்பர்களே).





ஆனால்,
விரலெடுத்து ஒரு சிறு கணக்கு பார்ப்போமா? வேண்டாம் மீளக்
கோபம்;
வெறுப்பேற்று விளைடாட்டில்லை; வெற்று வேடிக்கையில்லை.
உலக ஐக்கியநாட்டுச்சபைச் செயற்பட்டியலில்,
நீர் வழங்கலுக்கு ஒரு பத்தாண்டு,
வீடற்றோருக்கு ஓர் ஆண்டு,
ஊனமுற்றோருக்கு ஓர் ஆண்டு;
நல்லது இல்லையா? நமக்கும் சம்மதம்.
இதைவிட மகிழ்வுக்கு, இன்னொன்று கீழே.
ஆண்டுக்கு ஒருநாள் பெண்களுக்கு
ஆண்டைகளாய் கொடிதூக்கி ஆண்டிருக்க, இன்றைய
மார்ச்
எட்டு.
உங்கள் புன்னகை, பொலிவு பெரிதாய்த் தெரிகிறது.
இன்னொன்றும் சொல்லலாம், இன்னும் பாரிய பூரிப்புக்கு.
பெண்களென்ற பேதத்திலே, குறிப்பிட்ட வீதத்திலே
பொங்கிப்போட்டுத் தங்கமணிதல் மட்டுமின்றி, வாத்தியார் வேலை
தொட்டு சுங்கம், வரி,
வங்கி,
இன்னும் எத்தனையோ பிறர் தங்கிருவேலையெல்லாம் உங்களுக்கு
தந்திருக்கப்போகிறார்கள்.

நீரற்றோர் இயற்கையும் செயற்கையும் சேர்த்திருக்க,
உரிமை தடுக்கப்பட்டார் என்று சொல்லி வழங்கினார்
தொழில்வளர்ந்தோர்;
வீடற்றோர் பொருளின்றி,
வாழ் உரிமை தடுப்புண்டார் என்று கனிந்து இரந்தார்
பொருளுள்ளோர்;
ஊனமுற்றோர் இயற்கையின் பரிதாபத்துக்குரியர்
என்று வசதி ஆண்டொன்றுக்கு பண்ணி பின் அவர்
மறந்தார்
வலுவுடையார்;
இங்குதான் எனக்குண்டு,
~ என்னை மேலே திட்டிவைத்த பெண்பாலின நண்பர்களே~
இரு சிறு கேள்விகள்.
1. என்ன குறை உங்களிலே, இயற்கையிலே, அல்லது இடைப் புகு
செயற்கையிலே,
பின்னை தனியருநாளுமக்கு ஆக்கிவைத்துக்
கொண்டாட?
2. ஒற்றைநாள் உமக்குத்தந்து மிச்சநாள் தமக்கென்று கொண்டு உமை
முக்கண்கொண்டெரித்தாருக்கு
யார் தந்தார் இப்படியரு நாள் தம்
இஷ்டப்படி ஆக்குதற்கு
அவனியிலே சட்டம்?

இச்சிறு என் மூளை மூலை வக்கிரக் கற்பனைக் கேள்விகளுக்கு,
ஒரு கற்பிதமுமற்ற காத்திரப்பதில் நீர் தந்திருந்துபோகாவிடில்,
எத்துணையும் என்னளவில் மாற்றமின்றிச் சொல்லிக்கிடப்பேன்,
அத்தனை இத்தினப்பொறி பறக்கும் பெண்ணுரிமை பேச்சாளிகளுக்கும்,
பெட்டைப்பலசாலிகளுக்கும்
<ÿநீங்கள் மூளைச்சத்துத் தொலைத்த வெறுவெண்டைக்காய் விரல்
முட்டாள்கள்>

மட்டுமேயென்று
சத்தமிட்டு எட்டுத்திசையும் என் குறளிக்குரல்
எதிரொலித்துக்கிடப்பதற்கு என்றும்
நான்.

மார்ச் 08, 98 (22:55)

0பின்னூடுகை:

Post a Comment

<< Home