அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

மனிதர் விற்பனைக்கு சில மண்கூஜாக்கள்

வீட்டுக்குள் இப்போதெல்லாம் போதல் இயல்தலில்லை,
வாசல் வழி கால்முட்டியெல்லாம் முட்டித்தள்ளி வழிமறித்த
வம்புக்கூஜாக்கள்;
உள்ளே பொருள் நிரம்பி, உருகல் வழிந்து வெளித்தள்ளி,
பின்னே ஊர்ப்பெரியோர் எவர்க்காதல் காதலுடன் தம் கனவு வேண்டுதல்
முடித்திருக்க
விற்கக் காத்திருக்கும்
பொய் பொதி பெரும் மண்சுட்டுவைத்த சாமான்ய மானிடர்தம்
வாய்வெடித்த கூஜாக்கள்.

பொன்செதுக்கு கண்பறி பூவேலைப்பாட்டுக் கூஜாக்கள் காத்திருப்பதில்லை;
விற்றுப்போம்
விரைவாக,
முதன்முறை கண்சிமிட்ட மென்னகைத்த இளம்பெண்ணொருத்தி அரிசிப்பல்
புன்னகைபோல்.
ஆனால், தங்கக்கூஜாக்கள் செய்திருந்த மேன்மக்களெல்லாம்,
தங்களுக்கு ஏந்திவைக்க, தாங்குதரப்படு மேலோங்கு கூஜாக்கள் தேடி
திரிந்திருக்க,
பொன் செதுக்கு கண்பறி பூவேலைப்பாட்டுக் கூஜாக்கள்
புனையப்படுதலில்லை,
பொதுவாக என் நாட்டுக்குள்.

ஆயினும்,
வீட்டுக்குள் இப்போதெல்லாம் போதல் இயல்தலில்லை,
வாசல் வழி கால்முட்டியெல்லாம் முட்டித்தள்ளி வழிமறித்த
வம்புக்கூஜாக்கள்;
உள்ளே பொருள் நிரம்பி, உருகல் வழிந்து வெளித்தள்ளி,
பின்னே ஊர்ப்பெரியோர் எவர்க்காதல் காதலுடன் தம் கனவு
வேண்டுதல்
முடித்திருக்க விற்கக் காத்திருக்கும்
பொய் பொதி பெரும் மண்சுட்டுவைத்த சாமான்ய
மானிடரின் வாய்வெடித்த
கூஜாக்கள்.

சாமான்யர் தேவைகள்தேங்கு மண்கூஜாக்கள் நீரேந்தி நிற்காது;
நிலம் ஒழுக்கும் நிர்வாணமாய் நிராசைகள் துளியாய்
சப்பைக்கட்டுவிட்டுப்போய்
உருண்டோடி,
வெள்ளி வெளித்த பித்தளை வாய் இளிப்புக்கு இதோ நிகர்
நான் இங்கென்று;
அழகுப் பூக்கள் உள்வைத்திருக்க, அவையும் கருந் துருப்பிடிக்கும்;
மண்ணிட்டுச் செடி
நட்டுவைக்க,
மரமெங்கும் மானுட ஆசைகள் இலை மறைத்து மலர்ந்து வைத்திருக்கும்
மலமாய்
மணந்திருந்து.

அதனால்,
வீட்டுக்குள் இப்போதெல்லாம் போதல் இயல்தலில்லை,
வாசல் வழி கால்முட்டியெல்லாம் முட்டித்தள்ளி வழிமறித்த
வம்புக்கூஜாக்கள்;
உள்ளே பொருள் நிரம்பி, உருகல் வழிந்து வெளித்தள்ளி,
பின்னே ஊர்ப்பெரியோர் எவர்க்காதல் காதலுடன் தம் கனவு
வேண்டுதல்
முடித்திருக்க விற்கக் காத்திருக்கும்
பொய் பொதி பெரும் மண்சுட்டுவைத்த சாமான்ய
மானிடரின் வாய்வெடித்த
கூஜாக்கள்.

தங்கமுலாமிட்ட எந்தக்கூஜாவாயினும் இங்கு எவராலும் வாங்கப்படும்,
உள்ளே பின்னொரு நாள் ஆக்கு மண்ணிளித்தாலும் அச்சமில்லை,
அவசரமில்லை;
இன்றைக்கு
கண் ஒளி பட்டு கற்பு நான் என்பதுபோல் மின்னிக்
கிடப்பதினால்,
தங்கமுலாமிட்ட எந்தப் பொய் நிறைப் போலிக் கூஜாவும்
எவராலும் வாங்கப்படும் இங்கு;
என்னவிலை என்பது எமக்கொன்றும் கவலையில்லை, எமைச் சுற்றி
எங்கும்
மின்மினிப்பொய்யாய்
மினுங்கிப் பொறிபடுத்திக் கிடத்தலினால், தங்காது மங்கிப்போம்
பொய்மைத்
தங்கக்கூஜாவாயினும்,
வாங்கி வீட்டுள் வடிவென்று வைத்திருக்க, மேலும்
பல முலாமிடு முகப்படு ஏந்துகலங்கள் எதுவாயினும் இங்கு
வாங்குதலுக்குண்டு.
பொய்யெல்லாம் வெடித்து வெளித்துப்போகும் வேளையிலே வாசல்
வெளித்தள்ளி,
மற்றை மண்கூஜாவுடன் கூட்டிப்போட்டிருத்தல் கூடுமெமக்கு; கூடவே,
புதிதாய் பெரிதாய் வேறு பொன்பதிகூஜாக்கள்
வாங்கி வீட்டுள் தள்ளி வைத்திருக்கவும் வளமுண்டு மனமுண்டு,
இன்றைப்போல்.
மொத்தத்தில், இப்போது, வழியெல்லாம் மழைபட்டு மீள, ஆக்கு
மண்ணாகி,
புதிதாய் பிறிதொருகாலம் வேறாய்ச் சிறிதொருகலம் புனைந்திருந்து
சக்கரம் சுழன்றிருக்க,
பழியாய்க் கலிதீரக் காத்திருக்கும் எண்ணறு மண்வனைகூஜாவுள்
எது முன்னே பொன்பதி போலி, எது நிஜந்தனைச் சொல்லி
நின்றது நேர்மையாய்
வெளிநிலந்தனில்
என்றறியாவிதம் கலந்து எங்கெங்கனும் என்வீட்டு முன்றலிலே, நாட்டு
வீதியிலே
கூட்டமாய்
எல்லாமே பொய் பெய்யுறு மெய் போலியாய்ப் புனை
~ கொற்றோன் பின் ஏந்திப் பற்றாத நீர்படி பெருந்தீப்பந்தங்கள்
கணக்காக~
பூ மலர்த்தா பெரு மண்கூஜாக்கள் தாம் மலர்த்தியிருக்கும்
வெறுவாய் வான்நோக்கி மழை
பார்த்து.

98 மார்ச் 07, சனி 17:29

0பின்னூடுகை:

Post a Comment

<< Home