அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

மழைக்குருவி*

மழை,
கோடைப்பெருமழை
எனில்,
ஊழிப்பெருமழை,
பாரதிசொல்,
"சட்டச் சடவென் றெட்டுத்
திசை நொருக்கு வெறி மழை."
மழை நோக்கி, மனம்குளிர, நான்.
எங்கிருந்தோ என் திசை
அது நனைந்து, ஒரு குருவி;
தீர்த்தத்தலம் தேடிக் குளித்த,
கருங்குருவி யாத்திரீகன்.
சிலிர்த்த மயிர் கொண்டு,
சிறகுநீர் சிலும்பி விட்டு,
புழுவெட்டலகு உடற்கோதி,
வட்டக்குட்டிக்கண் என்விழி
விரட்டாதே,
விட்டுவிடு என இறைஞ்சி விறைக்க,
சிட்டு.
சின்னக்குருவி,
தங்கை,
வீட்டுமூலை, தன் பழஞ்செருப்புப்
பெட்டிக்குட் கண்டதுபோல்,
அங்கம் நடுங்கி நின்ற அவள்
உள்ளங்கையடங்கு குருவி.
(அதன் அங்கம் எதற்குமன்று
ஏது பங்கமும் செய்திலம் நாம்.)

"பிரிந்தவர் கூடினால், பேசலும் கூடுமோ?"

கண்ணது கண்ணோக்கி,
காதலர் களிப்புற்றதுபோல்,
வெறும் மண்ணது கதை மட்டுமின்றி,
மனக்கனங்களும் கணம் காற்றேகி,
பின்,
சொன்ன கண் மௌனித்து,
செல்வண்டி காண் பயணியென,
பிரளயமழை பார்க்க வெறித்து,
ஆடி அ·தடங்க,
தத்திப் பக்கம் நகர்ந்து வந்து,
தலை இடம் சாய்த்தெனைக்கண்டு,
பின் நிமிர்ந்து,
மீள,
வலம் நிலஞ் சாய்ந்தென்
அகம், முகங் காண
அவதானம் மிகக் கொண்டு,
பின்னது,
விரைந்தெழுந்தென் உதடணுகி,
குளிர் சிறகு முத்தந் தந்து,
"காத்திருக்கப் பெருமழையும் நிற்றல் கண்டாய்;
கலங்காதே, காலமும் அது போலே; கனியும்"
என்பது தன் கண் கருத்துரைத்து,
விர்ரென்று உயிர் கிளம்பிற்றென்று,
விண்ணது சென்றதுவே,
விந்தைமிகு அக்குருவி.

அதற்கும்,
எங்கோவொரு,
உடல் நைந்து நைந்திழைத்துப் பிய்ந்த
பஞ்சுமஞ்சக்கூடொன்றுவுண்டு - தன்
பிஞ்சுக்குஞ்சுடன் அஞ்சித் துஞ்சி,பின் பிழைப்பின்,
கஞ்சி குடித்தற்கு,
பிழைக்கப் பிறதேசம் போனோர் சொன்னது போல்,
தம் தமிழ் தழைக்க காடுறைந்தார் கண்டது போல்,
அல்லது,
உயிர் பிழைக்க இங்குறையும்,
உலகஞ்சிதறியோர் எனைப்போல.

என்றென் மழை நிற்கும்,
என் பறப்பு, அப்
(பிறப்புத்)தென் புலம் நோக்க?

-'97 ஆவணி, ஒரு கொட்டு மில்வோக்கி மழைநாள்.

*இன்று மழையுடன் என் துணை நின்ற ஒரு பெயர்தெரியாச்
சிறுகுருவிக்காய்..

0பின்னூடுகை:

Post a Comment

<< Home