அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

கிழவி

கிழவி;
தான் காணாப் போன நூற்றாண்டு விக்டோரியா
மகராணிக்காலத்தே போல் உடை அணிந்து ஒரு முது கிழவி,
நிற்பாள் என் வீட்டு மூலைக் கடை வாயில் கை நீட்டிப்
போவோர்க்கும் வருவோர்க்கும் போட்டுப்போ
சிறு வட்டக்காசு வாழ்தற்கு என்று வாய் கேட்டு;
விலகிப்போவார்கள்; விரைந்துபோவார்கள்;
ஒரு பணம் விசிறிப்போவார்கள்; கடும் கண்பார்வை கடாசியவரும்
உளர்; கண்டேன்.
'இழவே நகர்ந்திரு; இன்றென் முதற்பொழுது முகம் ஏன் தந்தாய்'
என்று ஏசிப்போம் எத்தரும் எத்தனையோ உளர்.
நான் போட்ட நேரமும் உண்டு; என் போதா நேரத்தே,
அவள் முகம் வாடல் பொறுக்கா என் உளம் வாடி
மறுபுற வாயில் புறமுதுகோட்டிப்போனதும் உண்டு. இல்லை என்று
சொல்லேன்;
நாளுக்கும் அங்கேதான் நிற்பாளோ, இல்லை
நாள் விடியத்தான் வந்து உண்ண இரந்திட்டுப்போவாளோ?
நான் அறியேன்; நம்பாடே ஒரு வழிக்கு நர்த்தனம் ஆடுவது.
இதற்குள் நானென்ன அவளுக்கு வக்காலத்து வாங்குவது?
எனினும், இத்தனை இரந்து பெறல் எத்தனை அரிசிக்காகும்
இன்னும் எத்தனை கொடு நாட்கணக்குக்காகும்
என்றெண்ணிப் பார்க்க மனம் கத்தி குத்திக் கிழியும்.
பெற்றவள் இவள் என்று பிள்ளைகள் இல்லைத்தானோ?
இல்லை, பிறந்தவரும் புதுப்பெண்டிர் மயக்கத்தே
விட்டுப் பெட்டி கட்டிப் போய்ப் பெறு உதரம் உதிரம்
மறந்தனரோ?
தத்தை பிறர்மனை பிள்ளைக்குக் கொடுத்தாரோ, பெறுதாய்தன்னை
வீதித் தரித்திரத்திற்கு விலைபேசி விட்டாரோ?
இப்படி பொலிவு செத்து நிற்பாள் என்றிவள் தான்
இளமை பொருள் வளம் பெற்றிரு காலத்தே தன்
வள்ளல் உள்ளம் நினைத்திருப்பாளோ?
ஆயினும், முன்பு பலர்க்கும் அன்பு, தான் கொள் பொருள்
கொடுத்து வாழ்ந்தாள் என்பது இன்றும் பேசும் அவள் செய்கை சில.
காலைக்கும் மாலைக்கும் தான் பெற்ற பிச்சைக்கும்
சிறிது சோளம் தாம் வாழ்தற்கு வந்துவேண்டு
புறாக்கட்குப் போட்டுக் களித்துப் பிறர்
போம்வீதி போர்க்களம் ஆக்கிப் போதல் கண்டு
பொருமும் பெரும் போக்குவரத்து, புறா எச்சம்,
வடிவு வாகனம் மேல் வீழ்ந்திடு அச்சம் கொண்டு.

இன்று காலைக்கு அவள் உடலம் வீதி கிடந்தது,
இரவுக்குப் போன ஒரு கால வாகனம் இரக்கம்
இறந்து இறைத்து விட்டுப்போனதவள் உயிர்.
முன்னைக்கு தன் மனைக்கு வந்தனைத்து மனிதர்க்கும்
வாரிக்கொடுத்திருந்தவள் வீதியிலே வேண்டா வீண் நிணமென
மணமெடுத்து கிடத்தல் அறியாது
விறைத்துக்கிடந்தாள் தன் இறுதிக் காலம் கொள்
கொல் வேதனை ம(¨)றந்(த்)திருந்து; தானியம் இட்டு
வளர்த்த
புறநாட்டுப் புறாக்கள் மட்டும் பொறுமை செத்து
குறுக்கோடி நெடுக்க நடந்து குழம்பிக் கூவும்.
பெற்ற பிள்ளைகள் வாகனத்தே, நேரம் போக்கும்
இவ்வுடல் நடைவீதி கிடத்தல் நம் முன்னேற்றத்திற்கு
இந்நாட்பொழுது என்று சத்தம் எழுப்பிப் போகும்.
என் அகத்தே அவள் முகத்தே ஏனோ,
வள்ளுவனுக்கு வாழ்க்கைப்பட்டு, பின்,
கம்பனைப் பெற்றெடுத்த கைம்பெண் ஒருத்தி
கணம் வந்துபோனாள் வாட்டம் விழி தந்து.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home