அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

காலக்குமிழிகள்

காலக்குமிழ்கள் மூச்சைத் தின்னுகிறன,
கடந்தகாலத் தவறுகளினைக் காரணம் காட்டி.

தவறுகளைத் தண்டிக்க என்னைத் தூரத் தொலைத்திருந்தேன்;
அதுவேறு தண்டனைக்குரியதாம்.
திரும்பி வர, பெட்டைக்கடிநாய்த் தவறுகள் புதிதாய் இட்ட குட்டிகளுடன்
என்னை எட்டிப் பார்த்திருந்தன.
அத்தனை குட்டிகளுக்கும் கும்பி எரிகிறதாம்;
உணவிட்டுச் செல்லட்டுமாம்.

நாளை வெளியுலகம் என்னைத் தனித்துவிட்டுப் போகும்,
ஒரு மலைக் குக்கிராமத் தரிப்பில் முதிர் வயதுக்கரிப்புகையிரதம்
உதிர்த்த ஒற்றைப் பயணியென.

குடி அழித்த வேதனை மறக்க மேலும் குடித்திருப்பவன் போல்
கவிதை தேய்த்த என் கனவுகள் மறக்க
கவிதை மட்டும் கூடவரும்.

இருப்புக்களின் தொலைப்பு தொலைதலிற் தெரிகிறது;
தொலைதலின் இருப்பு இருத்தலிற் படுகிறது.
மொத்தத்தில் துரத்தப்படுகிறேனா, துரத்துகிறேனா?
புரியவில்லை,
இலக்கற்ற ஓடுதல் மட்டும் என் இயல்பு என்றது தவிர.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home