அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

காய்கறிவெட்டுப்பலகை

அம்மா,
உனக்கோர் அறிமுகப்படுத்தல்.
போன கிழமை ஒரு மதியம்,
நீ சொன்ன காய்கறி
நறுக்குப்பலகை வாங்கினேன்.
வாங்கையில்,
உன்போலவே வெண்தேக்கு நிறம்.
முப்பதாண்டுமுன் அப்பாவோடு
முன்னேஸ்வரம் முன்,
உடல் ஒட்ட நாணி, எட்டிநின்று
எடுத்த கறுப்புவெள்ளைப் படமுள்ள
உன்முகம் போலவே,
வட்டமாய், பளிச்சிட்டுச் சிரித்தபடியே அது.
சுவர்கொழுவு வட்டத்துளைகாண,
நகைமறந்த நளினிஅம்மா காது ஞாபகம்.
காய்கறி வெட்டி முகங் கழுவி,
ஆணி தூக்கையில், அ·து ஆடி ஓய்வதிலெல்லாம்,
தப்பி, ஒட்டிமேற்தெரியும் செம்மிளகாய்த்துண்டும்
கீழ் மறையா அப்பு மஞ்சள் நிறமும், நெற்றிப் பெரு
குங்குமம் வைத்துத் தாலியுடன் தலையாட்டிப் பேசும்
சுகந்தி அம்மாவேதான், அசப்பினில்.
கீரை, கிழங்கு, கோழி, கொடிப்பூசணி
எது தூக்கியும் எந்நேரம் போட்டு எப்படிவெட்டினும்
வேதனை, முனகற்சப்தம் எழுப்பலில்லை முறையிட்டு.
வெட்டு,விழு,வெந்த கீறல்கள் வெகுவாய் இப்போது.
மூன்று நாள்முன்பு, கீழ்விழுந்து,
ஒரு முனைச் சிறுதுண்டம் வெடித்துச்சிதறியதாய்...
நேற்றையதினம்,
எனையறியாது, எரியடுப்பருகே வைத்து,
எதிர்ப்பக்கம் கிழங்கு கழுவ நான் நகர,
மறுபுறம் சின்னதாய்ப் பொசுங்கி...
நான் செய்ய ஏதுமில்லை என்தாயே; எடுகுரலெடுத்து
அ·து ஏன் அரற்றி அழைக்கவில்லை என்னை?
உன்னைப்போலவே வேதனைகள் எல்லாம் உனக்கு,
உள்வரும் வெகுமதிகள்தாம் எமக்கென்றே அதுவுமோ?
ஆயினும், இடையிடை காலம், கத்தி கொத்திப்போன
பழைய புதுமுகம் இடையிடை மின்னத் தெரிந்து, இன்னும்
அதே உறுதிதளராப் பழம் பலம். வெளிச்சத்தமேதுமில்லை.
எனினும், எத்தனை நாளைக்கோ இத்தனை வைராக்கியம்?

தாங்குபலகைக்கு, எம் அம்மாக்கள் பற்றி;
முதலில், என் அம்மா;
இருபதாண்டுமுன், நானிட்டு,
உப்புக்கற்கள் அடுப்பில், வெடித்துச் சிதறி,
பெருங்காயம் உடலெங்கும் அவளுக்கு;
பேசவில்லை எதுவும், பதறவில்லை வெளிக்காட்டி,
என் முழங்கை ஓர உருவாகு
சிறுகொப்பளம் தவிர்ந்தெதற்குமன்று.
புத்தகங்களையும் துக்கங்களையுமே
மாதச்சம்பளமெனக் கொண்டு கொடுத்து
சாய்மனைக்கதிரை புதைந்திரு அப்பாபற்றியும்,
நானறிந்தபோதிருந்திதுவரையெல்லாம்
அப்படியே அவள் அபிப்பிராயம்.
இனி, நளினி அம்மா பற்றி;
அடிபட்டோர் ஆயிரமிருக்க, அடிபடாமலே அகதியாய்
அந்நியநாடு போயங்கே அநியாயத்திற்கு,
வாழ, வாகனமோட்டு உரிமை,
வாழுரிமையுடன் பெற்றதுக்காய்மட்டும்,
நளினி (விஞ்ஞானமுதுமாணி)உடன்,
கொழும்புவீடும் கொழிபணமும்
வரவேண்டும் கொழுத்ததங்கமுடன் என்ற
மகாபிழை மாப்பிள்ளைக்கு,
அனைத்தும் விற்றுத் தான் சிதறி,
"அவள் அங்கே வாழ்ந்தாற் சரி" என்ற
சொந்த நாட்டகதி அன்னை.
இறுதியாய், சுகந்தி அம்மா, சுருக்கமாய்;
பெற்றமகன் கொ(கூ)ற்ற(று)வனால் அற்றுப்போனபின்னும்,
மற்ற மகள் போனவன் வழிதேடத் தான் போய்க்காடுறைய,
பெற்றமுகம் காட்டாது, மனம் பொசுங்கி
கோவில் மட்டும் தன் விழிகாண் தாய்.
இடைவிட்டுப்போன அம்மாக்கள் ஏராளம்;
எண்ணிக்கை மட்டுமென்ன பண்ணிவிடப்போகுமிங்கே?

அம்மா,
நாளை வரவேற்பறை,
தலையாட்டுத் தஞ்சாவூர்ப்பொம்மை பின்னால்,
உன் கண்ணாடி உள்ளுறைப்படம் பக்கம்,
உடலெங்கோ வடநிலந் தொலைத்து
தலைமட்டும் சுவர்தூங்குப் பெண் மான் கீழ்,
மில்வோக்கி அமெரிக்க-ஆபிரிக்கத் தினச் சந்தை
வாங்கிய கறுப்புத்தந்த "முதுதாய்"ச்செதுக்கலின் இடப்புறம்,
ஆணி அறைந்து, இந்த நினைவுச்
சின்ன "காய்கறிவெட்டற்பலகை" அன்னையையுமிட எண்ணம்.
இனி,
என் கைவைத்தே காய்கறி வெட்டிப்பழகுவேன்;
எனைப்பெறு முது அன்னையே,
விரல், ஆழ வெட்டினும் கத்தி, வேதனை வெளிக்காட்டாது,
நான் உன்நிலைக்கு, என்னைப் பக்குவப்படுத்தவேண்டு
முதிர்ச்சிப்பருவமன்றோ, இது?

0பின்னூடுகை:

Post a Comment

<< Home