அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

குரங்குகள் குட்டிபோடுதலும் என் கவிதையும்

குரங்குகள் குட்டிகள் போடுவதைப் பற்றிக் கவிதை எழுதவில்லை என்பதாய்க்
கவலை எனக்கு குட்டிகளுடன் ஓடாத குரங்குகளைக் கண்டாலும் எழும்;
மனைவிக்கும் மற்றவர்களுக்கும் என் ஆதங்கத்தில் சந்தேகம் சங்கடத்துடன் கூட,
'கவிகள் கருக்கட்டுவது அப்படி என்ன கவிக்குக் கரு?'
வீட்டுக்கு முன்னால் மல்லிகைப் பதியன் இல்லையா,
பக்கத்துவீட்டில் சின்னக்கைப்பெண் குழந்தை இல்லையா,
ஏதாவது நாட்டில் மழையோ போரோ விமானமோ விசித்திரமாய் விழுந்து போகவில்லையா,
இளவரசிகளும் முதுமனுசிகளும் மூச்சு நிறுத்திக் கரு தூக்கித் தரவில்லையா?
பிறகேன் இன்னும் குரங்குகள் குட்டி போடுவது பற்றி எனக்குக் கவி
எழுத ஆசை என்று
மனைவிக்கும் மற்றவர்களுக்கும் என் ஆதங்கத்தில் சந்தேகம் சங்கடத்துடன் கூட.

மல்லிகைப் பதியன்களுக்கு மனைவி இருக்கிறாள்,
மழை இருக்கிறது, படர மரம் இருக்கிறது;
பக்கத்துக் குழந்தைக்கு இப்போதைக்கு தாயிருக்கிறாள்,
கொஞ்சம் வளர்ந்தால், வீதிப் பையன்கள் இருக்கிறார்கள்;
மழைக்கு நிவாரணம் கொட்டுகிறது;
போருக்கு ஆயிரம் பேர் பேருக்குச் சமாதானிக்கிறார்கள்;
விமானத்துக்குக் கறுப்புப்பெட்டியும் புகைப்படங்களும் பரவிக்கிடக்கிறன
தரையிலும் பத்திரிகையிலும்;
இளவரசிக்கு கறுப்பு மலர் விற்பனைக்கடைகள் காத்திருக்கிறன
தொலைக்காட்சியுடன்;
முதுமனுசிகளுக்கு அரச வாகனமும் ஆண்டவர் ஆக்குகையும் ஆங்காங்கே
நடந்தேறும்;
ஆனால்,
இராமாயண காலாட்சேபம் பாகவதர் முடித்துத் தேங்காய், பழம்
அனுமன் சிலை முன் சாத்தியபின்,
குரங்குகள் குட்டிபோடுவதைப் பற்றிக் கவி எழுத யாராவது சாமான்யன்
வேண்டாமா?
ஆக,
குரங்குகள் குட்டிகள் போடுவதைப் பற்றிக் கவிதை எழுதவில்லை என்பதாய்க்
கவலை எனக்கு குட்டிகளுடன் ஓடாத குரங்குகளைக் கண்டாலும் எழும்;

0பின்னூடுகை:

Post a Comment

<< Home