அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

ஆலோசனை

அவசரமாக ஒரு ஆலோசகர் வேண்டும்,
மதியப் பொழுதுகளைக் காதலித்து வைத்திருப்பது எப்படி
என்று வழிகாட்டிப் போக எனக்கு;
பிறந்தது தொட்டு இத்தனை நாளாய் எத்தனை சமர்
அத்தனை நேரமும் எப்படிப் போனதென ஆராய்ந்து வைப்பதற்கு.
வாரம், விடுமுறை வித்தியாசம் கிடையாது,
மத்தியானம் சாப்பிட்டு முடித்தால்,
பிறகு எந்தத் தையற்காரன் வந்து இடை வெட்டி ஒட்டி வைக்கிறான்
மணி ஒன்றும் மாலை நான்கும் என்பது மாரீச வேடமாயே
கிடக்கிறது.
ஒரு குடிசைக் கைத்தொழில் நாட் கணக்கு உற்பத்தியாவது காணோம்
மாதத் தொகையிடு மத்தியான மணிநேரங்களில்.
சாப்பிட்டு முடிக்க, உடல் வியர்த்துக்கொட்டுகிறது;
வியர்வைக்கு விடை கொடுக்கச் சாளரம் திறந்து
இடயகோ மலைக்காற்று உடல் காமுற்றிருக்கப்போக,
கண்களுக்குட் கன்னியருத்தி களிநடனம்;
காதலுற்று காமுற்று கனவுற்று களிப்புற்று படுக்கை விட்டெழ
தூர மாதாங்கோவில் மணி டாங் டாங் டாங் டாங்;
கள்ளக்காதலன் கணவன் வர ஓடியதுபோல,
கைக்கிடைத்ததெல்லாம் வாரிச்சுருட்டி ஓடி வைத்தாலும்
போன நேரத்தே ஆகவேண்டிய புது வெளிப்பாடெல்லாம்
கடைக்குப் போகும் நேரத்திலும் மனம் கவ்வி வைத்தாய்ந்தாலும்
போதாது நேரம் போதாது;
ஆகத் தீர்வு தர
அவசரமாக ஒரு ஆலோசகர் வேண்டும்,
மதியப் பொழுதுகளைக் காதலித்து வைத்திருப்பது எப்படி
என்று வழிகாட்டிப் போக எனக்கு;

0பின்னூடுகை:

Post a Comment

<< Home