அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

கிராமக்கிணறு

என் கிராமக்கிணற்றினை நெடுங்காலம் நேசித்திருந்தேன்.
ஊர் போன வெவ்வேறு விடுமுறைகளில் வேறுபட்ட விழைவுகளால்,
மின்விளக்கற்று எண்ணெய் விளக்கும் கைப்பசை இல்லாக்காலத்தே
அற்றுப்போம்
வீரபத்திரர்கோவிலடி
காவற்சுற்றுக் கல்லடுக்குச் சிதைந்து இளிவெளியூடே சிற்றால் முலை
முளை கொண்ட
என் கிராம நன்னீர்ச் சிறு கிணற்றை
நெடும்பொழுதுகள் நட்பாய் நேசிக்கக் கற்றிருந்தேன் நான்.

வீட்டுமுகமிருந்து கால் மணி நடை;
முதலில் பெற்றோல் புகை நெடுஞ்சாலை மூன்று நிமிடம்,
பின் பனைவடலி பார்த்திருக்க, பாம்பு ஒழுங்கையுள் நெளிய
வளைந்தோடிச் சில நேரம்,
மீள எழுவேன்,
பெரு மொட்டைத்தலை மிச்சமுடிக்கற்றைவகை விட்டுவிட்டுக் கிடக்குமொரு
பொட்டல்வெளி.
மத்தியில் ஊர்க்காவற்தெய்வம், கையேந்து ஓடுமற்ற ஒரு
பிச்சைப்பரதேசியாய்;
சுற்றி மதிலில்லை; காணிக்கை காணா உண்டியலுக்கு மூடியில்லை;
தனியிருக்கப் பயந்தானோ? பாவம் என மனம் பட,
தன் கறையானரி கதவெப்போதும் மூடியிருந்தார்
முழி பெயர்ந்து வெறு மூளியாய்ப் போன முன் வீரர்
பத்திரம் செத்து,
பக்தர்களை நெடுஞ்சாலைச்சந்திச் சிவனுக்கும் சந்தைக்குடிச்
சாமுண்டேஸ்வரிக்கும் தத்தம்
விட்டுத் தந்து.
ஆயின், கோயிற்கிணறிருந்தது -பத்தாம் வகுப்புவரை எனக்கு- அவர்
தோழமை, முனியப்பர்;
கூடவே,
மூன்றாம் படிவக் காலவிடுமுறைக்கு, வீரபத்திரரின் வில்வவிருட்சத்தில்,
உடற்பிளவை நோய் கொல்ல கயிற்றில் உயிர் கொண்ட
மொட்டைப்புளி ஒழுங்கைச் சுருட்டுச்
செல்லப்பாவுந்தான்
சூக்கும காற்று வடிவத்தே உரப்பாய் ஒலி வீசி.

வீட்டுக்கிணறோ அயலெல்லாம்போல் உவர்நீர் உற்பத்திமையம்; வெயில்
விடாய்க்கு வேறு
வழியில்லை;
பித்தளைக்குடம் இடுப்பு எடுத்துப் போகும் பெரியம்மாவுடன்
சின்னக்கைவாளி தூக்கிக் குட்டிநாயாய்ப் போவேன் பின்னே நானும்.
பிற்காலங்களில்,
பெரியப்பாவின் 'பிரிட்டிஷ் இரலி'யின் பின் வைப்பில் குடம்,
கும்பம் வைத்துக் கயிறு கட்டி நான் மட்டும்
தனியே.
வாற்புறம், யார் உபயமென்று சாசனமிடா பாரம்தரு பழைய
"மொரீஸ் மைனர்", "போர்ட்"
உதிரிகள் கொள்
ஒழுகுவாளி கயிற்று துலாநெம்புடன் எம்புவது என் மனம் எம்பும்
இன்பமுந்தான்.
வாளி வீண் வில்லங்கம் வேண்டுமென விழுந்து விரைந்து,
அடியோரக்கிணறுக் கருங்கல்லொன்றுடன் முன்னைய வம்பொன்று இன்றைக்குப்
புதுப்பிக்கும்,
தம் மொட்டைமோவாய் கல் கரட்டுமூக்கிடித்து.
வழுவழு தவளைகள், தேரைகள், வாற்பேத்தைகள்,
பத்தையாய் மறுபக்கம் தத்தும்; முனகிக் கத்தும்; அடித்தாடை
விம்பிப்புடைத்துப் பிதற்றும்,
"பாவி, பகல்நித்திரைக்கும் பங்கம் உன்னால்."
பின், அவை வரிசை கிணறு வட்டமாய்ச் சுற்றும்,
விழும் வாலி வேலைசெய் வாளி மையமெனக் முழிக்கண் பழி
வைத்திருந்து.
எட்டிச் சிரிப்பேன், எப்படி என்வேலையென்று,
கோடை "ஒலிம்பிக்"கில் ஓடி, கோட்டை முதற் தொட்டவன்
பெருமை வைத்து.
சில சின்ன மெல்லோட்டு நண்டு, அடிக்கிணற்று கிழட்டாமைகள்
மெதுவாய் மோனத்தூக்கம் கலைத்து, ஓடெட்டி, கழுத்து அண்ணாந்து,
"ஆரப்பா அது அல்லற்படுத்தல் அங்கே?" எனப் பார்த்து மீளத்
தொடரும் மௌன
ஜலயோகத்தவம்.
மண்குடம் ஓரம் வைத்து, பசும்பாசி, பாளைசீவு கத்தி ஓரத்தாற்
செதுக்கி,
நான் நீரூற்றக் காத்திருந்த சின்னவன் மட்டும் சிறிதாய்ப்
பதறுவான்,
"பத்திரம் நயினார் பத்திரம்; வழுக்கும் அழுக்குநிலம்."
என் மூன்று முழுக்குடம் அவனொரு குறைக்குடம் தண்ணீர் சரித்தூற்ற,
மனம் வேடிக்கை வற்றி, மூட்டு நாரிழுத்து வலிக்கும் கை.
"சின்னவன், நீயே மிச்சத்தை நிறையப்பா உன் குடத்தில்."
இன்னும் தீ மேலாய்ப் ஏகிப் பரவியதாய் உடல் உதறிப்
பதறுவான்,
"கூடாது, நயினார் கூடாது; பிறகு பெருங்குற்றமாய்ப் போகும்."
கிராமம் காணவந்த நகரப்பொடியனுக்கு,
ஊர் நிகழ் நடப்புகள், கிராம எழுதா வழக்குகள் வழக்கப்பட்டு
விளங்க,
காலம் இன்னும் எட்டிக் கிடந்தது ஆண்டு சில எதிர்காலத்திற்கு.

குடக்கும்பம் போகும் வழியில், துவிச்சக்கரத்தேர் நிற்கும்,
நாளக்குருதியாய் குலை முற்றிய அத்தனை முள் ஈச்சம்பத்தையெல்லாம்;
கருநாவல்மரத்தடி நாகப்புற்று பெரும் ஈச்சைக் குலை மட்டும்,
நாகம், சாரை, அவை இணை பிணைபெறு குட்டி எண்ணிக்கை
எண்ணி
வேறு வழியின்றி போம்வழிப் புண்ணியமாய் விட்டுவைப்பேன்,
நாட்சீவனமற்ற நமது நாட்டார் வீரபத்திரருக்கென்று.
கோதாப் பனை நுங்கு, கொறிபடாக் காட்டுக் கொய்யா,
தோதாய்ப் புளி மாங்காய்ச் சேர்ப்புக்கள், அதற்கான தரிப்புக்கள்
இவையடங்கா இங்கு
சொல்ல.


முழுக்காற்சட்டைக் கல்லூரிக் காலங்களில்,
கிணற்றுத்தவளையிலும், கிளிமூக்குமாங்காயிலும்
கிழம் தவிர்ந்த மிகுதிப் பழமான மண்ணிறக் கிராமத்துப்பெண்கள்,
அவர் சட்டை ஊக்குக்கொழுக்கியாப் பிடித்துப் போனார்கள்,
கிணற்றடியில், மரத்தடியில், மனத்தடியில்.
கைவலி கண்டும் காணாது, "வேண்டுமா வேண்டுமா?"
என்று வில்லங்கமாய் ஊறிவைத்தேன் வெல்லத்தண்ணீர்.
நகரத்துப்பையன் நல்லவன் என்றும் நினைத்திருக்கவுங்கூடும் சிலர்,
நாக்கூறியது வாய் கடையாய் கிணற்று வாளியும் வழிந்து ஓடியது
கண்ட விடயம் விண்ட பல விடலைப்பெண்கள் தொகையை விட்டால்.
சின்னவன் வயது காண, கிணற்றடி அடிக்கடி வர விடுவதில்லை
உடல்.
மேலாய்ப் பாசிகளோ, ஈச்சைகளோ பருவம் அடைந்து, படைத்தும்
கொண்டுதான் கிடந்தன,
ஆண்டிற்கும், முன்னைப்போல், மொத்தமாய்
அப்பெண்களைப்போல்.

பின்வரு என் பட்டப்படிப்புக் காலங்களில்,
பெரியம்மா உடல் தளர்ந்ததென்று, அண்ணன் நகர நீர்,
குழாய் கொண்டு தூணேற்றி ஒரு நீர்த்தாங்கி கட்டி விட்டார்
வீட்டிற்கு.
பொங்கல்நாட்கள், வருடம்பிறக்க, உலையிட்டு ஆக்குதற்கு,
பிறந்தகுழந்தைக்கு முதல் குளியலுக்கு, வீட்டிற் பெண்ணொன்று பருவம்
வரத் தோய்தலுக்கு,
புதுமனைபுக, மணம் நிகழ பன்னீரிட்டுத் தெளித்தற்கு,
கன்னிகாதானத்திற்கு,
சவம்விழ, தீயிட்டு சுடலை மீண்டு தலையூற்ற,
இப்படியாய்,
பொலியும் கழியும் சில கற்றை ஒற்றை நாட்கள் மட்டும்
அள்ளினார்,
பேய்க்கோரை ஓரம் முளைத்த கிராமக்கிணற்றில் அடையாளமாய் நீர்.

வீரபத்திரர் மூட்டைக்கன மூஷிகமேறி மேலும் மூக்குடைந்து மூளியாய்ப்
போனார்,
முனி அவர் சகவாசம் முற்றாய் முறித்து முகம் திருப்பி
வேறோதோ நாடு சுற்றப்
போனதென்றார் சிலர்.
பகல் இரவுக்காவலுக்கு,
பானை வயிறு கணபதியார் வாகனரும் வாலறு சில குட்டை
வைரவர்களும்
தானையாய், சேனையாய்த் தனை வளைத்திருக்க,
தன் தரம் இன்னும் தாழக் கோரமாய்ச் சோரம் போனார் என்னூர்
வீரர்.
எப்போதாவது, பிள்ளையற்ற சில பொட்டைக்கண்கிழவிகள் எண்ணைய்ப்
பொட்டணியிட்டுவைத்தனராம்,
புரட்டாதியில் எட்டுச் சனிக்கிட வேறு கிட்ட இடம் கிட்டாமல்.
வில்வம் விருட்சத்தில்
சில வேற்றூர் விடலை மந்திக்குடும்பம், விவரம் தெரியாமல்,
வீரபத்திரரின் தேங்காய், மாங்காய், சுண்டல், பழம் நம்பி
அகதியாய்க் குடி பெயர்ந்து அவதிப்பட்டதென்றார் பெரியப்பா.


ஆக,
மொத்தமாய்ச் சரித்திரம் செத்துப்போனார்கள் வீரபத்திரரும்
அவர் வீதிக் கிணறும் வில்வம்பத்திரமும் என்று விட்டு
மறந்திருந்தேன் சில பொழுது நான்.
பின்னை, ஒரு பத்தாண்டின் முன் பழம்பெருமை
மீளப் பொங்கிப் பெற்றெழுந்தார் என் கிராமப் பத்திரர்,
புதிதாய் அரசியற் தாய் வேடம் பலதாய்க் கிடைத்த
முன்னை நாயகி நடிகை ஒப்பனை+பாவனைக்குக்கு ஒப்பாய்.
விமானக்குண்டுவிழும் நேரம் எல்லாம் அருகு ஆலயப்பொந்து
போய்ப் போந்திருந்தாக வேண்டும் மக்களென, அரசு ஆட்சி
சொல்ல,
வீரபத்திரர் விளக்குப் பெற்றார், வேலி பெற்றார்,
மேலே விமானம் பெற்றார், மழைக்கு ஓரப் பீலி
பெற்றார்,
வெளிநாட்டு அகதிப்புத்திரர் நலத்திற்கு, உள்நாட்டு ஆட்சிப்பிள்ளைகள்
பலத்திற்கு,
அம்மாக்கள், ஆச்சிகள், அக்காக்கள் சில்லறையாய் அள்ளிப்போட
ஒரு சிறு உண்டியலும் மூடிப்பூட்டும் பெற்றார்;
கழுத்திலொரு சிறு புதுப் பொற்சங்கிலிபெற்று அவர் தானே தன்
நிலை வியந்திருக்க,
அவர் அறியா மொழியிற் சேவிக்க, சீராட்ட, உண்டியற்பூட்டுத்
திறக்கத் திறகோலுடன்
ஒரு சிறு நரைகுடுமி ஒல்லிப் பூசகரும் நாளாந்தம் நல்
யாசகராய் உபாசிக்கப்
பெற்றிருந்தார்.
கிராமக்கிணறு, கட்டுப் பெற்றது; தவளை, நண்டு, ஆமை மருந்துக்குக்
கட்டுப்பட்டது;
துலா கரும்வழுக்கிநெய்யிட்ட உருள் கப்பியானது;
ஏற்றமிறக்கமற்று உயிர் போகுதென்றததன் ஒலி ஓலம் செத்தது;
இவ்வாரவாரம் கண்டு கலங்கி விடை எவர்க்கும் சொல்லாமலே
தரைப் பாசியெல்லாம் கங்கைப்படிகளுக்குக் காசியாத்திரை
போனதென்றார், கூட்டமாக,
குடும்பமாக.
புதிதாய், ஒரு பலகை நிலம் நின்று அதனோரம், "உ
சிவமயம்" உயரச் சொல்லி, கீழே,
"அருள்மிகு வீரபத்திரர் தீர்த்தக்கிணறு" என்று பயமுறுத்திச் சொன்னது
காவிவண்ணமிட்டு.
பக்கத்தில்,
சின்னவன் ஒரு வெற்றிலை, பழம், பாக்கு, கற்பூரக்கடையும்,
காலணி பார்த்திருக்கும் தரையும் வைத்திருந்தான்.

இத்தனை பிரகாசித்து,
பின்னிரு வருடத்தே, அத்தனையும் தரை முத்தமிட, ஒரு கணத்தே,
புகையெழும்ப,
ஓலமிட்டு,
உட்கிடந்த நூற்றுமுப்பது உயிருடனே வான் இட்ட வெறிக்குண்டுக்குத்
தானும் சமாதியாகிப் போனாராம், வில்வம்பதி அடியார்க்கு நல்ல
அருள்மிகு வீரபத்திரர்.
பின்னை ஒரு காலம்,
பெருங்காவற்படை கருங்கட்டுடல் வெட்டி உட் போட,
இன்னும் சிலருடன் அடி தொட்டுச் செந்நீர் இட்டுப் பரப்பிக்
கழுவினான்,
சின்னவன் என் கிராமக்கிணற்றுநீரை,
முன்னைத் தொட்டிருக்கா மூடக் குற்றம் முழுமைக்கும் நீக்கி என்றார்கள்
கிட்டத்தில்,
என்னவர்கள்.
கிணறு சில நரமேதயாக அவிர்ப்பாகம் தின்று மீளப்
பேய்க்கோரையும் நீர்ப்பாம்பும்
நீந்தக்கிடந்திருக்கும்
கங்கைத்தீர்த்தோசவம் கண்டு மீள் பாசி மீளப் பசி கொண்டு
தரையெல்லாம் நசித்துப்
படர்ந்திருக்க.
"தேசாந்திரம் சென்று திரும்பி வந்த முனி தின்றது
அத்தனையும் தாளாத் தீவிரக் கொடும் பசிப்பிணியால்" என்றார்
அகதியாய் எம்வீடடை பெரியம்மா,
போன பொற்காலம் வரும் பாதி வழியில் நெடும் பெருமூச்சாய்
வளி வெளிவிட்டு.

-'98, மார்ச் 01, ஞாயிறு 15:21 (மத்தியமேற்கு நேரம்)

0பின்னூடுகை:

Post a Comment

<< Home