அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

ஒரு பயணப்படு விற்பனைப்பிரதிநிதியின் பிரசினம்#1

என் எழுத்து,
ஒரு பயணப்படு
விற்பனைப்பிரதிநிதிக்கான
பிரசினம்
- பல சமயங்களில்
பிறரின்
என் நடத்தை மேலான
பார்வைகள் போல.

சுருங்கிய செலவுகளில்,
அருகிய தூரங்களில்,
குறுகிய நேரங்களில்
கடப்பவர்களுக்காக
நான் காத்திராப்போதும்கூட
எனது எழுத்துக்கள்,
பல பயணப்படு
விற்பனைப்பிரதிநிதிகட்கான
பிரசினங்கள்.
- பல சமயங்களில்
பிறரின்
நெருங்கி உணரமுடியா
என் நடத்தை மேலான
நொருங்கிய
பார்வைகள் போல.

காட்டீஸன் ஆள்கூற்றுத்தளமெழுந்த,
தூரநேரப்புள்ளிகள்
எழுந்தமானமாய்
இணைத்துக்காண்கையிலே,
எவர்க்கும்
எண்ணற்றமுறை,
குறுக்கு நெடுக்காக
வெட்டுவேன் என் பயணங்களில்,
புரிபடாப் பிரசினமாய்.

பிரசினங்கள் தாமாய் எழுபவை;
வேண்டி எவரும்
வீணாய் வரவழைத்துக் கொள்வதல்ல.
தீர்த்துக் கொள்ளல்,
நேர் விகித சமனாம்,
தேடலின் ஆழத்திற்கு.

###################


முன்னைய சிலுவைப்போர்களின்
புறமுதுகுகாட்டு
ஒட்டாமான் பேரரசின்
சில முட்டாள் அடிமைகள்
தூக்கச்சொல்லும்
சொல்லுபடியாகாச்சிலுவைகள்,
என் எதிர்ப்படு
சில
எதிர்(ரி)ச்சொற்கள்
- இத்தனை நாள்,
காற்பெருவிரலிற் குத்தவென
மரக்கிளை தொத்திக்காத்திருந்த
காட்டுவேடன் விட்ட அம்புகள்;
பரிஷிக்தின் கைப்படு பழம் தூங்கு பாம்புகள்.

நேற்று
|
---------> இன்று: நானே(¡) வலேட் + என் மொழி
என்றும் என் மோல்டா #2
|
நாளை

###################


மிகுதிப்பட்டவற்றின்
நீதியான தேடல்கட்குச்
சாய்ந்து பணியும்
என் சிரம்;
வேண்டினால்,
நெடுஞ்சாணாயும்
நிலமேலிடை
நீட்டி
நான் கிடப்பேன்
என் நேரம்.

ஆனாலும்,
வேண்டுவோர் விழைவுக்கெல்லாம்
வில்லாகி,
ஏறிப் புள்ளியாய்
வெளிப்பறக்கும் சிறுபுள்
இறகாகி
வளைந்து கொடுத்து
குழைந்து கூத்தாடும்
நாட்டியம் நிகழ்த்தாது
என் வார்த்தை.
நாணப்படு நாணலல்ல,
காற்றாடு திசை தலை மடக்க...
நாடோடிக்
கழைக்கூத்தாடியானாலும்கூட,
தெருக்கைதட்டுக்காவென்று
கம்பிற் கரகமாடாது,
கவிக்கால்.


###################


செவ்வியலின் உள்ளே
நானில்லை;
நான் உண்டு.

புதுவியலின் உள்ளே
நான் உழவன்;
நான் இல்லன்.

இருப்பியலின் உள்ளே
நான் ஒளிந்திருப்பேன்;
இல்லாதும் ஒழிந்திருப்பேன்.

அமைப்பியலின் உள்ளே
நான் கற்கொத்தன்;
நான் சிற்பி.
நான் தச்சன்.

பின் - புதுவியலின் உள்ளே
நான் வலைஞன்;
நான் கரையில்.


எதிலும் நான் இருப்பேன்;
எங்கும் நான் இருக்கேன்.....

என் சொற்களுக்கு வண்ணங்களுண்டு;
ஆயின்,
காண் கண்களின் விழிவன்படலத்
தேர்-நிறம்படு விளைவின்றி
வேறு வர்ணங்களில்லை;
எய்தபின்,
என் வேல் என்னாகாது.
கைக்கொண்டவன் கொள்க,
அதன் வனைப்பும் வளைப்பும்.

சுருங்கிய செலவுகளில்,
அருகிய தூரங்களில்,
குறுகிய நேரங்களில்
கடப்பவர்களுக்காக
நான் காத்திராப்போதும்கூட
எனது எழுத்துக்கள்,
பல பயணப்படு
விற்பனைப்பிரதிநிதிகட்கான
பிரசினங்கள்.


###################


நான்,
ஓர் ஆய்கூடம் பயில் மாணாக்கன்;
எனது தொழில்,
பரிசோதித்திருத்தலும்
விளைவாய்ப் பட்டதை
வருவோர்க்காய்ப்
பக்குவமாய்ப்
பத்திரம் பண்ணலுமே.

என் ஆய்தேடல் ஒழியாது;
ஓயாது.
நகர்வேன் நடைப்பயணத்தே.
காலவெளியின் யாத்திரீகன்
ஒரு வேறுபட்ட நான்.
என் ஆக்கக்கூற்றின் மூலகங்கள்,
வேறு வேறு.
பேராற்றிற் சேர்ந்திறக்கும்,
சிறு ஓடையல்ல
என் உருவம்.

ஆங்காகே அள்ளுவோர்க்கென்று
தடைப்பட்டுத் தேங்கி,
திசை மாற்றேன்
என் சீர் ஓட்டம்.
மாரி நகர்வே
கூட வரும்
கோடையிலும்.

வெற்றுச் சொற்சிலம்பர் ஊடாயும் நகரும் என் யாத்திரை;
கற்பட்ட எழுத்துச்சிற்பிகள் செதுக்கலையும் கண்டு தரிசிப்பேன்;
நாட்பட்ட பண்டம் விற்பார் கடைத்தெருவும் நடந்திருப்பேன் நான்.
தின்னத் தேடியல்ல,
தேடப் பொருள் வேண்டியே
வாடிக்கிடக்கும் கொக்காவேன்
என் வாழ்க்கையிலே;
திசையெல்லாம் தேடிப்பறக்கும்
என் இறக்கை,
ஏதாவதொரு தேடலை.

கைப்பட்டுப் பெற்றவை,
புதிதெனச் சமைத்தவை
பின் வரு மற்றோர் பயனுக்கு விட்டு வைத்து
மேலும்
மேற்பறப்பேன்
வானேறி
நான் அறியாத் தொலைவு.
பறத்தலும் படைத்தலும் மட்டுமே
என் இயல்பு.
தரை நின்று
கொக்கின் நிறம் எண்ணிப்
பால் கொடுக்க அஞ்சும்
குருட்டுப் பெற்றாளைப் பற்றிச்
சுற்றல் அல்ல
கொக்கின் பறப்பு.


###################


இன்றைய எனக்கும்கூட
நேற்றைய
நான் இன்னும்
ஒரு பயணப்படு
விற்பனைப்பிரதிநிதிக்கான
தீவிரப் பிரசினம்
- ஈர் இறந்த விழிப்பாவை இலக்கொத்த
என் நிலைப்பாடுகள்மீதான
மாற்றார்
நேர்க்கணைகளையும்
நெற்றிக்கண்களையும்போல.


'99 05 05

#1
The Travelling Salesman Problem
A salesman has to visit n cities and return to his city of origin. Each city has to be visited exactly once, and the cost of the journey between each pair of cities is known. The problem is to do the tour at minimum total cost.

#2
Jean Parisot de La Valette, 1494-1566, Frenchman, Grand Master of the Knights of Malta from 1557. Led the successful defence of Malta against the Turks under Suleiman II in 1565. There were 8.000 soldiers and 600 knights against 30.000 Turkish soldiers. "We for our part are the choosen soldiers of the Cross, and if Heaven requires the sacrifice of our lives, there can be no better occasion than this", de La Valette said before the battle. The following year de La Valette founded the town bearing his name on Malta.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home