அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

தொலைப்பும் எடுப்பும்

எப்போது எங்கு என் கைக்
கிடைத்தது என்றது போலேயே
தொலைத்த விபரமும் மறந்து போச்சு மனசுக்கு.

மாதம் எட்டு முன் பெரும் பெட்டி
விமானம் ஏற்றக் கட்டிக் கொண்டிருக்கையில்
காதலி நீர்த்துளி கண்ணேற,
நினைவுக்காய்த் தந்ததுவோ......
....இருக்காது;
போனவாரம், வீதித்தார்த் தளத்தில்,
பச்சை விளக்கேற்ற முன் கடந்து, கண்முன்னே,
காரோட்டி விதியேற்றிப் போன கிழமாது
வீழ்த்திவிட்டுப் போனதாக்கும்.........
.....இல்லை, இல்லை....
.......வேறெங்கோ, வேறேதோ நேரத்தே,
பகல் தொலைத்த நெடு படுப்பற்ற பயணத்தே?
பாதை ஓரக் கடைவிரி பருவப்பெண்ணிடத்தே?
வீட்டிலிருந்து வந்ததோர் விமானச்சிறுகடிதத்தே?
முகம் விறைக்கும் பனிப்படல நேரத்தே?
ஆரோ ஆறடித்துப் பந்து, விளையாடு வெளிவிட்டம்
விட்டகன்று விரைந்தேகிப் போகையிலே,
அது துரத்தி இளைத்திருந்த காலத்தே அப்புல்வெளியில்?
எங்கே அ·து எடுத்திருந்தேன் என்றறியா வகையிலேயே,

உடையானுக்கு ஓர் உதிர்ப்பாய்ச் சொல்லற்றுச் சென்றதுவும்,
பெருமலை சிறுமுகில் பின்னிருக்க,
கை, பூக்கொத்து கவ்விக்கொள்ள,
என் இனியாள் எனக்கென்றெடுத்து
அனுப்பி வைத்த நிழற்படமெடுத்து,
பின் பை கிட சிறு பணப்பொதி உள்
வைத்துப் போன உவப்புப்போதினிலோ?
இல்லை என நினைக்கிறேன்; ஏனென்றால்,
அதன் பின்னர்தான், அம்மாது வீதியற்றுப் போன கணம்
என்னிடத்தில் அதன் பத்திரம் தொட்டிருந்து,
பூரண பாதுக்காப்புக் கண்டேனே?
பின்னெப்போது போனதது, இப்போது
சிந்தனை பிக்கல் பின்னிச் சிக்கல் செய்ய?
நேற்றைய மெதுகுளிர் மழையின் தூற்றல் கண்டு
குடை விட்டுக் குதூகலமாய் நடைபோட்ட
பொடி நேரத்தே பொறியாய்ப்
போனதொரு தொலைப்பதுவோ?
போனவழி போன கணம் தேடி
எப்படி அப்பொருள் நான் காண.....

ஹேய்!!!!
இங்கே மேற்பந்தி மூன்றும் பாதி முகம்
மறைத்து, சொற் பர்தாவுட் போவது யார்?
ஆ...ஹா!!
அதுவேதான்;
போனதுபோல் சொல்லாமல்,
என் உள்ளிருந்து தானே வெளி வீழ்ந்திருந்து,
கண்ணடிக்கும் காணற்றுப்போயிருந்த
பொல்லாத
வெற்றுநிலை
அமர் அக்
கவிதைக் கருவேதான்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home