அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

தையல் சொல் கேளீர்

தலையாய பிரச்சனை ஒன்றின்று:
"தையல் சொல் கேளீர்" என்றார் ஔவை
(தங்கவிளிம்பிட்ட வெள்ளெழுத்துக்
கண்ணா(ண)டித் தமிழாசான் சொல்வார்,
"எழுத்துச்சீர்திருத்தம், ஔவைப்பாட்டிக்கு
நாம் செய்யும் பேரிழுக்கு,
'ஔ'வை 'அவ்'வென்றிடுவதால்" என்று).
அவர் சொல்வதை எடுக்கவோ, கோர்க்கவோ?

தையலியந்திரத்தே
தம்பிசட்டைத்தறியிட்டபடி
அம்மா சொன்னாள்,
"பேதை, பெதுமை, பேரிளம்பெண், தையலென
பேதங்கள் பெண்கள் வயதுட் பெரிதுண்டு.
ஔவை தையலல்ல, ஆனால், முதுபெண்;
ஆகவே, ஏற்றுக்கொள் அவள் முதுமொழி."
அருகிருந்த அக்கா தன் மையிடா அழகு
கருவிழிப்புருவஞ் சுருக்கிச்சொன்னாள்
திட்டமாய்,
"ஆனால், வயது என்பது
வாழ்ந்தகணக்கோ, மனக்கணக்கோ?
ஔவை இளமையில் முதுமை கொண்டதில்,
வாழ் ஆண்டுப்பருவத்தே அவள் தையலே."
அடுத்துப்படுத்திருந்த பெரிய எழுத்து மகாபாரத
அழகு ஆழித்தமிழ் ஊறு அம்மம்மா இனிது எழுந்து,
"ஔவை, தமிழ் பல கண்டல் காணீர்;
வள்ளுவர் வாழ்காலச் சகோதரி ஔவை,
அதியமான்காலப் பாரிமகளிர் பாங்கி ஔவை,
கம்பன்,புகழேந்தியுக ஒட்டக்கூத்தன் உரசு ஔவை."
என,
ஓடியளிந்தேன் உள்ளறை
எனை வெளித்தூக்கியெறிய.
ஆபத்பாண்டவ, "அப்பா!"
புத்தகப்பொறி சிக்கியோர் எலி பேசுவதாய்,
"பொறுத்துக்கொள் மைதிலி,
நாளை சொல்வேன் நல்ல பதில்.
இன்று, இறுதிநாள்; ஆய்வுக்கட்டுரை,
'தென்னாசியப்பெண் காலாண்டு'காண
'ஈழப்பெண்களும் எதிர்காலத்தமிழும்'
ஏழுபக்கம் அனுப்பல்வேண்டும்'
-என்றோர் அசரீரி.
துவிச்சக்கரவண்டிச் சங்கிலிக்கொழுப்பு, உடல்மெருகேற்றி,
தென்னுலகக்காடொன்றுறையும் வரிக்குதிரை
வடிவெடுத்து, தம்பி வீட்டுமுற்றம்நின்று
வழமைபோற் சிரித்தான், வாய்விட்டு,
"மைதியக்கா,
இத்தனை ஆயிரம் ஆண்டு பொறுத்தவள்,
இன்னும் ஓராண்டு குறையப்பொறுத்துக்கொள்;
அடுத்த பங்குனித் திகதி எட்டு*,
சிறப்புமலர் ஆனந்தவிகடன்,
இரட்டைஇலவச இணைப்பு குமுதம்,
அரைப்பக்க வீரகேசரி வாரமஞ்சரி,
அத்தனையும் போட்டியிட்டு,
வீடு கட்டு, வீதிகூட்டு பெண் தொட்டு,
வீரமிகு சனாதிபதி, விண்வெளிப்பெண்வரை
இதுபற்றி நேர்முகங் கண்டு
நெடுங்கட்டுரை அச்சில் வரும்."
அதுவரை அறை ஓரமிரு சின்னண்ணா,
பாஞ்சாலிசபதப்பாண்டவப்பீமனென,
'இனியிது பொறுத்தலில்லை-தங்காய்
என் சிந்தனை எரிதழல் வைத்தாய்,
உன் இன்றையதமிழாராய்ச்சிப் பங்காய்'
எனச் சினந்தெழுந்து, கையிருந்த,
'புது இங்கிலாந்து மருத்துவ மாதாந்திரி'
மேசை விசிறி, விண்ணதிர் குரலெடுத்து,
"வைத்தியசாலை வரும் பைத்தியங்கள்
பரவாயில்லை உன்மேலாய், சிந்தனைக்கு.
இருபத்தோராம் நூற்றாண்டுக்கு, இந்த
இடறு-குழப்ப-உறை தமிழையா பெட்டிக்குட்
பொதிகட்டிப் பயணம் புறப்படப் போதிப்பார்,
தமிழுக்குச் சோறிடு பெரும் புல(ர)வ(ல)ர்கள்?
எந்தக்கிழவி, எக்காலத்தோ, எதுவோ
எவர்க்கோ எடுத்துச் சொன்னால், உனக்கென்ன?
உன்மதி எங்கு ஊர்மேயப்போயிற்று?
ஆணுக்கும் பெண்ணுக்கும்
உடல், உணர்வு ஊக்குச்சுரப்பு மாறுபடினும்,
மூளையுமா, முட்டாளே?"-
சபை விட்டுத் தொடை தட்டமறந்தகன்றான்.
இத்தனை இயலும் இருந்து காண்
தூரமமர், சாத்வீகப்பெரியண்ணா,
நீள்கண் தன்னிமை மெது மூடி,
"வா இங்கே" என்றாற்போல்;
அருகு சென்று, "?" என,
"கணியன் பூங்குன்றனார்தம்
'யாதும் ஊரே யாவரும் கேளிர்'-அறிவாயோ?"
-அறிவேன்.
"அவ்வரு கேளிரே இவ்விடையும்,
விடையென வருதலும் வேண்டும்.
என் செய்வோம், சொல்!
எம் தமிழர்தம் காலத்திரி(ப்)பு.
ஆயின், ஔவை சொல்
ஆழ் மெய்ப்பொருள் காண்:
உன்போல் நங்கையர் தம்சொல்
நலந்தரு நட்புக்குரிய நற்சொல்."
என் கொல்?
மெத்தச்சரி.
பெரியண்ணா, பெருஞ்சமர்த்தன்;
தன் தமிழையும் இறங்க விடான்,
தான் கொள் கொள்கை போலவே.

-'97 ஜூலை 04

0பின்னூடுகை:

Post a Comment

<< Home