அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

எனக்கெனத் தனிப்பட்டவை -2

1
இருட்குகைகட்குள் இலகுவானது,
எல்லோரும் ஒத்தார் என்றெழுதி,
எவரோ வொருவர்
எதேச்சதிகாரத் தீர்மானம்
எடுப்பதொன்றுதான் என்றறிக.

அகங்காரர் தேசத்திலே
வலுத்த அநாமதேயங்களின் ஆட்சி.
மூடியகோட்டை உள்மூலை
முலைதடவு மூடுமந்திர
மோகமுனகலுக்கு,
கோடிக்குடிகள் நலம்பேரில்
முத்தாய்ப்பாய்த் தரச்சொல்வார்
கண்மூடி முழு ஒப்புதல்.

கண்ணாடி வளையிருந்து
கைகூசாமற் கல்லெறிவார்.
கண்ணாடி உடையவில்லை
என்றும் கதையளப்பார்.

வெளிச்சத்திற்கு வெளிவருக;
முகம் பட்டு முழுவதும் அவிழ்த்தெறிந்து
முறையாய்ப் பேசுவோமென்றோம்;
கதிர்பட்டுக் கூசுகிறதென்கிறார் கண்கள்.
காட்டுமுயலுக்கு கால் மூன்றென்று
காட்டுத்தனமான கட்டித்த வீண்வாதம்.

ஆடையின்றிப் போகின்றவரானாலும்,
அவர் அரசர்;
ஆதலினால், அவருடல் மின்னும்
நெய்தலின் நேர்த்தியை
நெஞ்சாராதபோதும்
நெடுகப் போற்றுவோமாக.

தகாதாரைத் தக்க இடத்தே தரிக்கவிட்டால்
தான்விரும்பித் தங்குமோ தகுதரம்?

=========
2

இன்னொரு இணைய இடைவெளியிலே,
என்னவளே
உன்னோடு பேச வந்திருந்திருக்கின்றேன்.

எதிரும் புதிருமாய் இருந்து கொண்டாலும்,
என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாய் நீ,
இணையத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.

கேள்விகள் உன்னிடம்;
கேட்காத காது என்னிடம்.

நிழல்களிலே என் இருப்புகளை
ஏற்றிவைத்துக்கொள்ள
இழந்தவற்றுட் பெரிது,
உனக்குரிய எனது பொழுதுகள்
-எமக்குரிய எதிர்காலத்தின்
பயிர்வளர்ப்பின் போற்றலைப் போலும்.

நூற்கவேண்டிய நூல்களின் நேரத்தை
நூர்த்துக் கோர்த்துக் கொண்டிருந்திருக்கிறேன்
வெறுவெளி வரப்புகளில் வீண்தீ.
சுற்றுப் பற்றிக் கொண்டபின்னர்தான்
வேள்வியின் அவிர்ப்பாகம்
ஏதென்று தெரிகின்றது.

காட்டுமிராண்டிகள் தேசத்தில்,
போற்றுகிறவனும் போரிடுகிறவனும்
மட்டுமே வீற்றிருக்கலாம்.

வரைகோட்டுக்குமேல் புகழ்ந்து போற்றுதல் ஆகாது.
போரிட்டு வெல்லவோ விளைச்சற் பெறுதியற்ற புழுப்பூமி.
"இன்றுபோய் என்றும் வரேன்"
என்றாகித் திரும்புதலே
எனது ஜயம்.


தொலைந்த வாய்மையைத் தேடிக்கொள்தல் என்பது
-அறிவேன்-
நீரி லூறிய கட்டையில் நெருப்பு வைப்பது போலத்தான்.

என்றாலும்.
இந்த ஒரு முறை
ஏற்றுக்கொள்;
கோடு கடந்த சத்தியத்தைத் திரும்பக் கடன்பெற்று
உயிர்ப்பித்துக்கொள்கின்றேன்:-
"திரும்பிப் போகமாட்டேன்
திருட்டுத்தனமாய்க்கூட
இணையத் தமிழ்த்தி(ண்)ணை."

ஆண்டுகள் முன்போல,
நீண்ட நடைகளுடன்
நடக்கலாமா நம் தேசம்?

===========

0பின்னூடுகை:

Post a Comment

<< Home