அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

தலைப்பில்லாக்கனவின் முடிப்பு

நான் காணாத காஷ்மீர்
எனது கண்ணீர்த்தேசமல்ல.

ஆனாலும்,
இக்குறிப்பு
காஷ்மீரம் பற்றிய
கனவுகளையும் பற்றியது.

~~~~~

உமது இறைமையின்பேரில்,
எம் கால்களைத்தான் கயவர்களுக்குக்
கடன் கொடுக்கக் கத்தரித்துக்கொண்டீர்;
களிம்பேறிப் போனவெம் கச்சாப்பொருட்
கனவுகளுக்கும் கூடவா கத்திரிக்கோல்?

அரியும் புலியும் அடியும் முடியும் தேடி
அடித்து முடியா ஆரண்யபூமியில்
மீண்டுமொரு முறை தூதனாய்க்
கடந்தது கவி கடற்சேது எனக்
கற்றுக்கொண்ட விதையில்
முளைத்தது ஒரு கனவு.

தன் வாழ்க்கையின்பேரில்
வாடகைக்கும்கூட வாய்மையை
வாய்க்கு வழங்கமறுத்துக்கொண்ட
வாமனன் நசுக்கிய வானரதேசத்தின்
பொய்மையைப் பற்றியும் புதுக்குவோம்
இன்னொரு பெருங் கனவு.

கடல்கடந்துபோனாலும் கலையாத
இளங்கனவுகளை மட்டுமே இனிமேல்
கற்றுக்கொடுக்கப்போகின்றோம்
எமது வரும் தலைமுறைக்கு.

நேரே நசுக்கத் திடமின்றி
நரிநிழலாய் நஞ்சனுப்பும்
நெஞ்ச நாட்டின்
நினைப்பினை மறுத்துமோ
நிகழும் இனி நம் கனவு?

அடைக்கலம் புகுந்தாரை
படைக்கலமுனை துருத்த
அலைக்கரம் தள்ளியதை
அறிந்தும் பிறந்ததுண்டு
ஓர் அந்தகாரத்துக்கனவு.

கால்முளைக்காக் கனவுகள்
எமதாகிப் போகினும்,
நாள்கடக்க நாம் மறுத்துக்
கனவால் கலைந்துபோகவிடமாட்டோம்
-குறைந்தபட்சம்,
ஓராளாய் நான் எனிலும்.

எனது கனவுகளின் கடைவிரிப்புக்கு
நானே சொந்தக்காரன்;
எனது வலை எல்லைப்படுத்தும்
பரப்பு என் எண்ணங்களுக்கு
மட்டுமே என்றான களம்.
விதைப்பது என் தொழில்;
முளைப்பதும் சடைப்பதும்
முழுவதுவும் என் கனவு.

முன் கண்காணாத காஷ்மீர்
எனது கண்ணீர்த்தேசமல்ல.

ஆனாலும்,
வானரத்துச்சேனை மேயக்கண்ட
ஒரு கனவுத்தொழிலாளி
நானான போதினிலே
காஷ்மீரின் கனவுகளை
என் மூக்குநுனிமட்டும்
முட்டமுட்டநுகர முடிகின்றது;
அடுத்தவர் அகங்காரம் அதில்
விளைத்த அந்தகாரச்
சொற்களைப் பேசமுடிகிறது

எனது கனவுகளுக்கு
செவியும் விழியுமில்லை;
நாவும் நாசியும் மட்டுமே
நடத்துகோல்.

~~~~~

காலத்தே,
பாக்கிஸ்தானத்திடையும்
ஹிந்துஸ்தானத்திடையும்
விளையும் காஷ்மீர் எனும்
பரவிய பனிக்குளிர்தேசம்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home