அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

நிழல்களில் எழுதுதல்

இடையிடை இழுக்காமல்
விட்டுப்போன கோலத்தின்
விளிம்பிலிருந்து தொடங்கும்
நகர்வு.

வண்டி செல்லமுன் தேவை
சேதப்பட்ட சாலையின்
சிறு செப்பனிடுகை.

தனக்குரிய தேசத்தின் திசையைக் கண்டுகொண்டால்,
ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்தல் என்பது
வெறும் சுண்டுவிரலால் சோகி சுண்டிவிளையாடும் கலை.

அதுவரையில்,
எப்போதும் தவிர்க்கின்ற திசையை நோக்கித் தள்ளப்படாதிருக்கவே
என் கடக்கின்ற காலடிகள் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும்.

உள்ளீழுத்து உறுப்பற்ற எழுத்து பறித்துவீழ்த்தும்
இணையக்குழிகளின் இருட்டுக்குரல்களை
எடுத்துப் பூசிக்கொள்ளாமல் நகர்தலென்பது
ஒரு கிண்ணத்தில் முட்டத் தண்ணீரெடுத்து
சிந்தாமல் முழு உலகைச் சுற்றும் செயல்.

எதிர்ப்பட்ட கோடுகளை இடையறுக்காது
எனதை மட்டும் இழுத்துச் செல்வது,
சூரியனில்லாத் தீவுக்கொரு யாத்திரை.

கோடில்லாத் தனிக்குழிகளுக்குள்
சொந்தக்குப்பையை மட்டும்
குவித்துக்கொண்டிருக்கலாம்.

எதிர்க்காற்றை ஏற்க மறுத்து
மூடும் இரும்புக்கதவுகளுள்
எங்கும் சுற்றும் கருமை;
இருட்டுக்குள் ஒருவன்
எப்படி இழுப்பது
தொடர் கோடு?

இயல்பிலே இழை தொட எரியக்கூடியவனுக்கு
என்றும் நிழல்களில் எழுதுதல் என்பது
இயக்கமுள்ள, ஓர் இரக்கமற்ற கணையியல்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home