அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

எதிர்த்திசைகளிற் பயணித்தல்

வீரியத்திற்கும் காதலுக்கும்
வெகுதொலைப்பட்ட தென் வயது
- என்னவளுக்கு,
புதுவதையில் குடியமர்
கவர் இராணித்தேனியின்
ஆண்தோற்றமல்ல இனியும் நான்.

என் தாய்க்கு,
பக்கத்திசையிற் காற்பல்பதித்துத்
தவழும் இளநண்டு
என் இருப்பு.
ஓரிணை கருமுலை வெண்பால்விடுத்து,
உலகொப்ப வியலா ஒரு தொட்டிற்குழவி.

நான்,
கிராமத்துப் போர்ப்பண்புப் பதம்-பிதற்றி;
ஒரு துருக்கத்தி முனை மத்தி தத்துதல்
என் மார்க்கநெறி.

திசையெதிர்ப்படகுகள் செல் 'சே'யும் புத்தனுமோ,
விசைபடப் பின் தொடர் குருட்டுத் துடுப்புவலிப்பானின்
நிலையிலாத் தத்துக்கிளிப்பாய்ச்சலின் எட்டுத்திசைக்கும்
ஏதும் சொல்லக் காத்திருக்கவில்லை இருப்பின் சாட்சியம்.

பல்லவி கிழிக்கும் உருப்பெருத்ததொரு குழவி,
ஓய்ந்த நேரத்தின் உணர்ச்சிப்பட்ட
உட்கோட்டையிருட்சுவர்களிலே
சாயம் விசிறியும் கோலம் கிறுக்கியும்
கிடப்பதென்றார் என் சிநேகர்.

ஆழமளக்கா மூளைத்துளைகளின்
அடிக்காரைக்கரைகளிலே
தரித்திருந்தான் என்னுள்ளே,
குறுக்கெழுத்துப் புதிர்ப் புள்ளிகள் வெல்தலுக்குமப்பால்
ஓரரிய சொல்தேடி, வற்றிய தொடர் தொகுப்பான் ஒருவன்.

நெளியும் என் நினைவுகளில்,
ஓய்வில்லாச்சிலந்தி, ஓரெட்டுக்கால் ஓசை ஏணையாட்டி,
துப்பிக்கிடந்தது தன்னுடல் மேலும் கீழும்,
கொள்ளை போன ஒரு களஞ்சியம்தன்
பல்லரும் சிந்தைப்பொருள்
தொங்கித் தங்கு
முன்னைப்புதையல்.

கழுவி எறியுண்ட காலத்து
ஒரு காணாதுபோன உரைநடையின் நளினமுடைப்பி,
பாதாளவுலகத்து, சந்தம்செத்துலர்ந்த கவிதைதம்
சிறுபொழுது இடுப்புவளைப்பானாய்
இன்னொரு முறை இடம் மாறித் தோன்றியபின்,
இங்கொரு ஆலைச்சொல்நெய்தற் தொழிலாளி
மெல்லப் பதுங்குண்டு கிடக்கின்றான்.

மொத்தத்தில்,
ஒத்துக்கொள்ளப்பட்டதோர்
இழிகுப்பைசேர்ப்பான், அடைசல் வடிகாலி
ஆன தன் ஆக்கத்து இருப்பிருந்து,
மீள்செய்கையிலே இறுதித் தொடுதல்செய்
ஒரு கழிவுபதப்படுத்தி உருமாறிப் பிறந்தான்.

கிண்டித் தேடுங்கள் எதையெனினும் என்னுள்ளே;
ஆனால், ஒரு இறைநூலின் பெருந்தூதனை அல்ல,
-தொடரழிவாம் உலகத்து இறுதிநாளை முற்கூறி,
எரிகல்லின் வால் பின்னே தடமிழைத்து
வரப்போகும் தேவர்களை, வாளித்த வாழ்வுகளை
தேடித்தருவோமெனும் செய்தி விற்கும்-
ஒரு கழிவிரக்கத்து இல்லாத இறைதூதனை அல்ல.

இப்படியாய்,
கேள்விக்கிருமிக்குளத்தே கிறுகிப்போன
குள்ளவுரு அலைவானின் பன்முகத்தடியே,
ஒழுங்கற்று நடுங்கு உயிர்த்துடிப்பின் வெம்மையுள்ளே
எங்கிருந்து எங்ஙனம் வரக்கூடும்
ஓசோன் உலகத்தே
ஒரு சாத்தானின் அழுக்கு!

0பின்னூடுகை:

Post a Comment

<< Home