அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

கடினச்செயலது காணீர்

தமிழ்க்கவிதை எழுதல் என்பது
செவ்வாயிற் சில்லுருட்டிக் கல்லுச்சுரண்டும்
கடிதான செயலாய்ப் போச்சு; காணீர்;
ஏது கரு பற்றி இயல் எடுத்து,
இரவிருந்து கந்தசஷ்டிக்கால
மௌனவிரதியெனத் தமிழ்த்தாய்த்தவம்
நோற்காக் குறையாய், எழுத்தளிப்பினும்,
ஏதேனக் கண் காணாது எடுத்தெறிந்தழித்து,
"எம்முன்னோர் இதுபற்றி எப்போதோ
சொல்லிப் போந்தார் எத்தனை விதமாய்
என்றறிகுவையோ எத்தனே, நீ? போ, போ"
-என்றுரைத்து,
வாரமொன்றுள் ஆறாந்தடவை வதக்கிக்
குழம்பு, கறி வைக்க கத்தரி வெட்ட
எடுத்துப் போவார் ஒரு நண்பர்; மற்றவரோ,
புத்தம்புதுப்படம்,
வாய்நுரைதள் நாய்களென, நாயகன், நாயகி
நாலாம்தலைமுறையும் நான்கு மரம் சுற்றி
ஓடக் காணப்போவார், சகியோடு சுகித்து.
பிஞ்சுப்பெண் வெண் மேகத்தை, அதன்
துஞ்சு மஞ்சப் பஞ்சு மேனி மேல்,
நான் கொள் மூச்சுத்திணறு மூழ் மோகத்தை,
நாலடி, அதுவும் பின், சிறுகத் தரித்துக் கேட்போர்
காலம் கருதி குறுகத்தறித்தோர் இரு வரிக் குறள்
எடுத்து இசைத்து வைப்போமெனில், ஐய்யய்யோ!!
"போகாயோ போக்கற்றவா, வேறேதும் விறகு வெட்டும்
வேலையேதும் கூடவோ கிடையாது செய்வினையாய், உனக்கு?
காளிதாசன், கம்பதாசன், கண்ணதாசன்,
இன்னுமெத்தனையோ பெயரறியாப் பொடிப்பொடி வம்பதாசர்கள்
வருஷமாய்க் காட்டா காட்டாற்று மழைமேகம்,
பாட்டிடப் பற்றி வந்தனையோ, பாங்காய் வர்ஷம்
அமிர்தவர்ஷனி ஆலாபனையிட்டுச் சொரிந்திட?"
-சரி போகாய் குளிர்மேகம்;
போ, பறந்தேகு பிறருனைப் பாடாத தேசத்தே,
குறைந்தபட்சம் பாடுவதைச் சாடாத தேசத்தே
என்று வளிவெளி எடுத்தெறிந்து, பின், வந்தமர்ந்து,
முற் சொன்னவை, சொல்ல எண்ணியிருக்கலாம்
என்றெண்ணியவை எல்லாம் தவிர்த்து,
பாலை, முல்லை, நெய்தல், மருத நிலமெல்லாம்
நிலம் புதைந்து, நெய் எரித்து, நேற்றில்,
நினைவிற் போனோர்க்காய்ப் பட்டா விட்டு,
ஆறாம் திணையென அண்மைக்காலத்தே
அகலக்கால் விரி(ந்)த்தெழு,
அவதியும் அதோகதியும் சார் அகதி நிலம்
நேரிசைக்கரும்பாவில் ஓரிசை ஒலிக்கவெனில்,
"ஆருக்கப்பா அவகாசம் உன் அவலமும் அழுகையும்
பெரும் பையெடுத்துப் பொதி கட்டிக்கொண்டு
போக்குவரத்துப் பேரூந்தேனும் போகையில்
பின் நில் நீலப்புடவைப்பெண்ணுடன்
உரசிச் சரசமிடுகையில் ஓரிரு வரியேனும் படிக்க?"
இதுவே இன்றைய தமிழ்தன் நியதியெனில்,
இதோ கைவசம் பொருள் ஆவது காணென
ம(`)ற்றுமொழி முழிபிதுங்கக் கொள்ளைகொண்டு,
"மாதா கோவிலை மாணவர் கோலம்கொள்
மாடங்கள், மணிமண்டபங்கள் கொள்ளச்செய்வோம்"
என்றொரு கருத்தே கணினிக் கவி படிக்க,
ஆரோ சொன்னார், அடுத்த அறையிருந்தோ, அஞ்சல் விட்டோ,
-(மன்னிக்கவும்; ஏதென மறந்து போச்சு; வயசு காணீர்)-
"ஐயன்மீர், வணக்கம்; ஆசுகவி பாரதி அன்றே அறிக்கை
விட்டான்,
-பள்ளித்தலமனைத்தும் கோவில் செய்குவோம்-; அறிக; நன்றி."
சரியப்பா சமாதானம்! சமாதானம்!! பாரீர், பாரில் கணினியில்
என் கைமேலாய் சமாதானத் தாயின் வெண்புறாத் தேவதை
மணிக்கொடி;
பின்னர், அங்கெனை அதட்டி, தோழர் மருதமுத்து, நாலு பக்கம்,
தொலையாமல், காலம் கடந்து, மாதம் தப்பியேனும் கைக்கிடைத்த
கணையாழி வழிக் கனன்று காய்ச்சிச் சினந்தார்,
"தோழ, இந்தா பஞ்சு; இவர் சேதிக்குக் காதினைப்
பொத்திக்கொள்;
ஆமாம், அப்படித்தான்; வலதும், இடதும்; இரண்டுமே, இறுகவே;
பொய், இது புரோகிதர் தம் புனைசுருட்டு;
புத்தன், போதிமரத்தடி செத்துப்போகுமுன்
சொன்னதப்பா அது; செய்ததப்பா அன்று."
போச்ச்ச்ச்சுடா!!
ஆக, அதுவும் ஆக்கக்கூற்றென்று ஆக்குவது அழகல்ல;
ஆகின், அதை ஆரும் காணில், அது என் தவறும் அவமானமுமாம்;
புதிதாய்,
ஸ்ரீபன் கிங்கும் ஸ்ரீபன் ஹோகிங்கும்,
வண்ணமிகு வன்னட்டை வெளியீடு,
கையடங்கு மலிவு முதற்பதிப்பு, எங்கெங்கும் இட்டுவைத்த
இற்றைக் கருத்தெல்லாம், இலகு தமிழ்
புதுக்க விதைத்து எடுத்துரைக்கச் சித்தம் கொள்ள,
"ஆருக்கு அன்ப, அது வேணும், அந்நியச் சரக்கெல்லாம்?
ஆங்கிலத்தே, அங்கேயே படித்துக் கொள்வோம், கொல்வோம்,
ஆங்காங்கே, ஹம்பேகர் நல் நண்பியுடன்
நாம் எங்கேனும் உள்விழுங்கையிலே;
சொந்த எழில் நடை, கவிவன வளம் வற்றி அற்றுப் போனால்,
பேசாமல், புண்ணாக்கு பெட்டிக்குள் எடுத்துப்போய்
புல்லும் கொள்ளும் கழிநீரும்
அதிற் கலந்து, கொல்லைக்குள்
மாட்டுக்கும் கோழிக்கும் தீவனம் வைப்பீரெனில்
மாநிலத்திற்கேனும் பொருளாதாரம் உயர்த்து வாகான செயலல்லோ?"
இடித்துரைத்துப்போனார் செவ்விரத்த உதட்டுச் சாயம் வாங்க,
ஏனோ,
"நேரத்தூரமும் ஆங்கே வெளிதன் விரிவும்", இடைதூங்கு கைப்பை,
பக்குவமாய் வைத்தெடுத்து என் பாங்கியருத்தி,சென்ற மாலை(,
எட்டாம் தடவையும் வாசிபக்க அடையாளம் காண்குறி,
இரண்டாம் தாளேயட்டி உறவாடி இருத்தல்,
போன இரு திங்கள் பொறுமையாய் நான் காண).
ஆக விட்டுப் போய், அங்குமிங்கும் அப்பாடா என்று அசந்திருந்த
ஆளையாள் பார்த்து அரண்டு விழித்திருந்த,
அழகுஆள்-ஆழ்தமிழுக்குதவா விந்தைமிகு விஞ்ஞானப்புதுமை பற்றி
விறுவிறுப்பாய் வருத்தமின்றி விருத்தம் இரண்டு,
கணினி மேலொன்று, கலப்பெருக்கம்/பிரிவுக்கு மற்றொன்று,
அகவி விட்டு அஞ்சலேற்ற ஆசை கொள்ள,
ஆரைய்யா, அது சொன்னது அரை வரி அஞ்சலிலே,
"தொழில்நுட்பம் நம்மூர்க்கு ஒளியாண்டுத்தொலைத்தூரம்"?
அதிலும், சுவை+பொருள் நீயே நயந்தறியென்று
மேலேதும் புட்டும் சொல்லவில்லை; புரியவும் சொல்லவில்லை.
விட்டுச் சொல்லாமல் புரிதல்வேண்டுமாம் சொல், எம்மவர்
நுட்பம் தன் தட்ப வெட்ப விஷமம்.
பிறகென்ன பேசக்கிடக்கிங்கே?
முன்னோர் எச்சமாய் எனக்கு
யாப்பிசைக்க விட்டுப்போனதுவும் ஏதுமில்லை;
பின்னே வந்ததுவும், வரியாய்ப் பொறியிட்டால்,
பிரித்துப் படிக்கவும் பொறுமை போதவில்லை,
தேவை ஏதுமில்லை அல்லது தோளிற்கின்னும் ஏறவில்லை.
எனக்கென்ன பயனெனப்படுதலெனில்,
பேசாமல்,
எழுது கோல் கொண்டு சீத்தலை கொள்ளச் சாத்தி,
எழுத்து இறங்கு கடதாசியெல்லாம்
கரைபுரண்டோடு மில்வோக்கி மழைநீரில்,
மனைகொள் என் மலையூர்க் கடல்நீரில்,
மடித்து, கப்பல், படகென்று ஓட விட்டாலும் போச்சு!
மீளக்
கலிமிஞ்சிக் களியுண்டு கவிச்செக்கிழுத்துச் சுற்றாமல்,
களிகொண்டு, காற்றேகிக் கீழை மேலைக் கடலெங்கும்
கலம் விட்ட தமிழ் வீரக் கதை பொறிபடலும் ஆச்சு!!

0பின்னூடுகை:

Post a Comment

<< Home