அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

ஒரு சிறு கற்றுக்குட்டிக்கோமாளியின் கவிக்கனவுகள்

ஆற்றில் இறால் பிடித்தலும் பிடித்ததை மீள வேலை
மிகைக்கெட்டு
அரையுயிராய்ச் சேற்றிலிடுதலும் என்று
எனக்கும் சில மயக்கு மோகனக் கவித்துவக்
கனவுகள் உண்டு,
காதல் பற்றி மரம் சுற்றிச்சுற்றிக்
குமரிக்கை+ கால்+ கழுத்து பற்றிப்
பாட, ஓட, தேட, பாய, படுக்க,
பாடாய்ப்படுத்த,
இயந்திர இடி இசைக்குப் பொருந்த( ¡) க் கவிதை
கோர்க்கும்
திரைப்படக்கவிகள்போல.

பெரும் பட்டியலாய், முட்சூரைப்பற்றையாய்ப் படுத்தாமல்,
சிக்கனமாய், சிறிதாய், சில கீழே;

ஒட்டிடு அழுக்கேறு சிறுமுழவேட்டி இடை கட்டி,
என் முகம் முற்றாயே உணரா மக்கள் தொழு
தொலை தூரத்து
மூளிக்கோபுரப் மூஷிகவாகனர் கோவில் ஒன்றின்
முன்றலிலே
மழை கொட்டு புரட்டாதிச் சதுர்த்திப் புண்ணியநாள்
ஒன்றிற்கு
நாள் முழுக்கப் பட்டினி குடல் பரந்து
நனைத்திருக்க,
குலுக்கிப்பெறு சிறு தகரப்பேணிப் பிச்சைச்சில்லறை,
இரவு விரல் நடுங்க ஒன்றொன்றாய் எண்ணி
வியந்திருக்க.....

நல்லதோ கெட்டதோ நாளைக்கொருவேலை
நாட்சம்பளத்திற்கேனும் நான் வாழக் கிட்டின்,
பண்டைத்தமிழர் பண்பாட்டுக் கட்டுரைகள் பக்கம்பக்கமாய்,
பலர் ' பலே, பேஷ், பார் பார், படார்
படார்" என்று
பலமாய்க் கைதட்ட
இட்டுவைக்கும் வெட்டிவேலையெல்லாம் முற்றாய் விட்டுத்தொலைத்து,
பவ்வியமாய், சிறப்பான ஒற்றர்போல் சத்தமின்றி,
சத்தாக,
இற்றைத் தமிழன் ஒருவன்
ஒற்றைநேரப்பட்டினியேனும் அற்றுத் தொலைய
க்கம் ஏதும் செய்திருக்க.......

புத்திரர் விட்டதொரு முது அனாதைப்பெற்றாளை,
வாழ - என்மட்டில்- வளம்படுத்தி,
அவள் போக, மாலையிட்டு, பாடையிட்டுச் சென்று,
அந்திமத்தீ சுடலை வைத்து,
மிஞ்சு கைப்பிடி நீறு,
அவள் வேண்டு அழுக்கேறு
புனித றொன்றிற் கரைத்துவைக்க.............

மின்சாரம் அற்றதொரு மேற்காபிரிக்கக்குக்கிராமத்தே,
தன்னாலே சிலகாலம் மனைப்பெண்டோடு சென்றிருந்து,
அவர் முன்னாளைப் பெரும் சீர்ப்பண்பாடு கற்று, பின்,
அது பற்றி தளை விட்ட ஒரு சிறு சீர்
வெண்பாவேனும்
தமிழுக்குப் புதிதாக்கித்தர............

எம் உயிருக்கு இன் தமிழ் தந்தோருக்கும்
நன் தமிழுக்குத் தம் உயிர் தந்தோர்க்கும்
- என் குறளிக்கோமாளிப்புத்திக்கு என்றேனும் இயலுமென்றால்-
சமர்ப்பணமாய் தமிழில் ஒரு தரமான விஞ்ஞான
வினைநூல் தந்து
அவர் தாள் வணங்கி நான் போக..........

இத்தனையாய்,
கற்பனையாய் மட்டும் விற்பனை காமல்,
இவையெல்லாம் இனிதே இனியானால், அதன் பின்னே,
ஆடிக் கத்தரி வெயிலிலே,
நெடுநிழல் மரம் கரை தொட வளைந்து
சாய்ந்தோடு ஒரு தெளிந்த குளிர்ச்சிற்றாற்றில்,
இடுப்பளவு நீர் நின்று,
இறால் பிடித்தலும் பிடித்ததை மீள வேலை
மிகைக்கெட்டு
அரையுயிராய்ச் சேற்றிலிடுதலும் என்று
எனக்கும் சில மயக்கு மோகனக்
கவித்துவக் கனவுகள் மேலும் வளர
இடம் உண்டு,
சிறு பட்டியலாய் மேலே நான் சொல்லி
இருந்ததவைதன்மேலாக.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home