அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

கருத்துச்சுதந்திரம்

"அம்மணி,
நல்முகமன்கள்!
***** தினசரி நிருபர், நான்;
நண்பர், புகைப்படப்பிடிப்பாளர்;
மத்தியகிழக்குக் குர்திஷ் மக்கள்
காண் கொடுமை பற்றித் தங்கள்
கருத்தறிந்தேகிட ஆவல்.
கருத்துச்சுதந்திரம் கவிபாடு நம்நாட்டே
அச்சமின்றி உரைக்க, எங்களுக்கு, எம்வாசகர்கட்கு"
"அணில்கள் அழகானவை;
அமைதியானவை; அன்பானவை;
அத்துடன், அறிவானவையுங்கூட.
மரம், கொடி, செடி, மதில்,
கோடை, வாடை, வசந்தம், மாரி
என்றில்லாது எங்கெங்கும் அவையே,
இல்லையென்பீரோ இந்நாட்டே?
ஆடும் அவை வால்கள்,
அருகே உடல் உரசி ஓடுவது,
ஆஹா! ஆஹாஹா! அற்புதம்!
நதிக்கரை புசுபுசு என்றாடும்
பசும்புற்புதர் தடவு ஆனந்தம்!
முட்டுக்காய்ப் பருவக்கொய்யாக்கனி
நிலவெனத் தேய்வளர் பற்துருவிக்
கள்ளஞ்செய்வது காண்பாருளரோ
என்று சுற்றி மருளும்
பே(`)தைக்கண் என்சொல்ல?!
சேதுகடக்கும் இராமர்சேவைக்குப்
பேறு பெற்ற மூ கருங்கோட்டு முதுகு.
மது மண்டு மந்தியெனத் துள்ளி
மரமுடைக்காது கிளை தாவும்
மாயமறி உயிர்கொள் சிறு மெத்தை.
ஆனால்,
இத்தனைக்குமிடையே தொல்லை
எத்தனை அவை தம் உரிமை உயிர்வாழ?
முரட்டுச்சிறுவர் கல்லேறு கவண்;
சிறு கொடும் நகர் பூனை வாய்;
பாதை போம் யமனேறு வாகனம்;
தாழப் பறந்துடல் கொள் பருந்து;
இத்தனையும் கொல்லும் இச்
சின்னவுயிர் அணில் நேயம்.
இக்கொலைவெறி,
நிச்சயமாய், நிரந்திரத்திற்கு
நச்சுலகே அற்றுப்போக
மக்கள்போராட்டம் வேண்டாமோ
என்றெண்ணம் எப்போதும் என்மனத்தே."

"...ஆக, முக்கியபிரச்சனை இது;
அறிந்தோம்; அணில்நேயம் மிக்க அவசியம்;
அதுவே எம்தேச முக்கியபிரச்சனை;
இறுதியில், இப்போது,
ஆகட்டும் படம் இரண்டு;
அப்படித் திரும்புங்கள்; அது முடிந்தது;
இப்படியேயும் வாள்கொள்
சிங்கக்கொடியோடொன்று.
நேர்த்தி! மிக்க நேர்த்தி!!
நேர்முகம்போலவே நிழற்படமும் மக்கள்
நெஞ்சமெங்கும் படிவுறுமென நம்புவோம்.
உங்கள் அத்தனை கருத்தும் வெட்டலின்றி
எங்கள் பத்திரிகை இக்கிழமை இறுதி வரும்.
நன்றி;
சென்று வருவோம்
நல்லிரவாகட்டும் உங்களுக்கும்."

0பின்னூடுகை:

Post a Comment

<< Home