அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

கவிப்பாவம்

இனி கவி எழுதும் காரியமே வேண்டாம் எனப்படுகிறது;
வீணாய் தமிழிற் தூங்கும் சொல்லெல்லாம் தட்டி எழுப்பி
அக்குரோணி வரியிட்டு கருட வியூக அழகிட்டு,
அவற்றுள் வாகானது தேடிக்கண்டு
தானைக்கு தலைமைக்கு விட்டு,
பின்,
வேற்றுச்சொற்களாற் காயப்படுத்தும்
வேற்றுச் சொற்களைக் கோரப்படுத்தும் காரியம்;
சேவற்சண்டை மோதவிட்டு தம் பணம் பந்தயம் பார்த்திருக்கும்
மனிதரைப் போல்,
நாம் போடும் கோபங்களுக்கு,
அப்பாவிச் சொற்களேன் தமக்குள்
அடிவாங்கிச் செத்துப்போக?
பெரிய பாவங்களின் சிலுவைகள் தோள் கனக்கையிலே
சின்னப்பாவங்களேனும்
பாவனைக்குச் செத்துப்போகட்டும்.
அதனால்,
இனி கவி எழுதும் காரியம் எல்லாம் வேண்டாம் எனப்படுகிறது;

0பின்னூடுகை:

Post a Comment

<< Home