அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

கவலைகள்

கவலைகள் மனப்பைக்குட் கனதியாய்
வழங்கப்படக் காத்திருப்பவை,
வந்திருக்க கடுகி நிற்பவை
என்று வகையாய் வரிசையிட்டு.

போகையில், வருகையில்,
இனாமாய்ப் பெற்றவை,
பாதையிற் பொறுக்கியவை
வேறு, பிச்சைக்காரன் பொதி
பிய்ப்பேன் என்று பிதுங்கிப் பேசும்.

"கொடுக்கையிற் பாதியாய்ப் போகும்;
பையும் பாரம் இலேசாய்க் காணும்;
கண்டவர்க்கு, நின்றவர்க்கு
கொண்டவளுக்கு, பெற்றவர்க்கு
பிய்த்து பாகம் பிரித்தேனென்று
கொடுத்துப் போ சத்தம் செய்யாமல்"
என்று வழி சொல்லித் தாம் வாங்காது
"இதோ! எம் பகுதிக்கென்றும் கொண்டிரு" என்றும்
கொஞ்சம் தந்து, தம் வழி போனார் பலர்
நேற்றைக்கு, இன்றைக்கு,
நெடுநாளைக்கு, இச் செயல் நிகழ்த்தி.

வழக்கம்போல,
வீட்டுக்கவலைகளை,
அலுவலகச் சோற்றுமேசையில்
விற்றுப் போக்குவோம் என்று காத்திருந்தால்,
மணி மதியம் காண அவை விற்க,
பேரம் பேசிப் பண்டமாற்றும்
வாங்குவோர் வீட்டுக்கவலையெல்லாம்
அன்றைய அலுவலகக்கவலைகூட
மீள நைந்த பை நிரப்பவேண்டும்.
பின், அம்மாலை தோள் தூக்கி,
பின்மாலை, நெரி வாகனமேற்றி,
வீட்டுத்தோழிக்கு,
வெண்காயம் வெட்டிக்கொடுக்கையிற்
தள்ளிப்போவோமென்றால்,
காத்திருப்பாள் அவள்,
மகள் எழுத்தாணியுடன் விரல் வெட்டித் தள்ளிய விபரம்,
வீட்டுக்கு மின்சாரம், தொலைபேசி தந்தவர் விலைக்கணக்கு,
எல்லாம் பதிலுக்கு விற்றுத்தள்ள,

அத்தனைபேர்க்கும் பை முட்டித் தள்ளுகையில்
பொய் பேசி, தள்ளுபடியிலேனும்
கவலை விற்றுத் தள்ளுவது எப்படி?

பேசாமல்,
பின்னறைப் பெட்டியிலே, பரண் கோணிக்குப்பையிலே
கண் எட்டாத் தூரத்திலே "தொலை கிடந்து காலை வரை"
என்றெறிந்து வைத்து இரவு விழிபூட்டிக்கிடப்போமென்றாலும்
ஏற்கனவே இட்டுவைத்தவை வேறெழுந்து நர்த்தனமாடி,
"போதாதோ இத்தனைக்கும் நாமெல்லாம் இவ்விடத்தே,
இன்னும் எத்தனையோ காலத்திற்கு இருளடங்கிக் கிடத்தற்கு"
என்றிளித்துக் காட்டும் பல் எத்தனையோ எத்தர்களாய்.

ஆக,
பையெல்லாம் புதிதாயும் பழசாயும் கவலை
முகம் பெயர்ந்து போயிருப்பினும்
தொகை இடம் பெயர்ந்திருந்து
என்றைக்கும் நானறியேன்.

ஏன் இத்தனை எடுத்துரைக்க?
இங்கே பாருங்கள்;
இப்போது மேசையின் கீழ்
பள்ளிக்குப் போகாமல் ஒளித்திருக்கும்
குட்டிப் பையனென்று கால் சுரண்டிச்
சுற்றித் துள்ளுமொரு புதுக்கவலை,
"ஐயோ படுபாவி! கவலை பற்றி
இத்தனை கணம் பேசி இங்கே
எத்தனை பேருக்கு
நினைவு தந்தாய்,
அவர் மனச் செழும்பு மங்கிக் கிட
மறை கவலை, பொங்கிக் கிளம்பிட
புது வழி?"

0பின்னூடுகை:

Post a Comment

<< Home