அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

கவிமூலம்

கவிதை எதற்கென்று படுகிறது;
போகாத நேரத்தைப் பிடித்துத் தள்ளிவைக்கவா, இல்லை
போதாத நேரத்தில் பொடி மூச்சென்றிட்டு மனப்புழுதி விரட்டி
வைக்கவா?
எதுவோ, கவிதை இந்தக் காலையில் எனக்குத் தேவைப்பட்டிருக்கிறது.
நேரத்தின் போதும் போதாமையிற்
பொதித்து வைத்திருக்கப்பட்டில்லை கவிதைப் புறப்பாடு என்றொரு
உட்தோற்றம்.
உட்கிடக்கும் கனத்தின் வர்க்கவெளிப்பாடே இக்காலைக்கவி,
இன்னொரு மாலைக் கவி, மதியக்கவி என்பன போல என்றும் ஒரு
வெளிமாயைத்தோற்றம்.
அத்வைத அவத்தை மனத்திற்கு தற்போது
சார்ந்ததெது, சாராமற் தானே இயங்கிக் கிடப்பதெது,
எல்லாமே சார்ந்திருப்பதால் வண்ணம் கொண்டு
உள்வடிவு விளக்கம் வியாக்கியானிக்காமற் சும்மா கிடக்கும்.
அதனால், சொல்லத்தெரியவில்லை,
இந்தக் காலைக் கவிதை எதற்கென?
போகாத நேரத்தைப் பிடித்துத் தள்ளிவைக்கவா, இல்லை
போதாத நேரத்தில் பொடி மூச்சென்றிட்டு மனப்புழுதி விரட்டி
வைக்கவா?
எதுவோ, கவிதை இந்தக் காலையில் எனக்குத் தேவைப்பட்டிருக்கிறது.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home