அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

உள்வளைந்து கூத்தாடி

மௌனித்திருப்பது சொர்க்கம்.

மனமுதிர்ச்சி என்பது
நீரடியே தூண்டில் இரையோடோடிய
கெண்டை மீன்-
வயதை ஏமாற்றி விடுகிறது.

கழைக்கூத்தாடி விளையாட்டில்
கயிற்றிலிருந்து தள்ளப்பட்டு,
பின்
நடுநிலைக்கவனம்
தொலைத்தவனாய்க் குற்றச்சாட்டு.

எனக்குத் தெரிந்து
என் அவயவங்களில்
நூல்கள்
தைக்கப்பட்டிருக்கவில்லை.
ஆனால்,
என்னை ஆட்டும் வித்தைக்காரர்
இருப்பதாக இங்கே பேச்சு.

கலை இறக்காது
ஆட்டம் மட்டும்தான்
எனக்கு முக்கியமே ஒழிய,
சிறப்பு ஆட்டக்காரர் யாரென்பதில்லை.

நான்கு பேரின்
'நான்'களுக்கு
புரியாமல்
நான்
இனியும் அடிபடமுடியாது.

ஆகையினால்,
மௌனித்திருப்பது சொர்க்கம்
இனி.

இன்றைக்குத் தெரிந்தது,
சாப்பாடு போட எனக்கொரு
மனைவி இருப்பது;
சட்டைப் தெறி தைக்கவும்
இருப்பதுபோல.

நாளைக்குச் செய்ய
சீவனத்துக்கான வேலை
இருப்பது போல....

தூசு படிந்து
வாசிக்காத புத்தகங்கள்
காற்று நுகர்ந்து கிடப்பது....

வீதி மருங்கில்
மொட்டுத் தெறித்த பூக்கள்
மூக்கிற் படுதலுக்காய்க்
காத்திருத்தல்போல....

ஆகையினால்,
மௌனித்திருப்பது சொர்க்கம்
இனி.

இதுவரை நானறிந்து
வாழ்ந்தது
போலியல்ல;
என்றாலும்,
இனியும் எவர்க்கும் வேண்டாம்
எதற்கும் ஊகம்.

ஊமைக்
காயப்படுத்த முயலாததுபோல,
கழுத்திலேற்றி வைக்கவும்
முயலாதே இருந்தேன்.
என்
பேச்சுக்கள்
சிலவேளை
தீப்பொறி காட்டிப்போயிருக்கலாம்.
ஆனால்,
போலித்தனத்தில்,
போக்கிரித்தனத்தில்,
பிறர் வேலிக்குள்
வலிப்படுத்தப் பிறந்ததல்ல,
முதிர்ச்சியற்ற எழுத்துருக்கள்.

புரிந்துகொள்ளமுயன்றது தவறா,
புரிந்துகொள்ளமற்போனது தவறா,
என்பவை யாரும் புரியாமலே
போகலாம் எனக்குப் புரியாதுபோலவே....
எனக்குக் கவலையில்லை.

எனக்கென ஒரு கூடு
சொந்தமாக உண்டு;
அதற்கென்று வேலிகள்
நாட்டிக் கொள்ள
முடியும் எனக்கு.
பிறக்கும் நாளைக்குப்
பண்ணத் தொழில் உண்டு.
சொந்தச் சுக துக்கங்கள்
உண்டு.

ஆகையினால்,
மௌனித்திருப்பது சொர்க்கம்
இனி.

என் வாழ்வு போலியல்ல;
வெறும் போற்றிபோற்றி புகழுக்காய்
ஏங்கி மடிதல்ல;
பொழுது போக்குமல்ல....

சிலருக்கு எப்போதோ புரிந்திருக்கும்....
எனக்கு இப்போது புரிகிறது....
எல்லோருக்கும் என்றாவது புரியும்....

இந்த எழுத்துக்கள்,
· பயன்படுத்தாவை;
ஆனாலும்,
திட்டமிட்டே
முதந் முதல் எழுதும்
ஆயுத எழுத்துக்கள்.

புரியாத எழுத்துக்கள்
போர்ப்பிரகடனம் என்று கண்டபின்னே,
இது புரிந்தே
ஆயுதபூசை அற்றே
ஆயுதம் சமர்ப்பித்து
துறவறம் போகும்
இன்றையக் காட்சி ஆகட்டும்.

எனக்கென்று ஒரு கூடு உண்டு;
எனக்கென்று ஒரு பேடு உண்டு;
எனக்கென்று ஒரு நாளை உண்டு;
ஆனால்,
எனக்கென்று போலித்தனம் மட்டும் இருந்ததில்லை.
நாளைக்கும் முளை விட்டுத் தழைக்காது.

ஆகையினால்,
மௌனித்திருப்பது சொர்க்கம்
இனி.

கழைக்கூத்தாடி,
கயிற்றை விட்டு இறங்கி,
வெறும் கடலை வியாபாரம் மட்டுமினி
பண்ணிக்கிடப்பான்.

அவனுக்கென்று ஒரு கூடு உண்டு;
அவனுக்கென்று ஒரு பேடு உண்டு;
அவனுக்கென்று ஒரு நாளை உண்டு;
ஆனால்,
அவனுக்கென்று போலித்தனம் மட்டும் இருந்ததில்லை.
நாளைக்கும்
விதையற்ற வெளியில்
முளை விட்டுத் தழைக்காது,
முகமூடி முகம்.

ஆகையினால்,
மௌனித்திருப்பது சொர்க்கம்
இனி.

ஆனாலும்,
காற்றுவெளி கரகரத்து ஓசைப்பட,
நித்தியத்துக்கு
காலமும்
நானும்
தூங்கோம்.

- '98 கார்த்திகை

0பின்னூடுகை:

Post a Comment

<< Home