அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

குந்தவையின் சிவிகை

சிறு பல்லக்கு;
ஓட்டைச் சிறுபல்லக்கு;
ஒரு காலத்தே,
ஒரே ஒரு
மெல்லிடை ஒய்யார இளவரசியோ,
பூனைமீசை ஒல்லி இளவரசனோ
சங்கீதநாற்காலிக்கான சண்டைபோலிட்டு
ஒரு பொழுதில் ஒருவர் மட்டும் ஒருக்களித்து அமர்ந்திருக்ககூடிய
கறுத்துப்போன சிறு பொத்தல் ஒட்டல் தட்டிமறைப்புப் பல்லக்கு.
முன்னை போன சைக்கிள்கைப்பிடிப் பெருமீசைப்பெருவழுதிப்பாட்டனார்
விட்டுப்போன
துருப்பிடித்த பிடி முறி வாளொன்றோடு மிஞ்சிப்போன
பெரும்புழுதிப்பல்லக்கு.

சிங்காசனமேறு வீறுகொள்முன்னோர் அமர் சிவிகை என்பாள் இளவரசி
(இன்றைய '98)
செங்கல் இடிந்த சமையற்கட்டுப்பின்புறத்தில் சாணம் தட்டி வரட்டி
வெயிலிட்டு;
பாட்டனார் காலத்தில் பட்டும் பளபளப்பும்
புதுமணமக்கள்போலத் தொட்டுத்தொட்டு இழைந்ததென்று மிகப்பெருமை,
தன் தொகுதிக் கள்ள வாக்கெல்லாம் விழுந்த வேட்பாளர்
முகப்பளபளப்பு
கணம் நிற்கும்
ஒட்டுப்போட்ட ஊத்தை உடுதுணியிட்ட ஒய்யாரநாச்சிக் குந்தவைக்கு.

"எங்க தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது" என்றவர் யார்?
வைக்கம் முகமது பஷீரா?
சரிந்துபோன "சாய்வுநாற்காலி' பற்றிச் சல்லடைபோட்டவர் ....
...........தோப்பில்
மீரானாக்கும்;
எல்லாமே கலக்கமாய் மறந்துபோச்சு; ஆனால்,
குந்தியிருக்கும் தென்னோலைக் குச்சு,
வைக்கோல் அற்று ஒட்டிச்சாகும் மாட்டின் கொட்டிலும் உள்ளிட்டு
விற்பனைக்கு வந்துங்கூட
முன் தோள் தூக்கு தேக்கம் மரப்பிடி,
அப்பன் அரசர் செருக்களம் சிரம் செதுக்கா சிருங்காரப்பெருவழுதி
முன்னொருபோது அடுக்களை விறகுக்கு ஆகுமென அறுத்துப்போட்ட
எலிதூங்கு சிவிகை,
தான் தூங்காமல் குந்தவையின் தனிப் பெருமைக்கு இன்னும்
காத்திருப்பது
மறந்தில்லை கணமும்
வேலையின்றி ஊர்மேயும் தம்பி பாராளும்பெரும்வழுதி பராந்தகனுக்கு.

அம்மை பெருங்கோதை வானதி நாச்சியார்,
வாதத்தினால் கால்வலியெழுகையிலும்
வாணலியில் வதங்கி வறுக்கையிலும்
தனக்குட் புறுபுறுத்து இன்னமும்
வாய் வாடாது
சொல்லிக்கொண்டிருக்கிறார்,
முப்பத்தேழு வயது முதுமனுசி ஆகிவிட்ட சிறுபிராட்டிக்கு
வரும் வாணர்குலவீரனுக்கே வரதட்சணை சிவிகை என்று.

குந்தவைக்கு ஒரு அதீத நம்பிக்கை,
அது, அதைவிட அதீத வரள் நப்பாசை இல்லையென்றால்.
அக்கை பூங்கோதைப்பிராட்டிக்கு,
மூக்குடைந்த மூளைச் சிவிகையிலும் மேலாய்
ஆடிக்காற்றிற்கும் ஐப்பசிப் புயல் மழைக்கும்
ஓடம் ஓட்டும் அளவிற்கு புது ஆடிப் பொன்னிப்புனல் பாய,
ஒழுகித்தள்ளும் வீட்டிற்கு
வெற்று விடலைக் கைக்கிளை கொண்டு விழுவேன் உன்மேலென்று
வெருட்டி,
கிளைக் கை வீசு முதிர் பூவரசு மரமுதிர்த்த சுள்ளி
வெட்ட,
இளவல் பராந்தகன் இளைத்திளைத்துத் துருச் சுரண்டும்
கைப்பிடி வளைந்த கறட்கறுப்புவாளில் ஒரு காதல்;
ஆண்ட அவர்தம் பரம்பரைதன் ஆண்மையோங்குதலின் அடையாளம் அது
- முதுகுடும்பிப்பெருவழுதியின் முப்பதாறாவது தலைமுறை மூத்த பிராட்டி
அவள் கருத்து,
இது, குந்தவையின் நிம்மதியின் கொள்முதலுக்கு.

வரட்டிதட்டா மழை மாலைகளில்
குந்தவைக்குச் சிவிகையுட் சில நேரம் குட்டித் தூக்கம் உண்டு,
வானதிப்பிராட்டி வாணலியில் வந்து வறு என்று
வறுத்தெடுக்காவிட்டிருந்தால்.
ஆண்டு ஐம்பதற்கு இன்னும் ஆண்டு ஆறிருக்கும் அக்கை,
முன்னொரு சுந்தரபாண்டியன் கழுத்து சுட்டித்தனமாய்ச் சுற்றி கோட்டைச்சுவர்
வேல்முனை
குத்திக் கட்டியிட
வெட்டித்தந்து முனை முறிந்து கூருடன்
தன் வினை செத்த வாளுக்கு எண்ணைய் போட்டிருப்பாளாம் அந்நேரம்
தன் வண்ணம் செத்த வாலிப எண்ணங்களுக்கும் மெருகூட்டி.
குந்தவைக்கும் குட்டிக்குட்டியாய் கெட்டிக்கனவுகள் கொட்டி வரும்,
மிச்சமுள்ள இளமையின் கெட்டகணங்கள் கூத்தாட:
திமிறும் அவள் உடற் தேவைகளாய் தாம் அடங்க மறுத்து ஆள
அலெக்ஸாண்டர் தேடும்
அரபுப் புரவிகள் கொற்கைத்துறையிலோ கொள்ளிடத்தின்கண்ணேதோ சிறு
பட்டினத்திலோ
வந்திறங்கும்;
நீலக்கண் நெடும் யவனர்கள், பூனைக்கண் குறும் சீனர்கள்,
அவள் துகிலாய், அகில் புகை எழு துயில் மஞ்ச விரிப்பாய்,
தம் முகில்மென்பட்டு ஏற்கக்
கெஞ்சி,
பெற்று
அவள் விசிறிக் கொட்டு பாண்டி வெண் சிறு பெரு முத்து
தேடிப்பொறுக்கிப்போவார்கள்
ஆயிரம் சலாமிட்டு;
அரும்புமீசை இளவரசர்கள் தம் ஆச்சாமரத்து நீள்கைகால்களில்
(பரி ஏறத்தெரியாமல், பக்குவம் செத்த அந்தப்புர ஆயிரமாவது
ஆசைநாயகி கையால்)
விழுந்த விழுப்புண் காட்டி
மறை பெறுமான வலுக் மூக்குக்கண்ணாடி கேட்டு
மங்கிப்போகும் அவள் கோணல் விழிகள் சிக்கி விழுந்தது
காரணமென்றார்;
கூசாமல் நீள்விழிகளென்றார்; வாள்கொள்வாலிபவீரர் வெல்லமுடியா வேல்
விழிகளென்றார்;
பேசாமல் எள்ளி அவர்முகம்முன் நகைத்து
ஒரு உண்மை வேலேந்தி யானை கொல் வீரனுக்கு இன்னும்
கனவிற் தவமிருப்பாள்,
முன்னே முழுதாய், பின்னே கற்றை முடி அடி நரைத்த வெண்
தலைக்குந்தவை;
ஒன்றுக்கு மூவிரு ஊக்குக் குத்திய ஒற்றைச் சின்ரல்லா வகைப்
பாதுகை,
ஓட்டைச் சிவிகை ஒய்யாரிக் குந்தவை,
தெரியாக் கடாரம் அணுகு கிழக்குக்கடல் தேசமொன்றின் மஞ்சள் முக
மன்னவன்
மாளிகை மாடத்தில் மறவாமற் தொலைக்க,
அவன் அது கையெடுத்து அவள் முகம்தேடி ஆழ் கடல் கலமேறிக்
கடக்கமுன்
பின்மாரி மழை தன்னாலே நிற்கும்;
கொம்பு மாடு பொத்தென்று வால்தூக்கி முற்றத்தில் வட்டமாய்ச்
வைக்கோற் சாணம்
இட்டுத் தெறிக்க வைக்கும்;
மாரி நிற்றல் பொய்தாலும், மாடு மலம் இட்டல் அற்றாலும்
வாணலிக்குள் அகப்பைத்துடுப்பிட்டு ஓடம் வலிக்க வேளை,
வேலை வரும்.

ஆயினும்,
சிவிகை காத்திருக்கும்,
<எலியேறிப் பட்டுப் பிரிந்து,
மூளியாகி முகம் அழுந்தி அழுக்காகி
தனக்கும் ஒரு வாழ்வு வரும் என்று
அடுத்த கிழமை,
அடுப்பிற்கு தன் பின் தோள்தாங்கியோ
பானைக்கு கரிதுடைக்க முன் படுதாப் பட்டோ
பிரிந்துபோதல் அறியாது பரிதாபமாய்
முன்னை என்னை முன்னே மூவர் பின்னே மூவர் தம் தோளேற்ற
என் முதுகு ஒடியும் இடை ஒயில் நடையாள் ஒருத்தி
உட்கார்ந்தாள்
என்ற பெருமை தின்று
வட்டிக்குள் மூழ்கிப்போன வரட்டி தட்டு வீட்டில்
வீர வடுப் பெற்ற முகம் அற்ற வாணர் குலவீரனுக்காய்,
-மஞ்சள் முக சுவர்ணபூமிப்பேரரசன் வரப்பிந்தினால்-
நெடுவாள் இடைதரி வாலிப வாணர்குலவீரனுக்காய் மட்டும்,
வாணலி பயறு வறுத்து வாழ்ந்திருக்கும் தன் குந்தவை
முதிர்பிராட்டியென>
அதீவீர பராக்கிரம முக்குடுமிப்பெருவழுதி தான் சுமந்த
மூளிச் சிவிகை மோனத்தே செங்கல் உதிர் மூலைச்சுவரருகே
காத்திருக்கும்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home