அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

மீள் எழுச்சி

மீள ஒரு பொழுது எனக்கெனக் காத்திருக்கும் இம்மேடையிலே;
குளிர்கால நெடுந்தூக்கம் முறித்துக் கதிரவன் கண்பட்டவன் போன்று
நான்;
தொலைந்திருத்தலும் ஒருவிதத்தில் சுகமான நிகழ்வுதாம்;
ஆனால், தொலைப்பு அன்றோ இன்று என்னைத் தொலைத்திருக்க ஆவல்
கண்டது;
உயர்வானக்கூரை தொட்டுப் பறந்திருக்க கனவு கண் மிளிர்ந்திருக்க,
தொலைத்தல் காலைத் தூக்கக்கலக்கத்தே எழுப்பி,
'மாலைக்கண்களுக்குத் தொடுவானமே தெளிவில்லை
தொலைதூரத் தேடல் தொடல் எதற்கு?'
என்று சொல்லிச் சட்டவிரோதக்கனவெல்லாம் சட்டென்று கைப்பற்றி,
இருத்தல் உலகுக்கு,
'மீள உன் இருப்பிடநனவுப்புவிச்சிறை சென்று தனித்திரு;
கறங்கும் உலகும் கவியும் காலமும் கஷ்டமும்
களைத்த பொழுதுக்குக் கையிருப்புக்குச் சில சில்லறைக்கனவும் கூடவரும்;
போய் வருக புறமாக என்னைப்பற்றிப் புரிந்துணர்வுடன்'
-என்று சொல்லித் தள்ளி வைத்திருந்ததின்று.
கண்விழிக்க,
எனது உலகம் மீளக் கவின் கவிக்குட் கட்டுண்டு கிடக்கும்.
முன்னைய கலை கனவுகள் வானிற் பறக்கும்; அவை தொலையா;
யாரேனும் பிடிப்பார் தொடர்ந்து,
மீளத் தாமொரு முறை அவையுட் தொலைந்து, மீள அவை
தொலைய,
என் போலத் தம்மிருத்தற் சிறை தூக்கி எறியுண்டு ஏங்கியிருக்க.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home