அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

புலைத்தொழில்

மாட்டிறைச்சிக்கடைக்காரனை
நான் மாமிச பட்சணியில்லை யென்றாலும்
என்றும் மனதுள்ளும் வைததில்லை
"தொடைச்சதையினை,
பசுவின் பால் முலையினை
அறுத்து விற்றுப் பிழைத்திருக்கும்
அற்பன்" என்று.

சொல்லப்போனால்,
அவன் கறித்துண்டுகளை,
எலும்பு, சதை, தோல்
பாதக்குளம்பு, உரோமக்குவியல், பீறிடு குருதி
கண், முலை, காது, கால்
என்று கணக்காய்க் கலந்து விற்பதை
எட்டி நின்றாவது பார்க்க
மனதுக்குள்
எனக்கு என்றும் மிக விருப்பம்.

மாட்டைக் கொல்லுவதும் ஒரு கலை;
குறிப்பாக, வருடமாய்ப் பால் கறந்து
முலை வற்றிப்போன பசுமாட்டை,
வைக்கோலை, அ·து அடைத்த கன்றுத்தோலை
வைத்த கண் வாங்காமற் பார்க்கவிட்டு
ஒற்றை வெட்டில் கழுத்தில் உயிர்போகப்பண்ணுவது,
அப்பப்பா, அற்புதம்.
அபாரம் அவன் தொழில்நுணுக்கம்.
எத்தனைநாள் இத்தனை இலாகவம் கற்றிருக்க
ஏங்கியிருக்கிறேன் என்பது அவனுக்கு
இன்னும் தெரியாதென்றே நினைக்கிறேன்.

அற்பன்போற் தெரிந்தாலும் அவன் அற்புதமானவன்,
வாய்ச்சொல்லுக்கும் கைச்செயலுக்கும்
எத்தனையோ வித்தியாசம் கொட்டிச் சிதறினாலும்
அத்தனைக்குமிடையே உத்தமமான ஏதோவொரு தொடர்பு
ஒட்டி அறிமுகப்படுத்தி வைப்பதில் எத்தன், மகா சித்தன்.
எப்படியென்றால்,
இங்கே கொஞ்சம் சொல்லலாம்:
பசுவைக் கொத்திக் கொல்லமுன்னும்
குங்குமம் நெற்றிப் பொட்டிட்டுக் கும்பிடுவான்;
"கோமாதா வாழவைப்பாய்" என்று கைகூப்பிக்
கூவி கூப்பாட்டு தனை குரலெடுத்து ஒலிப்பான்;
பின் கை தாவும் கத்திக்கு,
பசு நம்பி மோ(ட்)சம் போகும்.
அது சரிந்து போன பின்பு,
"ஐயோ! என் பிள்ளைக்குப்
பால் கொடுத்த முலை" என்று
போகிறவர் வருபவர்க்கு
பரிதாபமாய் வேறு முகம் பிறக்கும்
அவன் கொலைக்குருதி தெறி முகம் இருந்து.
"கண்ணைப் பாருங்கள்;
என்னைக் கொல்லாதே என்று
இன்னும் மருண்டபடி;
அந்தோ பரிதாபம்!"
-இ·து இன்னொரு எடுத்துரைப்பு எடுத்துக்காட்டு.

இதற்கு யாரும்,
"பின் ஏனப்பா மனம் கசியும் உனக்கு
இந்த மாட்டு நிணம் பொசிக்கும் தொழில்?"
என்றால்,
"நான் என்ன செய்திருக்க?
விரும்பிக் கொலை பண்ணல் என்றா நினைத்திருப்பீர்?
இது வாழதலுக்காய் வீழ்தல்;
நான், மனைவி, குழந்தை கூட பிழைத்திருக்கவேண்டாமோ?"
ஏது சொல்ல?
வேறு தொழில் பாரென்று யாரும் சொல்லார்.
சொன்னால்,
"காலகாலமாய் என் பரம்பரைக்கு
கண்டதெல்லாம் இந்தத்தொழில்.
மாடு வளர்த்தலும் பால் கறத்தலும்
பின் முலை கரைந்தால் கோமாதா என்று
கொன்றிருத்தல் மட்டும்தான்
நான் அறிவேன்,
என் வீடறியும்."
ஆதலினால்.
யாரும் கொல்லாமற் செல்லச்
சொல்லப்போனதில்லை.
விரும்பிச் சதை, சரீரம்
வாங்குவார் வாங்குவார்;
வேண்டாதார் முகம் விலக்கி
முணுமுணுத்து வீதி ஒதுங்குவார்.

ஆயினும்,
அவனறிவான் ஆளாளின் மனப்பாங்கு.
வேண்டிய விகிதத்தில்,
வண்ணக்காகிதத்தில்,
குருதி சுற்றி,
வெள்ளைமுலை வரும்;
தொடைச் சதை வரும்;
மருண்ட கண் வரும்;
சுருங்காத சருமத்தோல் வரும்;
வாங்கியோர் புகழ்ந்திருப்பார்,
அவன் கொலை செய்யும் கலைப்பாங்கு, அதன் காரணங்கள்,
காகிதத்தில் வேண்டியது எல்லாமே அளவாய்க் கலந்து தரும்
விகிதங்கள்.

ஆதலினால்,
தூர இருந்து பார்த்தாலும்
புல் மட்டும் புசிக்கும் எனக்கு
அவன் காரியங்கள் பிடிக்கும்;
அதன் காரணங்கள் பிடிக்கும்;
அந்தக் கலவைகள் பிடிக்கும்.
துல்லிய சதைப் புலைத்தொழில்நுட்பம் கற்றிருக்க
வல்லியதோர் ஆசை மனம் கிள்ளி வரும்.
ஏது செய்ய?
நானும் ஒரு தமிழ் எழுத்தாளன்.
என்னை நம்பிக் குடும்பம்;
பெண்ணை நம்பித் தமிழ்.

-98 ஆனி 24, புதன் 16:33 CST

0பின்னூடுகை:

Post a Comment

<< Home