அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

ஒரு முன்னோடி நாடோடிக்கவிஞனுக்கு

வேதபுரத்து, தமிழின்
வெளிச்சமிட்ட குடுகுடுப்பைக்காரனுக்கு,
தலை சாய்த்து தமிழ் வாழ்த்தி(ல்) என் வந்தனங்கள்.

தெய்வத்தே நிலை வைத்தால்,
கால் தொட்டுக் கவிதை பெற, எட்டயபுரக்கவி
எட்டாது விட்டுப்போவானென்றெண்ணி
மனித ரூபத்தே உனை வைத்து
கவிமணம் தெறி பட்டு மனம் விட்டு
நாற்திசைக்கும் நாட்டுச்சிந்திசைக்கும்
இன்னொரு நாடோடிச் சிறுசிட்டு
நான்.

"பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் சிறப்பெல்லாம்
செய்தொழில் வேற்றுமையால்"
தமிழர் வாழ் வகையிடு தமிழ் வகை அறிய முன்னே
யான் புரியும் வகையறிந்து, கவி
சுவை கொள்ளத்தந்தவன் நீ; பெருந்தமிழா,
போற்றினேன் உன் புகழ்.

காற்றோடு கலந்திருந்து காலம் கொன்றுதின்பவா,
நான் சொல்லி நீ அறியவுந் தேவையோ, நீ
உள்ளுடைவின்றி உழைத்திடுநெறி கொள்ளெனக்
கனவு கண்ட உன் பின் நின்றிரு தமிழ் உலகம்?
நின்று சொல்லவும் இன்றெனக்கு நேரமில்லை;
ஆயினும்,
மனது மெல்லியதாய் வலித்தது காண்:
'இன்றவன் காற்றோடு கலந்த நாள் நினைவில்,
உன் உளப் பெரும் பிணி எடுத்துச் சொல்; அவன்,
உன்னிற் பற்றுக்கொள் மூதாதை; இருந்து ஆழ்ந்து கேட்டிருப்பான்
உன் கவி காவுதுயர் ஏதெனினும்; பின்,
மிரண்டும் மறையலாம் சில உன் சனிகள்;
மெல்லெனக் கரையும் பெரு வல்லின வலிகள்.

நின் உடல் யானை கொன்றதன் பின்னரும்
மதம் கொண்டதாய்த் திரிந்திங்கே பல் வெறி யானைக்கூட்டங்கள்.

சிலர் கொண்டனர் சுதந்திரம்;
சிலர் கண்டிலர் அம் மந்திரம்;
பலரோ கொண்டதும் குறைந்ததும் விண்டிலா நிலையிலே.
என் செய்ய கவி நம்பியே?
நல்லதோர் வீணை செய்தார்; பின்னர்,
தம் நலம் கெடப் புழுதியிலது எறிந்துவிட்டார்,
வல்லமையற்ற எம் வீண் தமிழர்.

தென்முனைத் தீவெங்கும் பரவிய இச்சாதி,
தடியுதை உண்டதும் காலுதை உண்டதும்
கயிற்றடி உண்டதும் கலங்கியே மாய்ந்ததும்
பெண்டிரைப் பிரிந்தது பொறாது செத்ததும்
அற்றுப் போன சேதி அவனியில் இந்நேரம்.
ஆங்கே,
மிகச் சிலதில், தமிழர் தலை தூக்கியதால்,
சிறு பலதில், தமிழர் மொழி மாற்றியதால்,
மிகுதிப் பெரும் விளைவோ,
தமிழர் தம்முயிர் மாய்ந்தே போயழிந்ததால்,
தென்முனைத் தீவெங்கும் பரவிய இச்சாதி,
தடியுதை உண்டதும் காலுதை உண்டதும்
கயிற்றடி உண்டதும் கலங்கியே மாய்ந்ததும்
பெண்டிரைப் பிரிந்தது பொறாது செத்ததும்
அற்றுப் போன சேதி அவனியில் இந்நேரம்.

உன் முந்தையர் ஆயிரம் ஆண்டு
அமர்ந்து முடிந்த முதல் தமிழெழு நன்நாட்டே,
சொந்தச்சகோதரர் தம்முள்ளே மற்றார்
நிந்தை செய்துயிர் தின்னக்கண்டார் இந்நாளில்.

மேலென்ன சொல்லக் கேட்பாய்
மேதினியிற் தமிழர் மேன்மை பற்றி?

சங்க வீரம் உடைத்து சங்கிலி உடைத்து,
சுதந்திரப்புதுமை படைத்தாள் தமிழ்ப்பெண்;
ஆயினும்,
சுந்தரங்கொள் பல தந்திரம்
சுவறிடும் அவள் சுகம், சுரம்.
உன் புதிய நாட்டின் இளங் காளையர்,
உன் காணிநிலக் கவிக்கனவு
கன்னியர் கைப்பிடிக்க நனவாக்க
வேண்டிநிற்பர் அவர் தந்தையரை;
மாதர் தம்மைக் கொடுமை செய்யும்
மடைமை கொளுத்தச்சொன்னதெல்லாம்
மாதரையே கொளுத்தும் தம் கொடுமை
மடமையெனக் கொண்டிருப்பார்
இவ்வெளிய இளைய வடுகரெல்லாம்.

பெருமழை, காற்றினிலே அழகுப் பா வாடை கண்ட
உன் வகைப் பண் குவி கவிகள் தம் முன்னோடு முழுப்
புவியெனச் சொல்
பின் வரு தமிழ்ப் பாட்டு மரமேறு பல கவிகள் பல இடமும்
தாவி,
சிறுமழை, தென்றலிலே அழகிப் பாவாடை ஆடல் பாடி நின்றார்
குமரித் தமிழுக்கு தன் பங்குப் பெருமை சேர்த்து.

மேலே சொல்லவெனில், நில் காலம் இல்லை;
சொல் காத்திரம் மனம் இல்லை;
அத்தனைக்கு உன் ஒளிபடைத்தார்
கண் காணு இடமெல்லாம் காட்டிவைக்கும்
காதகம் பெருங்காததூரம் நாடெரி வாலாய் நீண்டுபோகும்.

என் கவியே, இவ்விடத்தே,
"விதியே, விதியே, தமிழச்சாதியை
என் செய நினைத்தாய் எனக்குரையாயோ"
என்றுன் அரற்றல் என் செவி கேட்குதிப்போ;
ஆயின்,
சென்றதிங்கே மீளாது மூடரென விட்டிருந்து,
மனது ஆற்றிக்கொள் இங்கு நிகழ்
இனிது சில எண்ணி இனி நீ.

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு,
மறைவாகத் தமக்குள்ளே பழங்கதை சொல்லி,
இழிபொருள் காணில் விரைந்ததிலே வீழ்வாரை வெளி விட்டு,
பூனைகள் வண்ணத்தே புறங்கூறல் அகமும் அற்று,
தேமதுரத் தமிழோசை தரணியெல்லாம் பரவும் வகை படைத்திருக்க,
பிறநாட்டுப் பெரும் சாத்திரங்கள் எம் முது மொழியில்
நடைபெயர்க்க,
எண்ணியது முடித்திருப்போம் என்றே நிதம்
திண்ணமுற இசைத்திருப்பர் எம்மிற் சிலரேனும்
முன் சொன்ன மூட மதி கொள் மூர்க்கத்துள் மூழ்கிடாமல்.
என்றுமில்லாததாய் என் இத்தனை வாழ் நாளில்
இன்று மண்டியிட்டேன் இவ்விடத்தே உன் முன்னே;
உன் வாயிருந்து காற்றூது வடிவேனும்
"வாழிய நும் செயல்" என்றொரு சிறு
வாழ்த்தொன்று தர வேண்டும் நன்று.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home