அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

வேறொரு பிறவிக்குள் நான் எனைத் தேடுவேன்...

வேறு ஒரு பிறவிக்குள் என்னைத் தேடுவேன்.
இந்தப்பிறவியன்றும் கெட்டது இல்லைத்தான்;
என்றாலும், நாட்பட்டு, புளித்து, பால் நாறும்.
செயல் செத்துச் சிந்தனைவெளிக்குள்
காலம் ஒட்டடை கட்டி,
விஷச்சிலந்தி கால்பரப்ப,
பட்டத்து வாலாய்ப் படர்ந்து விளையாடும்.
சக்கரங்கள் என்று சுற்றும் நாள்வெளியுட்
சகதியாய் தேங்கி நாற்றமடிக்கும் என் தினச்செயல்.
சுழல் சக்கரத்துள் அசைவற்று சுற்றும் அச்சாணியாய்
தன்னைத் தலை உடல் கூட்டிச் சுற்றிப்
பொழுது பொடிப்பொடியாய் உதிர்த்து
பொய்களில் புனைந்து விரட்டும் ஆத்மா புழுக்கத்துள்.
ஆயினும், மற்றவுயிர்களைப் பார்க்கையிலே எந்தன்
இந்தப்பிறவியன்றும் இயல்பிற் கெட்டது இல்லைத்தான்.
என்றாலும், நாட்பட்டுப் புளித்துப் பால் நாறக் காண,
முகம் பிய்த்து உடல் தேய்த்து
வேறு ஒரு சோரமற்ற சுத்தப்பிறவிக்குள்
இற்றைக் காலப்புழுதி கழுவிய
என் புத்தாத்மாவைத் தேடுவேன் நான்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home