அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

புனித ஆற்றுப் புண்ணியம்

புனித ஆற்றுக்கு அறியப்பட்டதெல்லாம்
அவர்கள் அம்மணங்களும் அழுக்குகளுமே.
ஆயினும், பிறர் கரைத்த அழுக்குகளிலேயே
தம் புண்ணியங்களைச் சுவாசித்துக் கொண்டனர் என்னவர்கள்.

பாவங்களை ஆற்றும் நீர் என்பதினால்,
அதை ஆற்றுநீர் என்றனரோ என்றும் ஐயம்,
பாண்டித்தியம் இல்லாத பாஷையிலே
பட்டென்று எட்டிப் பொறி சுட்டு மறையும்
வளிக்குமிழ் விரல்நகம் தட்டிப்போனதென.

ஆயினும், ஆறு ஓடும்;
பல சமயத்தே பக்குவமாய்,
நிறை மாதக் கர்ப்பணியாய்,
வீட்டார் நித்திரை குழப்பாமல் உட்புகுந்த கள்வனாய்,
வாலி வதம் பண்ணப் பதுங்கிய இராமனாய்,
சத்தமின்றி அல்லது மெல்லிசைச் சங்கீதமாய்;
சிலவேளை கரை புரண்டு,
வாலில் நெருப்பிட்ட வானரமாய்,
வேண்டாதோரைக் கல்லெறிந்து கொல்லுபவராய்,
தெருப்போகும் அப்பாவி உடலம் தீ வைக்கும் தீயோராய்,
என்று வம்புக்கு வெறியெடுத்து.

தர்ப்பைப்புல்லெடுத்து அர்ப்பணம் செய்பவரைக் காண்கையிலே
எனக்கு எப்போதும் எழுந்திருக்கும் இரு கேள்வி
உள்ளே இரு கால் எடுத்து, பின் கால் வேராகி,
வினா வித்து விரிந்தெழுந்து விருட்சமாய் விழுது விட்டு.

1. இத்தனை பேர் கரைப்பதெல்லாம்
மொத்தமாய் வாங்குதற்கு
எத்துணை தவறிழைத்தாள்
இத்தனை நாள் இந்நதி நங்கை?

2. அத்தனை கரைந்த அன்றாடப் பாவங்களும்
எத்திசையில்
எத்துறையில்
எச்செறிவில்
கரைத்திருப்பாள் கங்கை மாதா?

வாய்விட்டு வெளிவந்த கேள்விக்கு,
அதட்டி அன்னை சொன்னாள்:-
"நதி மூலம் ரிஷி மூலம் பாராதே;
நாவடக்கு;
சின்னக் கரிய மன எண்ணச்சிந்தனை
எரிந்து அடங்குதற்கு எண்ணெயென
சில்லறையாய் அள்ளித் தெளி
தலையினிலே ஆற்றன்னை நீர்த்துளிகள்"

மூலங்கள் புனிதமானவை அறிவேன்;
இடை வந்த மோசங்களால் எழுந்த
முடிவுகள் என்ன என்பதே என் தேடல்;

ஆயினும் தேடல் முடங்கும்.
முக்காடிட்டுச் சிறு பொழுது
மூளை மூலைக்குள் முயங்கிக் கிடக்கும்.

என் அன்னை முகம் கோணாமல்
பின் முதுகில் நீர் தெளிக்கையிலே,
முன்போன முப்பது நூற்றாண்டுகளின்
முகம் தெரியாதுதிர்ந்துபோன கயவர்களின்
பொய்கள் பொறாமைகள் பொச்சாப்புக்கள்
பெரும் புழுகுணி மூட்டைகள் புறம்கூறல்கள்
எல்லாமே தண்ணீர்த்துளிகளுடன்
என் உடற் செந்நீருட் கலந்து போன
எரிச்சலுடன் குறுகுறுப்பு எங்கோ இதயத்துள்.

எழுந்த கேள்வி இரண்டும் உள்ளே
ஏதும் பதில் இல்லாமலே அமிழ்ந்து சாகும்;
இனி
அடுத்தமுறை படகிருந்து
நான் நதி கடக்கும் நாளை வரை
என்னுள்ளே தானுறங்கும்;
கேள்விக் குடைசல் மறு காலை வரை
செத்ததுபோல் கிடப்பதுதான்
நீர் தெளித்துக் கண்ட புண்ணியம்
என்றொரு நிகழ்காலத் தெளிவு நெஞ்சினிலே.

-'98 ஆனி 19, வெள்ளி 07:26

0பின்னூடுகை:

Post a Comment

<< Home