அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

புற்கள்

புதுமாணவர் வரவுக்காய்,
பல்கலைக்கூட முற்றம் நில்
பழம் நெடும் புற்களெல்லாம்
தம் தலை முளை வரைக்கும் வெட்டிப்போச்சு.

வரவேற்புக்கூடாரம், உபசரிப்புக்கொட்டகைக்காய்
பெரிதாய் இரும்பாணி, முதுகு இரத்தம் சொட்டு
வேல்குத்துக்காவடியாய், நிலம் குத்திக் கயிறிழுத்து,
நிணம் மண்ணாய் வெளிவிட்டு,
தோல் சிதைந்து போய்ப்
பலர் மிதித்தழுத்தியழித்து, பைம்புல்.
அழுதுற்றது, பெற்று வளர்த்தெடுத்த
பெண் நிலம் மட்டுமல்ல, பக்கம் படுத்திருந்து
பட்டம் தரு கூடத்தே பட்டம் விடு பாலகர்
பார்த்திருந்த பாவி என் உள உலைக்களமுந்தான்.

கடந்துற்ற காலத்தே,
தூரத்தே பொட்டுப்புள்ளியென, பூப்பறபூச்சியென,
துள்ளு மான், தோகை மயில்களென, கள்ளமற்று
விளையாடு, தாய் விட்டு வேலை போன பிள்ளைக்
கூட்டம் தவிர் வேறேதும் துணை போகா நேரத்தே,
மேற்படுத்து, "கவிதை காலாண்டு"
பக்கத்தே ஆடி நின்று கூடிப் படித்து,
போனநூற்றாண்டெழு ஒருவீட்டு ஓடு
உபத்திரவம் தாங்காது ஓட்டிவிட்ட,
ஒரு குட்டைப்பாவாடை கிளப்பு சேட்டைக் காற்றடிக்க,
காதுக்குட் கீச்சுமூட்டி, போனதொரு காற்றோடு பெட்டிகட்டிப்போன
கூடல் மீளத்தரு காற்றுக் கண்டு ஊடல் ஒப்பந்தத்தே
ஒருமித்துக் கையளித்து, தம் நெட்டைக் கிளையறு மேனிக்கும்
நோகாது, உதட்டுமேல்முனைக்கோர் ஊசிமுத்தம் விட்டு,
கண்ணூர், ஆயின் கவனம்போகாக்
கைப்புத்தகக் கவிதைக்குப் பொருள் சொன்ன
மும்மாத என் சிட்டுக்குருவி சினேகம்கொள்
சிறுபெட்டைக்குழந்தை பின்னற்பூத் தோழிப்புற்கள்.
நேற்று, நான் இரவு தூங்கப்போக,
வரிசை நின்று சீன- 'ஜென்' ஞானிகளாய்த் தலைகுனிந்து
கண்ணியமாய்க் கை மடித்து வழியனுப்பி வைத்ததெல்லாம்
காலையின்று பார்க்கையிலே,
ஆசிரியர் அடிபிரம்புக்கஞ்சி மேசையிலே தலைதாங்கிப் படிந்திருக்கும்
சுட்டிப்பையன்களாய்த் தரையோடு தரை கிடக்கும்.
கறையான்புற்றெழும்பக் காத்திரு காசிபமுனியாகி
மிக மோனத்தவமிருக்கும், மேல் நடக்கும் முன்பின்
அறியாத இராமர் தம் பாதம்பட்டுப் பாக்யவதியாவதே
தன் செயல் என்றாகி இயற்கை இந்திரர் இழைத்த தவறுக்காய்
என் கற்கூடத்தோட்டக்காரர் ஏசி இட்டதொரு சாபத்தே,
இனி இயல் இ·து என்றாகி இங்கேயென் என் அகலிகைப்புல்.
இவையேதும் அறியாது, அவை மிதித்து மேலே
ஆயிரம் இளம் சோடி, ஆனந்தம் பெருக்கோட,
தம் எதிர்காலப் பசும்புல் மனம் வளர்த்து நடைபோடும்,
முதுகுலமோ, போனது எண்ணிக் குடைக் கீழிருந்து யோசிக்கும்,
விட்ட மற்றதெல்லாம், சுற்றி நிலம் பெருங்கூடையென்றேயெண்ணிக்
களி தின்ற கோப்பையும் எறியும்; கழிவுக்குப்பையும் குவிக்கும்.

அறியாப் புதுமனிதர்தம் ஆமோதிப்புக் கண்காண,
ஆண்டாண்டு ஆகிக் கிடந்ததெல்லாம்,
அறுத்துத் தள்ளலினை, ஐயோ, அவலமாய்,
ஆர், என்று சேர்த்தார் மண்பின்தின் மக்கள் நேயத்துள்?
அறியேன்; அனைத்தும் அறிந்தோர், அவனி இன்று காண்
அடிதடி என்றாவது முடிந்து, பின்னொரு புதிது, பேச்சிற்குப்
பொருத்தமெனக் காணல்முன் ஒரு சின்னவொரு
பொறி மின்னல் அவகாசம் இடைக் கிடைப்பின், அஞ்சலிட்டுச்
சொல்க.
கஷ்டமேதுமில்லை; முகவரி மாற்றாது காத்திருப்பேன் அதுவரை.

--"போகட்டும்; கொல்லல் புதிதல்ல இங்கொன்றும்;
வரப்போகும் சில காலத்தே,
இற்றைப்புதியவர் பழைமை காண்பார்;
அப்போது, இந்நிலம் மேல் வந்தமர் இணைகளிலே,
ஒரு பொல்லாத பனிபடு புற்பச்சைப் பகடிக்குப்
பெண் நாணி, " போங்கள், நீங்கள் பெருமோசம்"
எனக் கிள்ளித் தன் இனியான்மேனி எறிதற்கேனும் வேண்டி,
எந்தையும் அவரை முந்தியுறைந்தோரும்
தம்முயிர் நங்கையருடன் நிலவிற் குலவிக் கிடந்ததும்
இப்பெரு நிலமே; இதில், வரும்
பிந்தைய பெருங்காலமும் எங்கும் பரந்து இருப்பதும்
எம்வாழ்வே" -என்றதொரு மந்திரம்,
கடலிருந்து நிலம்மேலாய் மறு கடல் போகும் காற்றுக்கு,
மேலை மலை சலித்துக் கீழை வனமேகும் பறவைக்கு,
தொலை-துயர்க் கனவிருந்து காலக்குமிழி வெடித்து
வேடிக்கை, வேதனை சேர்த்திருக்கப் பார்த்திருக்கும் எனக்கு,-
"வயிற்று நிலம் கிழித்து,
வெடுவெடென்று வீதி, வெளிர்நீலச்சுவர் கூடி விரிந்து படர்ந்து
வெட்டுச்சிறு கருக்கு முனைகொண்டு, பச்சை இளம் நாற்று எல்லாம்
அணில்வால் அழகோ, புலிவால் வடிவோ பலவுயிர் பெருக்கி
வான் நோக்கிப் பரதமாடி உச்சி நெற்றிச் சிறு செம்குங்குமப்பூ,
வரும் வைகாசி திங்கள் கண்காண வாரிக் கொட்டி
இள வசந்தத்தை வரைவிலக்கணப்படுத்திப் போகும் புல்,
இருந்து பார்"--
என்று யார் சொன்னார் இப்போது
-சத்தமின்றி- அர்த்தப்படு குழந்தை முத்தம்போல்?
என்னோடு உட்கார்ந்து ஒத்தழுது, பின்,
மனம் தேற்று அக்கருநாகணவாய்ப் புள்ளோ?
இல்லை,
கண் சுருக்கிச் சிரித்திட்ட, ஒரு கரு குதிரைவாற் கூந்தல்
வாலைக்குமரி நெரித்து மிதித்துப் போன
செம் மஞ்சட் சிறு புல்லேதானோ?

0பின்னூடுகை:

Post a Comment

<< Home