அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

பொய்க்காற்குதிரைநாட்டியம்

பொய்க்காற்குதிரை நாட்டியம்;
வீதியெங்கும் கால் தரை கொள்ளாமல் உயர நின்றாடும்;
மரச்சட்டக்கால்கள் பாவாடையுற் பதுங்கிப் பதுங்கி எழும்;
முன் நின்றவர் ஆட்டக்காரன் அந்தரத்து சமநிலை கொள்ளாட்டம்
வியப்பார்;
பருவப் பெண்கள் குதிக்கால் அழுத்தி முற்பாதத்தாளம் தரைக்குத் தாரை
செய்வார்
கண் குதிரை மேலாய் மறுபக்க இளைஞர் முடி சிலிர்ப்பு
கள்ளமாய் மனம் மெச்சி
மென்கீழுதடு உள்ளிழுத்து அழுந்தப் பற்
கடித்து;
விடலைப் பையன்கள் கை ஆட்டக்காரன் மீசை தமக்கு எந்தக்காலம்
என
மேலுதடு மூக்கிடை பிறர்காணா ஒளிவுத்தடவல் செய்ய,
காது கன்னியர் காற்சதங்கை நாதத் திசை
துருவும்;
பஞ்சுமிட்டாய், தேன்குழல் வாய்கரைய
ஆட்டக்காரன் பாவாடைப் பளபளப்பு சரிகைகள் மினுக்கம் இலயிக்கும்
பிஞ்சுகள்;
ஆட்டச்சமநிலை சங்கீதம் கவனம் கெட்டு,
சேரும் பணம், வீட்டுப் பொருளாதாரம் சமநிலைப்பிறழ்வு எண்ணி
ஆட்டக்காரன் மனம்;
ஆயினும், சுற்றுச் சமநிலை பிசகாமல்
வீதிக்கு வீதி நகரும் பொய்க்காற்குதிரை நாட்டியக்கூட்டம்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home