அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

சாளரம்

....
<வெண்பனிமீது இன்னும் அந்தக் காதலரும் நாயும் களிப்போடு.^>

பிறர் களித்திருத்தல் கண்டு
மனம் களித்திருப்பதும்
ஒரு கலை.


கடந்த காலத்திற்கு நன்றி;
எனக்கும் அதைக் கற்றுக் கொடுத்திருத்திருக்கிறது.

உறுமீன் உடல்
உண்ணும் அலகுடனே,
வயிறு வாடிய பொழுதெல்லாம்,
ஓடிய மீன்களின் ஒய்யாரத்தில்
உவகை கொள்ளும்
ஒற்றைக்கால் ஒல்லிக்கொக்கு
இற்றைப்பொழுதுக்கு
இங்கே
நான்.


<வெண்பனிமீது இன்னும் அந்தக் காதலரும் நாயும் களிப்போடு.>

பிறர் களித்திருத்தல் கண்டு
மனம் களித்திருப்பதும்
ஒரு கலை.


தேடிய மனைவி,
அவள் கூடிக் கொணர்ந்த
பால்மணக் குழவி விட்டு,
பெரும் போர்தன் ஆகுதி பேரினால்,
தனியே வெளி ஓடிய
"காதலியை அடர் கானகத்தே
கைவிட்ட கொடும் பாதக"
மனிதருக்கெல்லாம்,
-அறிக நண்ப,-
பிறர் களித்திருத்தல் கண்டு
மனம் களித்திருப்பதும்
ஒரு கலையாய்
கற்றிடும் அகல்மனது
ஆகி வருதல் வேண்டும்.


<வெண்பனிமீது இன்னும் அந்தக் காதலரும் நாயும் களிப்போடு.>

பிறர் களித்திருத்தல் கண்டு
மனம் களித்திருப்பதும்
ஒரு கலை.


வீதி விடலை நாய்களுக்கு மட்டுமே
விரும்பிக் காதலிக்க
விடுதலைச் சுதந்திரம் விட்டுத்தரும்
மத நாய்கள் வெறிகொண்டு தாவும் நாட்டிலிருந்து
ஓடித்தப்பிய ஒற்றை மனித உயிர்களுக்கெல்லாம்
உருகும் பனி மீது,
ஓடும் காதலரும் நாயும் காணும் களிப்பாவது
கரையாது கட்டிப்படட்டும் காலத்திற்கும்
என்று கவலைப்பட்டிருக்கும் மனம்,
நெடும் பொழுது நீடித்திருக்க
நிகழ்வுகள் ஆகிவரவேண்டும்,
அடுத்து வரும் காலங்களில்.


<வெண்பனிமீது இன்னும் அந்தக் காதலரும் நாயும் களிப்போடு.>

பிறர் களித்திருத்தல் கண்டு
மனம் களித்திருப்பதும்
ஒரு கலை.


<துயில் நீங்கி
கனத்த மெத்தைப் போர்வைதனைப் புறந்தள்ளி
சோம்பல் முறித்தபடி எழுந்து
சன்னல் திரை தன்னை ஒதுக்கிவிட்டேன்^>

நம்பிக்கை நீண்டு
நகர்த்திய இன்னொரு நாள்.

வெளியே இன்றைய உலகமும்
எனக்காய் இருண்டு கிடந்தாலும்
நாளைக்கும்
எழலாம்
அடிக்கிழக்கில்
எனக்கொரு வெஞ்சூரியன்,
பாதகர் உடலங்கள்,
பாகங்களாய் அறுத்தெறிந்து.


அதுவரையில்,
கண் காணும்
வெ(ள்)ளிமலைச்சரிவில்,
<வெண்பனிமீது இன்னும் அந்தக் காதலரும் நாயும் களிப்போடு.>

பிறர் களித்திருத்தல் கண்டு
மனம் களித்திருப்பதும்
ஒரு கலை.


கைகூப்பி
என் நிகழ்
காலத்துக்கு நன்றி,
கசப்புக்களிடையே
களிப்புக்களை
தெளித்திருத்தலுக்கு.

-'99, ஜனவரி 07
^ - வ. ஜ. ச. ஜெயபாலன் வரிகள்

0பின்னூடுகை:

Post a Comment

<< Home