அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

சிநேகிப்பும் சகிப்பும்

ஆறு கடுநாள் அலுவல்பின்,
எனதாறு நண்பர்க்கு,
ஒரு ஞாயிறு கூடக்கிட்டுமென்றார்;
அஞ்ஞாயிறு ஞாயிறு காணக்கண்டு,
நாள்பூராய், நம் கதைகள்,
நாட்டுக்கதைகள்,பழங்கதைகள்,
இன்றுநிகழ் புதுக்கதைகள்,
இனிவரும் பெருங்கதைகள்
மூச்சுநிற்காமற் பேசலாமென்றார்.
சரி; சந்தோஷமாய்ப் பேசலாம்;
என்னதான்,
பிறர் எவர் இனிதாய் என்னென்ன பேசினும்
என்னவர் இரைந்து பேசுமின்பம் போலாகுமோ,
சொல்வீர்.

மிக நாட்கள்பின், சந்திப்பு
மிக அருமை; மிகு இனிமை;
வகை வகையாய்...
நகையாய், நதியாய், தோகையாய், தோரணமாய்..
நேராய், வட்டமாய், வளையியாய், சுற்றி, நீட்டி,
கேத்தரகணிதவடிவமெல்லாங் கண்டு,
இன்பம்...
தன் மொழி,
வாழ்வோங்க வாழ்த்தலும் இன்பம்,
வசை பாடி வைதலும் இன்பங் காண்.
மதியம் வர,
செவிக்குத் தமிழுணர்வு சரி, சாண்
தவி வயிற்றுக்கும் தமிழுணவு வேண்டுமென்றார் ஒருவர்.
மறுப்பார் எவருமில்லை.
"ஆயின், அ·தின்றெங்குமுண்டு; ஆதலில்,
எங்கு சாலச் சிறந்தததென்றார்?"- மறு நண்பர்.
"'தமிழுணவகம்', தங்கம் போன்று"-
என்றனர் இன்னொருத்தர்.
சென்றோம்;
வெயில் சென்ற வெக்கை வேட்கை குளிரக் குடிப்பதற்கேதும்...,
"மோர்", என்றார் முதலாமர்;
"இனி(த்) தோடை இரசம்", சொன்னவர், அன்னார் அடுத்தார்;
"கோலா" கேட்டனர் பின்னயவர்.
இப்படியாய், ஏது பிரசினமும் இல்லை, காணிர்.
நன்றெனக் கருத்தொத்து,
உடல், உளம் உவத்தது கண்டோம்.
இனி, ஊட்டமாய் உண்பதற்கென்ன?
"தயிரிட்ட சாதம்"-முன்னையவர்;
"தக்காளி இரசமுங் கூட"-அவர் அருகினர்;
"சுட்ட அப்பளமும் சுவைகூட்ட"- இவர், என் இடமிருந்தார்;
"மாவடு ஊறுகாயுமுண்டோ?"-ஊறிக்கேட்டார் மாவீரர் போலிருந்தார்.
இப்படியாய்.....
என்முறை வர,
"ஆடு, அதி காரமாக" என்றனன் அதிகாரமாக
(ஆக நானொருவன், மாமிசபட்க்ஷணியங்கே).
அபிமன்யு செத்த சேதி கேட்ட அர்ச்சுனன் போலிருவர்;
கோடையிடிகேட்டுக் கொலைப்பட்டேன் தானெனக்
குலுங்கி அரண்ட அரவம்போல் மற்றொருவர்;
(அடியேன்,
அரற்று அர்ச்சுனனும் பார்த்ததில்லை;
அதிர்ந்தரள் அரவமும் அறிந்ததில்லை;
ஆக,
ஆட்கள் அவ்வப்போது சொல்லியதும்
அழகோவியங்கள் ஆங்காங்கே கண்டதுமே
(மனச்)சாட்சியென்பேன்)
மாவீரர் சிரம் விறைத்து, முழி முறைத்துச் சொன்னார்,
"நாம் தாவரம் மட்டுமுண்போம்; அறியீரோ அன்ப?"
"ஆஹா! அறிவேனே? அதற்கென்ன?
நீவிர் எவரும் உண்ணல் இல்லையே விலங்கிங்கெதுவும்;
ஆக, நான்தானே....."-அன்பாயிழுத்துரைத்தேன்.
"எனிலும், எம்மோடு கூடியிருந்தாடு நீருண்டால்,
என்னாகும் எம்நாமம் எல்லோர்முன்னாலும்?"
-தூண்பிளந்த நரசிம்மம், தூள் கிளப்பிற்று,
தொடர்ந்தும்,
"அப்படித்தானோ?
இ·தும்மைப் பெற்றார்கடையோ, அல்லது
உம்பெயர் இட்டொரு உண்கடையோ? இத்துடன்,
விட்டோம் உம்நட்பு; இப்போதே வெளிநடப்பு"
-நாற்படையாய் நகரப் போக,
இதுகாறும் இருந்து இவை கண்ட இருவரில்
சிரித்து வெறுத்தார் ஒருவர்
(மற்றவர், மறுதலையாய் வெறுத்துச் சிரித்தார்?),
"இ·தென்ன வேடிக்கை?
அவன்விருப்பம், அவன் உண்பான்.
உவப்பற்ற உமக்கோ உள்ளூட்டிவிட்டான்?
உம்பெயர் இதிலென்ன கெடக்கண்டீர்?
உமைக்காண் மற்றோர் நிழல் பெரிதோ, இல்லை
உம்முள்ளுறை உம் நேர்மனச்சாட்சியோ?"
மற்றவரும் மனமுடைந்து கூடச்சொன்னர்,
"இவ்வோரமாய் உட்கார்ந்து அவனுண்ணட்டும்,
அவ்வாடை நும்நாசி நுகராது அப்பாலே அமர்ந்து நீவிர்..
மிருகம் தின்னு அவன் செயல்மேலாய்
மிருகத்தனம் உம் வெறிச் செய்கை."
சமபந்திப்போசனத்தால் பெயர்
கெட்டுப்போதல் வி(நி)ந்தைதான்;
சரி பிழை வேறெனிலும்,
இங்கே என் நியாயம் பெரிதில்லை;
எதுவாயினும்,
இறுதியாய், இ·து என்னாலே...
எழுந்து, நான் சொன்னேன் மனம் அழுந்த,
"நான் வாழ்பெறுதி,
அரைமணிநேர ஆட்டுருசி நாவுக்கோ,
ஆயுட்கால அன்புருசி நட்புக்கோ?
இன்றிது உண்ணாவிடிலோ, அன்றி,
என்றும் உமைக்கூடி உண்காலம்
ஆடு-புலி ஆடாவிடிலோ,
இறப்புத்தான் என்று விதி எனக்கில்லை.
தாவரம் மட்டுமுண்பார் விலங்குண்ணார்;
ஆனால்,
விலங்குண்பார், மாதம் இருபோதேனும்
தாவரம் மட்டுமுண்பார் நண்பர்க்காய்.
ஆகட்டும், எனக்கும் (அதுபோலே)
ஆடுயிர் அறுக்காத அறுசுவை அன்னம்
(அரிசிக்குயிரில்லையோ?
அன்னந்தான் பட்சியில்லையோ?
கேட்காதீர்; ஆரறிவார்?
தமிழுக்குச் சூனியம் நானாம்)
வேண்டுமென்றால், பின்னொருநாள்,
இங்கோ, வேறெங்கோ,
என்னோடொத்துண்பார்கூடவந்து, ஆசைக்கு,
ஆடுமுதல் அரிமாவரை அனைத்தும் அறுத்து
உதிரமும் உதரமும்
அதரம் அசைத்துறுஞ்சி,
ஆகாரமென உண்டால் ஆயிற்று;
இன்று இங்கில்லை என்பது,
என்றும் எங்குமில்லை என்றில்லையன்றோ?"

0பின்னூடுகை:

Post a Comment

<< Home