அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

மனக்குப்பை கொட்டமுன்னொரு சுற்றறிக்கை

முகம் மலர்த்திப்போனவள் தொட்டு
முறைத்து வைத்துப் போனவள் வரையிட்ட
முன்னை நான் நேசித்திருத்த நேரிழைகள்
முழுப்பேருக்கும் வணக்கம்.
காலப்புழுதியில் விடத் துணிவில்லா
என் இயல்புகளின் இறுதி எறிகை பற்றிய அறிக்கை இது.
குப்பை அடைந்து கிடக்கிறது மனம்,
அனுப்பாமற்போன முத்தங்களாலும்
எழுத்திடத் துணிவில்லா எண்ணங்களாலும்.
நாளைக்கு அத்தனையும் கொட்டிவைக்கப்போவேன்
உங்கள் வீதிக் குப்பைத்தொட்டிகள் எல்லாம்
கொஞ்சம் கொஞ்சலாக.
தேவைப்பட்டவர்கள் சொல்லி வைக்கவும்;
விரும்பினால் வீட்டிலேயே விநியோகிக்கப்படும்.
கோவிற் தொடர்கை, குளத்துக்கல்லெறிவு,
கலைவிழாக் கண்ணெறிகை அத்தனையும்
விட்டெறியப்படவேண்டிக் கிடக்கிறது.
முன்னால் போகிறவள் பின்பார்க்கும்
கணவனுக்கு உமக்கும் பின்போன மக்கள்
பட்டியல் இட அத்தாட்சிக்கு உதவும்;
ஒரு பையன் பின் சுற்ற மயங்கும் பெண்பெற்ற
முன்னைய நேயங்களுக்கு என் முகம் விறைத்த
உம் மன உறுதி சொல்லி வழிப்படுத்தும் தேவைக்கு.
கன்னியராயே கண்ணாடி ஜன்னல் வெளி
கடந்துபோகும் காலம், காளை பார்க்கும் பெண்களுக்கு
ஆறுதற் பரிசாக மனம் இட்டு நிரப்ப இ·து இலவசம்.
நாளை கடைசி நாள்; மனம் வெளிப்படுத்தவேண்டும்.
புதியவள் வாயிற்கதவு தட்டிக்கேட்கிறது.
மீளவும் சந்திப்போம்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home


 
Statcounter