அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

வைரமுத்தின் 'நீயும் நானும் இந்தியர்கள்' இற்கு ஒரு பதில்

இ·து கவிஞர் வைரமுத்துவின் ஒரு தனிக்கவிதை,
'நீயும் நானும் இந்தியர்கள்' என்பதற்குப் பதில் தரும் முயற்சி:

வைரமுத்து எழுதியது:

சொன்னவன் நான்தான்
உனக்கும் சேர்த்து சுவாசிக்கிறேன் என்று
சொன்னவன் நான்தான்
* * *
உன்னைத்தவிர என் கண்களுக்கு
எதையும் பார்க்கத் தெரியவில்லை என்று
சொன்னவன் நான்தான்
* * *
வானத்து நீலம் பிழிந்து உன்
மணிவிழிக்கு மையெழுதுவேன் என்று
சொன்னவன் நான்தான்
* * *
நம் கல்யாணத்தில் கடல் முத்துக்களையும்
வானம் நட்சத்திரங்களையும்
அட்சதை போடும் என்று
சொன்னவன் நான்தான்
* * *
நாம் பிரிந்தால்
மழை மேல் நோக்கிப் பெய்யும்
கடல்மேல் ஒட்டகம் போகும்
காற்று பிணமாகும் என்று
சொன்னவன் நான்தான்
* * *
இதோ
அடிக்கோடிட்ட வார்த்தைகளால்
இதைச்சொல்வதும் நான்தான் :

"என்னை மறந்து போ
ஏனென்றால்
இன்னும் உன்னைக் காதலிக்கிறேன்"
* * *
என்னை மன்னித்து விடு
அடிப்படை மறந்து போனோம்
அன்பே...
நீயும் நானும் இந்தியர்கள்
இந்தியா காதலின் பூமிதான்
காதலர் பூமியல்ல
* * *
நம் குடும்பம் நடுத்தர வர்க்கத்து நரகம்
உன் வலதுகாலை எடுத்து
நீ என் நரகத்துக்குள் வரவேண்டாம்

வேலைக்கான என் விண்ணப்பங்கள்
விண்ணில் எறிந்த கற்கள்

வாக்காளர் பட்டியல் தவிர
எல்லாம் நிராகரிக்கும் என் பெயரை

பகலில் சூரியனைத் தொலைத்துவிட்டு
இரவில் தேடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை
என் வாழ்க்கை
* * *
கழுத்தில் மாலை
காலில் லாடம்
இவையே கிட்டும் என்னிடம்
* * *
என் நந்தவனக் கனவுகள் வெந்துவிட்டன
ரோஜாவுக்கு முத்தமிட்டோம் கனவில்
முள்ளில் உதடு கிழிந்தோம் நிஜத்தில்
* * *
தாடிக்குக்கீழே முகத்தையும்
தலையணைக்குக் கீழே காதலையும்
புதைத்துவிட்டுச் சொல்கிறேன்

என்னை மறந்து போ
* * *
எப்படி மறப்பேன் என்பது பொய்

கண்ணீர் முத்தம் இரண்டையும்
காற்று உலர்த்திவிடும்

காதலைக் காலம் உலர்த்திவிடும்
* * *
என்னை மன்னித்து விடு

நீயும் நானும் இந்தியர்கள்

இந்தியா காதலின் பூமிதான்
காதலர் பூமியல்ல
* * *

இ·து அவரின் புலம்பலுக்கு ஒரு பதில்முயற்சி:
-----------------------------------

எழுத்து மட்டும்
இயக்கத்தெரிந்த
கோழைகளின் பட்டியலில்
இந்த முடமனதுக்கவிஞனையும்
சேர்த்துவிடுக.

நிலத்தில்
தன் வாழ்க்கையை முகம் கொண்டோட்ட
முடியாதவன் கனவுகள்
நெடு வானத்தைப் பிழிந்தேன்
நீலம் பிரிக்கத் துணிந்திருக்க?

சொந்தச் சுவாசத்துக்கு
காற்றுழுக்க அஞ்சுபவன்
இன்னொருத்தி இதயத்துக்கேன்
வீண் இரத்தோட்ட
பாய்ச்சல் ஏற்ற?

கடல்முத்தையும் வான நட்சத்திரத்தையும்
அட்சதைக்காய் எட்டிப்பார்த்த முட்டாளே,
ரோஜா அடியே முத்தமிட்டபோது என்ன,
ஏதோ வெளி வால்நட்சத்திரத்திலேயே
உன் வாசம்?
இதே நடுத்தரவர்க்கத்து
ஒட்டுச் சட்டை
ஒருபோதும் சட்டை பண்ணாது
நரகத்து இந்தியா நந்தவனத்திற்றானே?
பின் என்ன
இன்றைக்கு மட்டுமொரு
புதுப்போதிமரம்
தலைப்புத்திக்குப் பின்னாலே?

நண்பா,
கோழைகளுக்கு
வேலை கெட்டு நேரம் விட்டு
மூளை செத்த முத்தக்
காதல் தேவையில்லை;
ஒரு வஞ்சிக்கு வேளைக்கு
சிறு குவளை கஞ்சி ஊற்ற
அஞ்சி வஞ்சிக்கும்
கோழைகளுக்குக் காதல் தேவையில்லை.
ஆதலினால்,
வெறும் கவிதையும் கண்ணீரும்
மட்டுமே உன் கையிருப்பாய்
கட்டாயம் மிஞ்சும்.
இந்தா கைக்குட்டை;
இதை வைத்து
கைமாற்றாய்
இன்னொரு காதல் பண்ணாதே வீணே.
சென்று வா.

இந்தியா காதலின் பூமியோ
இல்லை காதலரின் பூமியோ
நானறியேன்...
.. ஆனால்,
இது போல,
கடற்கரை மட்டும் அமர்ந்திருந்து
காதலிக்கத் துப்பு வைத்து
கனவுகளில் நீச்சல் பண்ணி
கண்ணிமைக்கும் நேரத்திலே
"என்னை மன்னித்துவிடு"
என்று விடும்
மூடர்களின் பூமியென்று
ஆகுமென்றால்,
கவிஞரே
உம்
காவியக்காதல்
வெறும் ஒற்றைச் சொத்தைக் கத்தரிக்காய் அவசர அவியல்தான்.

இயற்கையின்
மூர்க்கத்தனமில்லாவிட்டால்,
முட்டாட்டனத்தில்
இதுவும் ஒன்று;
காதலரிடம் கவிஞரிடம்
வெற்று வீராப்பையும்
கோழைத்தனத்தையும்
காமுகரிடம் மூடரிடம்
வெறித்தனைத்தையும்
விடாப்பிடிவாததையும்
விலங்குபோட்டு
விட்டு வைத்திருக்கிறது.

வேடிக்கை!
விசித்திரம்தான்,
ஆனாலும்
விரும்பத்தகாத
வீண் வேடிக்கை!!

0பின்னூடுகை:

Post a Comment

<< Home