அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

விளக்கங்கள்

தன்னிலை முன்னிலை படர்க்கையென நின்று
பின் நிலை எந்நிலை தன்னிலை நிற்குமென்றுணர்த்தாது
படர்ந்திருக்கும் சங்கிலி வளைய விளக்கங்கள் கோர்வையுண்டு.

விளங்கச் சொன்னதைத் திருப்பிப் பெறுதற்கு, திருத்தித் தருதற்கு,
திருத்தியதிற் திருத்தம் அழுத்திச் சொல்லுதற்கு,
என் நிலை இந்நிலை, இதில் உன் நிலை எந்நிலை
பின், அந்நிலை அவர் நிலை ஆவது எவ்விடை
என்றுறுத்தி நிற்றற்கு, விளக்கங்கள்; மேலும்,
- மஞ்சட்காவிபடி பல்லழுத்தித் தேய்த்து, அது
தானே போக்கும் கறை என்றெண்ணும்-
விளக்கங்கள், விளக்கங்கள் பெறுதற்கு
விமர்சையாய் வரிசையிட்டுக் காவல்வேலி விளக்கங்கள்.

காட்சித்தொடக்கத்திலே,
"எம் கட்சி நடுக்கட்சி; எல்லார்க்கும் பொதுக்கட்சி;
உம் கட்சி, அவர் கட்சி கச்சை கட்டி எல்லாமே எம்
கட்சி;
கூடவே
அவர் கட்சி, உம் கட்சி ஒட்டி இருப்பு ஏதுமில்லை நம்
கட்சி"
என்றெடுத்து விளக்கப்போய்
இங்கு தள்ளி, அங்கு துள்ளி
ஏது நடந்துற்றது என்றறியாப்போதினிலே,
இடமாறிப்போயிருக்கும் இருப்பென்று இவ்விடைக் கட்சி.
இத்தனைக்கும் தப்பித்தீர் என்றிருமேன்; பின்னும்,
ஒன்றுண்மை ஆகிப்போம் ஊர்க்கணிப்பில்,
"உம் கட்சி, குட்டையை மேலும் குழப்பவென்று உட்புகுந்த
காய்ந்த மூன்றாம் தேங்காய்ப் பொச்சு மட்டைப் புதுக்கட்சி."

கூட்டிப் பெருக்கியதில், கழித்ததைப் பிரித்துப் பார்க்க,
கண்சுற்றிக் கண்ட இடமெல்லாம் கண்ணுருட்டி வன்மொழியாய்ச்
சொல்லியிருக்கும் வேலையற்று வெறுவாய்கள், "செக் மேற்."

விளக்கங்கள் உள்ள விளக்கங்களும் அகற்றுமென்றால்,
விளக்கங்கள் விளக்கங்களுக்குச்
சொல்லாதிருப்பதே பெரும் விளக்கமென்றால்,
விளங்கியும் விளக்கமில்லையென விறைத்திருத்தல்
விளக்கத்தின் வெளிப்படுகை வெளிச்சமென்றால்,
விளங்காமல் விளங்கியதுவாய் வீரிய வியாக்கியானம்
விளக்கியிருத்தலே விளக்கத்தின் அதி வெறி உச்சமென்றால்,
இங்குரை விளக்கம் பற்றிய இவ்விளக்கக்குறிப்பினைபோல்,
மொத்தத்தில் ஏனோ,
விளக்கம் எதற்கென்றே எனக்கிப்போ விளங்காமற் போச்சுதென்க.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home