அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

சங்கற்பம் இன்னொன்று

கடந்து போன பிறந்தநாளுக்குமொரு
சங்கற்பம் செய்திருந்திருக்கலாம் வழமைபோலவே.
போன வருடப்பிறப்பில் எண்ணிச் சிந்தை வைத்து
பின் இயலில் இட்டுப் பார்க்காமற்
போனதொரு இலக்குப்போலவே
சின்னதாய் எனக்கே சிரிப்புத்தரு
பூரிப்புஅடை சீனிப்பொய்யன்றை.
சிகரெட் பெட்டிக்கு எரிந்து போகும் சில்லறையை
சிக்கனமாய் சிறுவாய்மூடு ஒரு செப்புக் குடமிட்டுச்
'செல்' பட்டுச் சிதறிப்போனதொரு சிறு பெண்வாழ்வுக்கு
ஆண்டிறுதி எட்டிட கிள்ளி அன்பில் அனுப்பவென்று,
இறுதிப் பெட்டிக்கு, எரி கொள்ளிக்கு
இனி வரும்நாள் போவதென்று கங்கணம் கொள்,
உற்றார் அற்ற ஒண்டிக் கிழம் ஒன்று வாரவிடுமுறை
எட்டிப்பார்த்து "எப்படி சுகம்?" என்று கேட்டுவைத்துப் பார்க்கவென்று,
நாளைக் காலை தொட்டு நடைசெய் பிறன் மனையாள் காற் சலங்கை
தூரத்தே கேட்கும் காலைக்கே கை கொண்டு காது பொத்தி,
'இராம, இராம' என நாமம் சொல்லிக் காமம் முளை
கல்லிவிட்டு
வைகுந்தம் போகும் வழிக்கொரு சிறுபொற்பாதை போட்டுவைக்க,
பெயரறியா ஊரொன்றின் சிலை முகமறியாச் சாமியன்றின்
பெயருக்கு நிதம் ஒலி தரு ஒரு சிறு மணி செய்து,
"உபயம்: சமயபுரம் வாழ் சாமிக்கண்ணு மகன் சந்தானம்"
என்றிடாமல், சிறிதாய்,
'சாமிக்கு, அவர் வணங்கு சனங்களுக்கு'
என்றிட்டு ஊரெல்லாம் ஒலித்துவைக்க,
குறைந்தபட்சம் வரப்போகும் தீபாவளி, நத்தார், வேறேதும்
முதல் வரு -புது சங்கற்பம் செய் தகு- திருப்பண்டிகை தினம்
எதுவரையோ,
பிறருக்கு போக வர செய்தேன் நானும் என்று சொல்ல,
பெயருக்கென்றாற்கூட
களியாட்டத்தில் மட்டும் கடந்து போன பிறந்தநாளுக்குமொரு
சங்கற்பம் செய்திருந்திருக்கலாம் வழமைபோலவே.
கைவசம் உத்திகள் போன வருடக் காற்பங்காய்ப் போனாலும்
பொய் பிறந்து பிராவகமாய் பெருக்கெடுத்து ஓடாதோ,
அலுவலகக் கா(¨)லப்பிந்தலுக்கு
நாளுக்கொன்று ஆக்கிச்சொல்வதென,
மனைவிக்கு மாதப்படி, காற்படி குறைந்ததற்குக்
குறையாமற் சொல் நிறைவில்லாக் காரணமாய்,
செவ்வனே என்னையே ஏமாற்றப் புதுப்பொய்கள் ஏதேனும்,
சுதந்திரத்திற்கு செக்கிழுத்த மனிதன் தன் பிறந்த தினத்தே.
இவ்வாண்டும் விருந்து, விழா முடிந்து
விழுந்த இடம் மறந்து, கிடந்து
மறுநாட் காலை எழுகையிலே மட்டுமே
சங்கற்பம் செய் முதன்நாள் வேளை மறந்தது,
போதைபோய், தலையிடிகூடத் தெரிகையிலே,
-இனி, சங்கற்பம் திருநாளன்றே செய்தல் என்பதே
இக் கடந்ததினச் சங்கற்பம்- என்றெடுக்க,
காலம்காலமாய் இச் சங்கற்பச்சங்கதி கண்ட
மனையாட்டி சலித்துச் சொன்னாள்,
"போகட்டும் பிராணநாதா; போம்வழிக்கு,
புண்ணியம் உமக்கு ஒரு தசக்கோடி;
பேசாமல், இச்சரிவரா சங்கற்பமெல்லாம்
இனி எடுத்துக் கிழித்தல் இல்லையென
சிறிதாய் ஒரு சங்கற்பம்
எடுத்தால் என்ன இந்நாளில், இல்லை,
இனிவருமொரு நன்நாளில்?"

-செப்ரம்பர் 05, 97

0பின்னூடுகை:

Post a Comment

<< Home