அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

இராம இராஜியத்தின் பாதூஷாக்கள்

இராம இராஜியத்தில்,
இடிகருவிகளும்
சுடுகலங்களும்
பாதுகைக்குப் பதில் பட்டாபிஷேகம்
பண்ணப்பட்டனவாம்.

கற்பழிப்பு என்பது
கற்றுத்தரா
குடிசைக்கைத்தொழில் ஆனது.

பெண் விடுதலை என்பது
திரைப்படத் திரௌபதிகள் துகில் உரிதலில் மட்டுமே;
அவ்வப்போது,
பஞ்சாயத்து மரங்களுக்கும் அந்தக் காட்சிகள் கிடைக்கக்கூடும்.
ஆனால், காணாமற்போனவர்கள் கண்ணன்கள் மட்டுமே.
தப்பில்லை;
இது இராம இராஜ்ஜியம்.
கண்ணனுக்கென்ன வேலை?
சீதைகள் மட்டுமே தீப்பிடித்து வேகலாம்.

தலைவர்கள்,
அஹிம்சை பேச மேடையேற,
தொண்டர்கள்,
குண்டும் கோலியும் கைகொண்டு
சுற்றிக் காத்துநின்றார்கள்,
காந்தீயம்.

சட்டம்,
சட்டாம்பிள்ளைகளின்
ஓட்டைச் சட்டைப்பைகள்நின்று,
சத்தம்போடாமல்,
வழுக்கி வழுக்கிவிழுந்தன
வேண்டப்பட்டவர்கள் வீட்டு வாயிற்படிகளில்.

மந்திரிகள்,
மாலை போட்டுச் சோடா குடிக்க,
கைவிரல் தூக்கிச் சந்திரனைச் சாட,
சென்ற நூற்றாண்டில் நெல் புழுக்கிய
எலிப்புழுக்கைக்கதை சொல்ல,
நாட்டில் முட்டாள் மன்னர்களும்
மேலும் கைதட்டினார்கள்.
வீரர்கள்,
இடித்து வெல்லப்போவது சொல்ல,
மாற்றுச்சூரர்கள்,
கொளுத்தி முடிக்கப்போவது சொல்ல,
சொந்தக்கைதட்டிற்
சத்தம்போடாமற் சுருண்டுபோனது,
இரண்டுநாட்பட்டினிவயிறு
வாய்வழி விட்ட ஏப்பம்.

வீதித் தெரு மூலைகளில்,
தம் மதங்களை,
அப்பத்துண்டுகளுக்கும்
வேற்று மதத்திற்கும்
விற்று வீடேகினர்,
கூட்டம் முடிந்து திரும்புகையில்,
கொஞ்சம் பசி பொறுக்காதோர்.

தின்னக்கிடைத்தவர்கள்,
தினவெடுத்து,
தீயெடுத்து,
கண்ட குடிசை, நெற்குவியல்
எல்லாம் கொளுத்தி வைத்தனர்.

எரிந்து செத்துப்போனவர் நினைவாக,
இன்னும் கொளுத்தினர்,
குடிலும் குப்பமும்.
அணுப்பிளவுச்
சங்கிலித்தொடர்த்தாக்கம்,
அரை வாழ்வுக்காலம், கதிர்ப்பிரிகை
எல்லாம் கும்பலாய் நிகழ்த்துவர்,
மனிதர்.

ரொட்டித்துண்டுத் துகளுக்கு
நாட்டு மக்கள்
கோவணம் விட்டுப்போனதும் மறந்து
பிக்கல்பிடுங்குப்படுகையிலே
மேன்மக்கள் கட்டியதை இடித்து
வேறு புதுக்கல்போட்டு
இன்னொன்று
கட்டி மகிழ்ந்திருந்தனராம்.

முழுச்சடை முனிவர்களும்
மொட்டைக்குல்லா முல்லாக்களும்
தம் மனத்து இஷ்டப்படி
புதுச்சட்டம்போட்டு
சப்பணம் கட்டிக் குந்தினர்,
மக்கள் தலையிலே.
புதுச்சட்டத்தின் கள்வெறியில்,
மக்கள் கண்கள் புகைந்தன;
கால்கள் புதைசேற்றில் அழுந்தின.
கைகள் மட்டும் திருகப்
பிறர் கழுத்துகள் தேடி அலைந்தன.

தனிப்பட்ட மனிதர்கள்,
நசுக்குண்டு இறந்தார்,
முட்டாள் முல்லாக்கள் காலடியில்,
மூர்க்க முனிபுங்கவர் கைப்பிடியில்.

சொந்தச் சுகத்திற்கு,
பிறர் வாழ்க்கை துண்டு
துண்டு போட்டுவிற்றார்கள்,
இறைதூதர்களின் பெயர்கள்
தூண்டில் இரையாய்ப் போட்டு.

ஆக,
கொல் என்பதில் மட்டுமே
குறி வைத்து கூட்டமாய்
ஒன்றிருந்தார் உலகத்தார்.


"ஆடுவோமே,
பள்ளுப்பாடுவோமே
ஆனந்தச்சுதந்திரம் அடைந்து விட்டோமென்று."

0பின்னூடுகை:

Post a Comment

<< Home