அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

தனிக்குயிலின் மழைக்கிளை இரவு

சிறு தனிக் குயிலின்
ஒரு மழைக்கிளை இரவு
இத்தோடு முடிகிறது.....

காலைகள்,
கனவைத் தின்று மட்டும்
காலம் நகர்த்தலாம்
என்று சொல்லக்கூடிய
இனிமையான பொழுதுகள்
அல்ல,
இரவுகள் போல்.

கனவுகளைக் கண்தோய்த்திருந்தாலும்
கூவிக்கிடக்கும்
வேப்பமரங்களின்
வளை
விற்
கிளைகளின்
வாசல்களில்
வந்து
விழக்
கூடியனவல்ல
சோற்றுப்பருக்கையும்
மண்புழுவும்
என்று,
குயில்களுக்கு,
-அதுவும், ஒற்றைக்குயில்களுக்கு
நன்றாகத் தெரியும்.


இனிய கீதங்கள்
இசைக்க,
மழையும்
மரக்கிளையும்
மயக்கு மாலைகளும்
மதுர இரவுகளும்
கூடினாலும்
முட்டை இட்டுவைக்கக்கூட,
ஓர் இரவற்கூட்டுக்கு
இளைக்காத
தேடுதல்
தேவை என்று
ஓர் அடிமுட்டாள் குயிலுக்கும் தெரியும்.

சாரையும் நாகமும்
ஒன்றை ஒன்று பின்னுதல்போல்,
தனிமையும் வெறுமையும்
தூவி,
மாலைகள் மீள வரும்
கூவ;
இரவுகள் அதைத் தொடரும்,
இன்னொரு காலை எழுதலுக்காய்.

'98 Dec. 04, Friday 05:58 CST

0பின்னூடுகை:

Post a Comment

<< Home