அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

இந்தப்பொங்கலுக்கு

உப்பலாய்க் காற்று மட்டும்தான்
உள்ளே ஒய்யார பலூன்களுக்கு;
நிலத்தைத் தட்டித் தொட்டுப் பறக்கையிலும்
இறக்கை மட்டும் கட்டி
மேகத்தில் மிதக்கும்
இல்லாத இரட்டைக் கொம்பு.
உலகை மேற்புறமாய்
ஒட்டிக் கொள்ளாமல்
எட்டியிருந்து குட்டித்தீவாய்ப்
பார்ப்பதாய் ஒரு விட்டேறி எண்ணம்.

வாய்வால்நூலைக் கடாசலாம் என்று உட்காற்றுக்குக் கருத்து.
சில,
பொருமிப் பிரித்து வாய் திறக்கும்.
பெரிதாய்ப் பீற்றிப்
புகழ்ப்போதை கலையமுன்
அலைந்தன கால்களில்.
மீதி,
பையன் கைச் சின்னச் சொற்குண்டூசி குத்தும்;
வெடித்தனர் மனிதர்கள்;
தரையில் வாரிக்கொட்டிய
வண்ணத் துகள்கள்.

அடக்கம் பண்ண
நிலக்குப்பைகளைக் கூட்டுகையில்,
மேலே உப்பலாய்க் காற்றோடு ஓடும்
மேலும் சில புது ஒய்யார ஊர்வலங்கள்.

விடிந்தால் பொங்கல்.
இந்தமுறை,
வெளி முற்றத்துப்பானையிற் பொங்காமல்,
உள்ளே வீண் குப்பை தட்டி, வீடு கழுவி
சின்னச்சிட்டி வெளிச்சம் மட்டும்
ஒரு சொட்டுத்திரியிற் பற்றவைத்து
சும்மா சப்பணம் கொட்டியிருக்க எண்ணம்
முற்றாய் நாளுக்கும்
சிறு துளிச்சத்தமும் எழுப்பாது.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home