அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

ஓவியம்

சூரிய அஸ்தமனம் பறக்கும் பட்சி
வரையவந்தேன்.
ப்ஸ்ஸ்ஸ்......
பச்சைமை கொட்டிற்றே பக்கத்துப் பலகையில்;
ஆயினும், அ·தழகு
அமேஸன் மழைக்காடதுபோல்.
விட்டு,
மாலைச்சிவப்புக்குத் தொட்டதுவும்
சிதறி, அதன்மேல்,
பூத்திருக்கும் வைகாசிப்பூக்களென.
போகட்டும் என்றே,
தூரிகை வான்நீலன் தோய்த்தெடுக்க,
அது மீளப்
பலகை வண்ணத்தே தடுமாறி,
புது நீளப்
போட்டுவிட்ட சிறுநீல ஆற்றோட்டம்.
சலித்துப்போய்,
செம்மஞ்சட்பச்சையென,
அடிவானமிடத் துழாவி........
.........சே, இதுகூடச் சிதறல் முத்தமிட்டு,
அடவியெங்கும் பரவிப்போன
அழகுவர்ணக்கிளிகளென,
ஹே...இதனழகு....
........இயல்பாய்த் தாந்தோன்றிப்பேரெழில் இயற்கை.
இதுபோதும் எனக்கு.
இனி,
யாருக்கு வேண்டும்
அந்த
அஸ்தமனப்பட்சி?

-'97 முன் வைகாசியின் ஒரு மில்வோக்கிச் சூரியமாலை

1பின்னூடுகை:

Post a Comment

<< Home