அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

ஒரு வீடு, சிறு குடும்பம், சில பல்லிகள்*

உலகத்திற்
குழந்தைகள் பெற்றிரா
ஆதி காலத்தில்
வீட்டுக்கு
ஓர் அப்பாவும் அம்மாவும்
குத்தகைக்குக் குடிவந்தார்கள்.
அப்போது,
ஒட்டடைக்குப் பின்னாலும்
ஒளித்துக் கொண்டு,
ஓரிரு "நச் நச்" சுவரொட்டு
ஒல்லிப்பல்லிகள் இருந்ததா
என்றவர்க்கும் தெரியாது;
எவர்க்குமே தெரியாது.
அப்பா கவனம்,
வீட்டுச் சொத்துக்காரனை அடித்துக் கலைப்பதில்;
அம்மா குறியோ,
அடுக்களையிற் குந்துவதில்,
குட்டிகளைப் பெற்றுத்தள்ளுவதில்.


பல்லிகளைப்பற்றிப் பச்சையாய்ச் சில வார்த்தைகள்:
பல்லிகள் ஒன்றுமே
செத்த சாரைப்பாம்பு
கூர்நகவிரல் ஒடிந்த கிழட்டுவேதாளம் வகையாறா
வெற்று அப்பாவிப் பொருள் அல்லத்தான்.
ஆனாலும்,
மனிதனுக்கென்று குறி
தப்பாமல் வைத்துக் கொல்லும்
வகைப்படு விலங்கினமும் அல்ல.

எப்போதாவது
உணராது அவாப்பட்டு
ஊரார் எச்சில் இலையிற் துள்ளிவிழும்;
அவதிப்பட்டு அதுபோனால்,
அடுத்தகணம் புரண்டெழுந்து,
எட்டி இரண்டு எட்டுக்காற் பூச்சி பிடித்து,
எச்சிலோடு கூட்டி முழுங்கும்.
ஏப்பம் விடுமோ, நானறியேன்.
ஆனால், பிற்பாடு எச்சரிக்கையாய் எங்கேனும் பதுங்கும்.
மனித அப்பாவைப் போல தன் மறைவிடத்திற்கு
இன்னொரு அப்பாவிப் பல்லிக்கு சுற்றி வாலால்
சுள்ளென்று ஓரிரு வலிதரு சாட்டை அடிக்கலாம்; கொல்லலாம்.
அது நம் கதைக்கு, கருத்திற்கு, கற்பனைக்கு
அப்பாற்பட்டதொரு நச்சிட்ட "நச்சு நச்சு"க் கதை.
அதைக் வேண்டாக் கொழுப்புப்
பால்மேலாடைப் பட்டையாய் முற்றாக
ஒதுக்கித்தள்ளலாம்.
இத்தனைதான்
இந்தவீட்டிலே இருக்கும் ஏழெட்டுச்சுவர்ப்
பல்லிக்கதையெல்லாம்
கிள்ளிவைத்தால் உங்களுக்கு.

இப்போது,
அப்பாஅம்மாவின் குட்டிகள் எல்லாமே
மூக்காலே ஓலமிட்டு, மூத்திரம் விட்டு,
உருண்டு, தவழ்ந்து, எழுந்து நடந்து,
தம்முள்ளே கருத்து ஒட்டிவெட்டிப் பேசும்
நிலைக்கு ஆகிவிட்ட ஒரு காலம்.
பல்லிக்குடும்பம் மட்டுமென்ன
வெறும் சொள்ளைப் பலாக்காயா?
அள்ளிச் சொரிந்தது இயற்கை அதற்கும் அப்படியே.

சமையலறையில்,
ஓர் பேரிளம் பல்லி
தான் வைத்த வெண் சுடுசோற்றிற்
சொக்கிப்போய்க் குதித்து
குப்புற விழுந்து வெந்து
கோவிந்தா என்று சொல்லமுன்னர்
சொர்க்கம் போனதென்று
சாதம், வீட்டு வெளி வடிகால்வாய்
ஓரம் கொட்டிக் குமுறினாள்
அம்மா.
அப்பா சொன்னார்,
"போகட்டும் விடு;
ஒருபொழுதுச்சோறு;
அவை தின்றழித்த
சிலந்தி, பூச்சி, பிற கொடும்பூரான்
வேலைக்கான கூலியென்று
கொண்டிருப்பேன்.
ஓலமிடாதே. ஊற்று
கொஞ்சம் உவப்பாய்க் குடிக்க
ஒரு கோப்பை பாயாசம்."

குழந்தைகள்
இவ்வண்ணம்
அப்பா பார்வையில், பதிலில்
ஜனநாயகப்புள்ளிவிபரம் கற்றார்.
பள்ளி ஆசிரியைக்கு,
அவர் பதைத்துத் துள்ளியெழுந்திருக்க
உலகத்தில் நல்ல உயிரினம்
பல்லியென்று சொல்லிவைத்தார்;
பல்லி-மனித கூட்டிருப்புக்குப்
பாலம் அமைக்கப் பள்ளியிலே
ஒரு மெல்லிய கூட்டுறவுக் கழகம் கண்டார்.

பின்னை அப்பாவுக்குச்
ஒரு பெண்பித்துப் பிடித்ததென்றார், மற்றோர்;
கூடவே ஊரார் மண்வீடு
தன் பெயரில் மாற்றிவைக்கச் சிறு
பூமிப்பித்தும் பொங்கியது
புதுவீட்டின் முன்னிட்ட பொங்கல் என்பதுபோல்
பிறர் கண்டார்.

இன்னொருநாள்,
இதுவரை நாள்
ஊர் வாய்க்காய் ஒளித்திருந்த
கவலையெல்லாம் ஒன்றாய்
அருவி வரு பெரு வாய்க்காலாய்க்
வாயாற் கொட்டி
மனம் வெம்பு அம்மா
புதுப்பெண் பற்றிக் கேட்டதற்கு,
மறுபக்கம் பார்த்து, அடக்கமுடியா விடலைப்
போக்காய்ச் சுவரில் நின்ற
ஒரு பொட்டைக் கண் பல்லியை
நுனிவிரலாற் சுட்டித் தட்டி,
மல்யுத்தச்செயல்போலே
நிலம் மல்லாக்காய் விழுத்தி,
ஒரு தேய்ந்திரு பழஞ்செருப்பு எடுத்திருந்து,
அது செத்தபின்னும்,
சுற்றிச்சுற்றி அடித்தார்
சுவர்மூலைக்குள் அப்பா.
பின்னொரு
வாய்மூல வேதனைபொதி
வெகுளி அறிக்கையும் விடுத்தார்:
"இத்தனைநாள் பார்த்தேன்;
இதன் கொடு செயலுக்கோர் எல்லையில்லை;
எத்தனை இளம் சிலந்தி இறந்திருக்கும் இதன் வாயால்?
எத்தனை பானை சோறு எறிந்திருப்பாய் இதன் செயலால்?
இது பண்ணியது அத்த்னையும் நாசம்.
இனியும் பார்த்தலில் ஏதும் விவேகம் இல்லை.
என் மனப்பொறுமை விட்டுக்கொடுத்தலை
வெறும் வினையற்று இருத்தலென
வெட்டித்தனமாக எண்ணிவைக்கவிடமாட்டேன்."
அந்த முட்டாட்பல்லி இன்றைக்குத்தான்
முழுதாய் வெளிக்கு மூஞ்சி நீட்டிக்கிடந்ததோ, இல்லை
முழுதாய் அதுதான் சிலந்தி எல்லாம் முழுங்கியதோ?
யார் அறிவார்?
"அப்பாதான்" என்றார் குழந்தைகள் சுருதி பிசகித் தப்பி
ஒலிக்காமல்.
இத்தனையுடன்,
இன்றுமுதல், எத்தகுபல்லி
என்றாலும் அத்தனையும்
அழிந்துபோகும்வரை
அடித்து வைக்க ஆணையிட்டார்.

தேள் கொட்டியது திருடனுக்கு;
சோற்றைக் கொட்டும் அம்மாக்குச்
சொல்ல ஒரு வழியில்லை. கூடவே,
நேரம் தப்பி சுவருக்கு வந்த பல்லிக்கு
செத்தபின்னும் சபித்தலல்லால் வேறறியாள்
வினைப் படுத்தலேதும்.

குழம்பிப்போயிருந்த
குழந்தைகள்
புதுவண்ண
ஜனநாயகப்புள்ளிவிபரம்
அடித்தழித்துக் கற்றார்.
பள்ளி ஆசிரியைக்கு,
அவர் பதைத்து
இன்னொரு தரம் துள்ளியெழுந்திருக்க
உலகத்தில் நல்ல உயிரினம்
சிலந்தியென்று சொல்லிக்
கூச்சல் வைத்தார்;
பல்லியின் பயங்கரவாதத்திற்கு
எதிராய் பள்ளிக்கூடமெல்லாம்
வாயிற் கொள்ளியுடன்
கொள்கை பரப்பிநின்றார்.

ஆயின், என்ன?
பல்லிகள் பானையில் இனியும் விழலாம்;
அப்பா பாசம், பூமி, பெண் மேல்
இன்று போல் என்றும் வளரலாம்.
அம்மா அடுக்களையில் பானையிற்
பல்லியா என்றே பார்த்தே பொழுது கழித்துக் கிடக்கலாம்.
பிள்ளைகள் பல்லிகள் போலப் பெருத்தே வளரலாம்;
அப்பாக்கள் போலவும் மண் பெண் பார்வையும்
தம் விழுதுதாக்க விரைவிற் பழகலாம்.
பல்லிகளை பாங்கர்களாய், பகைவர்களாய்
இன்றைய பிள்ளை அப்பாக்கள்,
தம் நாளைய அப்பா பிள்ளைகளுக்குப் பழக்கலாம்.

காலம் கறங்கும்.
காரியங்களும் அதுபோலவே.
ஆயினும் என்ன?
காரணம் மட்டும் சும்மா சோம்பிக் கிடக்கும்
கொல்லைக்குட் சுற்ற
முளையிற் கட்டிவைத்த முடக்கொம்பு மாடொன்றென்றே;
"முதலில் வாழவேண்டும் சொல்லில் ஜனநாயகம்; பிறகுதான்,
பல்லியா பூச்சியா பகைவர் என்பதெல்லாம்."

-'98 ஆவணி 27 புதன், 14:25 CST
* (எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது)

0பின்னூடுகை:

Post a Comment

<< Home